கொரிய தமிழ்ச் சங்க விருதுகள் பெற்றோர் விவரம்


கொரிய தமிழ்ச் சங்கத்தின் கலை இலக்கியச் சந்திப்பு மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியானது திட்டமிட்டபடி, திருவள்ளுவர் ஆண்டு 2054, ஐப்பசித் திங்கள் 12- ஆம் நாள் (29 அக்டோபர் 2023) ஞாயிறன்று தென்கொரியா, சொங்னம், கச்சான் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

அதன்முறையே தமிழ்நாடு உட்பட இந்திய மற்றும் உலகளாவிய அளவில் 50 பரிந்துரைகள் அடங்கிய விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு, மூத்த சங்க நிர்வாகிகளைக் கொண்ட செயற்குழுவினால் ஆய்வு செய்யப்பட்டு 19 வெற்றியாளர்களை (இரண்டு சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட) தேர்வுக்குழு வெளியிட்டது. அதன் அடிப்படையில் தத்தமது துறையில் சிறந்த பங்களிப்பை செய்தவர்களுக்கு கொரிய தமிழ்ச் சங்கத்தின் சார்பில் விருது வழங்கப்படுகிறது. 

மேலும் இவ்விழாவிற்கு, தாய் நாட்டிலிருந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்து, சிந்தனையைத் தூண்டும் எழுச்சிமிக்க நல்லதொரு உரையினைத் தந்த, பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய, திருமிகு.கோ.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் (பணி நிறைவு) அவர்களுக்கு "உலகின் தமிழன்" என்ற விருதினை வழங்கி கொரிய தமிழ்ச் சங்கம் சிறப்பித்தது. தமிழரின் கலாச்சாரத்தை உலக அளவில் மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்புகள் ஆகியவற்றைப்  போற்றிப் பாராட்டியும் அங்கீகரித்தும் "உலகின் தமிழன்" என்ற விருது வழங்கப்பட்டது.  

 மற்றோரு சிறப்பு அழைப்பாளராக நிகழ்ச்சிக்கு வர பெரிதும் முயற்சி செய்து, பின்னர் சில தடங்கல்களினால் வர இயலாத மதிப்பிற்குரிய  ஊடகவியலாளர் திருமிகு. கோபிநாத் அவர்களுக்கு "தமிழ் ஊடகச்செம்மல்" என்ற விருதினை வழங்கி கொரிய தமிழ்ச் சங்கம் சிறப்பித்தது. (அவ்விருதை நம் சங்க உறுப்பினர் வாயிலாக அவருக்கு வழங்கப்படும்) ஊடகத்துறையில் சிறந்த முன்மாதிரியான பத்திரிகையாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என அவர் ஆற்றிய பங்களிப்புகள் மற்றும் தமிழின் மீது கொண்ட அன்பால் எழுத்தாளர், ஊக்கமளிக்கும் பேச்சாளர் என அவரின் பன்முகத்தன்மையினை மனப்பூர்வமாக பாராட்டியும் அங்கீகரித்தும் "தமிழ் ஊடகச்செம்மல்" என்ற விருது வழங்கப்பட்டது.

மேலும் இம்முறை கொரியாவில் பணியாற்றும்/வாழ்ந்துவரும் தமிழ் மக்கள், மூன்று முக்கியத் துறையில் விருது வென்றனர். முறையே முனைவர். யுவராஜ் ஆல்தொரை, முனைவர். குருசாமி ராமன், முனைவர். சோனைமுத்து மோகன்தாஸ், முனைவர். சிவசங்கரன் அய்யாறு, மற்றும் முனைவர். க. பத்ரி நாராயணன் ஆகியோர் 'சிறந்த அறிவியல் பங்களிப்பிற்க்கான’ விருதினை வென்றார்கள். விருது பெற்ற அனைவருக்கும், கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ் ஆகியவை வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. சிறந்த தொழில் முனைவோர் சாதனைகளுக்காக முனைவர். ஜெகதீஸ் குமார் அழகரசன் அவர்களுக்கு ‘சிறந்த தொழில் தொடங்குநர்’ விருது வழங்கப்பட்டது. மேலும், கடந்த சில ஆண்டுகளில் கொரியாவில் நடைபெற்ற பல மட்டைப்பந்து போட்டிகளில் வாகை சூடியமைக்காகவும் உடல்நலன்சார் விளையாட்டுகளில் சிறப்பாக செயற்பட்டமைக்காக 'சிறந்த விளையாட்டு அணிக்கான' விருதை குன்சான் குழந்தைகள் அணி வென்றது.


Previous Post Next Post

نموذج الاتصال