பவா செல்லத்துரை ஒரு வலதுசாரி - சகாய டர்சியூஸ் பீ


பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பவா செல்லத்துரையின் கல்வி குறித்தான கருத்துக்கள் குறித்து பலரும் விமர்சித்து வருகிறார்கள். அவர் அப்படி கூறி இருப்பது குறித்து எனக்கு ஒன்றும் வியப்பில்லை. ஏனென்றால் அவர் ஒரு பிற்போக்குவாதி வலதுசாரி சிந்தனை கொண்டவர் என்பதுதான் அவரைப் பற்றிய எனது பார்வை.

பவா செல்லத்துரை என்பவர் ஒரு முற்போக்கு எழுத்தாளர் ஒரு சிறந்த கதை சொல்லி என்று 3 ~ 4 மாதங்களுக்கு முன்புதான் அறியக்கேட்டேன். அதன் பின்புதான்  அவரைப்பற்றி சில தேடல்கள், அதில் அறியவந்தது அவர் முற்போக்கான  எழுத்தாளர் எல்லாம் இல்லை, புளிச்ச மாவு புகழ் ஜெயமோகனின் ஊதுகுழல் என்பது புரிய வந்தது, அவர் பெரும்பாலும் சொல்லி வருவது ஜெயமோகன் கதைகள்தான்.  ஜெயமோகன்,  தான் ஆர்.எஸ்.எஸ்-இல் தீவிர செயல்பாட்டாளராக இருந்தேன் என்று அவரே கூறி இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட   ஜெயமோகனின் ஊதுகுழல் எப்படி இருப்பார்? அவரிடம் இருந்து முற்போக்கான கருத்துக்கள் வருகிறது என்று சொல்வதுதான் ஆச்சரியம். 

ஒரு பதின்மவயது உடையவருக்கு கல்வி பற்றிய புரிதல் குறைவாகவே இருக்கும், தற்போதைய வாட்சப் வதந்திகளும்; பெட்டிக்கடை வை என்று அறிவுரை கூறும் சாணக்கியாக்களும்; மேடைகளில் ஆடு மாடு மேய்ப்பது அரசு தொழில், சாணி அள்ளினால் இவ்வளவு சம்பளம், படிப்பு வராமல் ஊர் சுற்றுகிறாயா, நீதான் சுற்றுலா வருபவர்களுக்கு வழிகாட்டி அந்த வேலை உனக்கு,  ஜீ டிவி, விஜய் டிவி பாடல் போட்டி நிகழ்ச்சி பாருங்கள், படிக்காதவர்கள் கூட  தனித்திறமையினால் பெரிய பாடகராகி முன்னேறி செல்கிறார்கள், காமராஜர் படித்தாரா இல்லை சச்சின் படித்தாரா என்று கதைகதையாய் அளந்துவிடும் தற்குறிகளின் அறிவற்ற பேச்சுக்கள்; ஆகியவற்றின் தாக்கம்,  இந்த சமூகத்தில் பதின்ம வயதுடையவர்களின் கல்வி பற்றிய புரிதலில் எத்தகைய விளைவை ஏற்படுத்தி இருக்கிறது என்பதின்  வெளிப்பாடாகவே ஜோவிகாவின் பேச்சைப் பார்க்கிறேன்.

ஆனால் தன்னை ஒரு எழுத்தாளன், ஒரு மேதாவி என்று சொல்லிக் கொள்ளும் பவா அவர்கள், படிக்காதவர்களுக்கு பாலிடாயில் கொடுத்து விடலாமா? என்று தற்குறித்தனமான வாதத்தை வைக்கிறார், படிக்காதவர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு கல்வி கொடுக்க வேண்டும் என்பது தானே சரியாக இருக்க முடியும். மேலும் சொல்கிறார் 5000 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களை இவர் சந்தித்து விட்டாராம் யாருக்குமே திறமை இல்லையாம். என்ன ஒரு அறிவீனமான அகங்காரமான பேச்சு. முதலில் ஆராய்ச்சி படிப்பு பற்றி இவருக்கு என்ன தெறியும்? எத்தனை ஆராய்ச்சி கட்டுரைகளை இவர் வெளியிட்டு உள்ளார்? அல்லது அந்த 5000 பேரின் ஆராய்ச்சிகளில் இவர் புலமை பெற்றவரா? ஒன்றும் இல்லை, இது  வலது சாரிகளுக்கே உரித்தான; தான் என்கின்ற அகந்தை.  இந்த நிகழ்ச்சியின் வழியே பவா செல்லத்துரையின் உண்மை முகம் வெளிப்பட்டிருப்பது குறித்து உண்மையிலேயே நமக்கு மகிழ்ச்சி தான். 

இந்தியாவிலேயே கல்வியில், மருத்துவ கட்டமைப்பில்  சிறந்து விளங்குவது தமிழ்நாடு;  அதனால் தான் இங்கு ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க வின் எந்த ஒரு திட்டங்களும் எடுபடாமலேயே போகிறது அல்லது எதிர்ப்பு  அதிகமாக இருக்கிறது. காரணம் நம் கல்விதான். அதை நம்மிடம் இருந்து மீண்டும் பறிப்பதற்காக, படித்தால் என்ன பயன்? படிக்காதவர்கள் யாரும் சாதிக்கவில்லையா? என்று பல முனைகளில் இருந்து பேசிப் பேசி;  உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி;  நம்மை நம்ப வைத்து; மீண்டும் நம்மை; நமது குலத்தொழிலை செய்ய வைக்கும் முயற்சிதான் நடைபெற்றுவருகிறது.  அதை செயல்படுத்த துணை போகிறார்கள் பவா செல்லத்துரை, சீமான் போன்றவர்கள். 

ஒருகாலத்தில் அவாக்கள் மட்டுமே கோலேச்சி வந்த, பொறியியல், மருத்துவத்துறையில் இன்று விளிம்புநிலை  மக்களும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அதற்கு நீட் போன்ற கட்டுப்பாடுகள் அதை நீக்கு என்று சொன்னால் எல்லோரும்  டாக்டர் தான் படிக்கனுமா? வேறு எந்த படிப்பும் இல்லையா? என்று கேலி செய்வது. மேலும் "இப்போ எல்லாம் என்ஜினீயரிங் படிப்பிற்கே மதிப்பில்லாமல் போச்சு; தடுக்கி விழுந்தால் 100 என்ஜினீயர்கள்" என்று கேலிகள் கிண்டல்கள். அதை நம்மவர்களையே பேச வைத்திருப்பதுதான் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க வின் வெற்றி. 

தற்போது புதிய கல்வி கொள்கை, விஸ்வகர்மா யோஜனா திட்டம், 3,6,8,10,11,12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு, பத்து இலட்சம் மக்களுக்கு 100 மருத்துவ இருக்கைகள் மட்டுமே (10,000 மக்களுக்கு ஒரு மருத்துவர் ஆனால் தற்போது தமிழ்நாட்டில் 1000 மக்களுக்கு 4 மருத்துவர்கள் இருக்கிறார்கள்), தமிழ்நாட்டில் புதிய மருத்துவ கல்லுரிகளுக்கு அனுமதி இல்லை, போன்றவை தமிழ் நாட்டை குறிவைத்தே தீட்டப்பட்ட திட்டங்களாகவே தெரிகிறது. 

சதி உணர்ந்து விழிப்புணர்வுடன்  இருப்போம், கல்வியின் முக்கியத்துவம் அறிவோம், நம் எதிர்கால சந்ததிகள் சுயமரியாதையுடன் சிறப்பாக வாழ கல்வி எனும் ஆயுதம் கொடுப்போம்.

Previous Post Next Post

نموذج الاتصال