ஜல்லிக்கட்டு வரலாறும் போராட்டமும் 2 - ஆதனூர் சோழன்




 2017 செப்டம்பர் மாதம் முதல்வர் ஜெயலலிதா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை குறித்த தகவல்கள் மர்மமாகவே இருந்தன. சுமார் 80 நாட்களுக்கு மேல் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தார். டிசம்பர் 5ம் தேதி அவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 

இந்த இடைப்பட்ட காலத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் ஜல்லிக்கட்டு சம்பந்தமான போராட்டங்களை நடத்த முடியவில்லை. ஜெயலலிதாவின் உடல் அடக்கம் முடிந்த சில நாட்களில் ஜல்லிக்கட்டு தொடர்பான செய்திகள் மீண்டும் முக்கியத்துவம் பெறத்தொடங்கின. 

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த ஜல்லிக்கட்டு வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது. நல்ல தீர்ப்பு வரும் என்று பாஜக தலைவர்கள் அடிக்கடி கூறிவந்தார்கள். ஆனால் ஜல்லிக்கட்டிற்கான நாள் நெருங்கிய நிலையில் தீர்ப்பை தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. 2017லிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்பது சந்தேகமாகவே இருந்தது. 

இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றுவிடாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநில காவல்துறைத் தலைவருக்கு பீட்டா அமைப்பு நோட்டீஸ் அனுப்பியது. எனவே தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் போலீஸ் படை குவிக்கப்பட்டது. வாடிவாசல்கள் அடைக்கப்பட்டன. 

ஜல்லிக்கட்டு நடக்காது என்பது உறுதியானவுடன் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்ட மனநிலைக்குத் தள்ளப்பட்டனர். பொங்கல் தினத்திற்கு மறுநாள் மதுரை மாவட்டம் பாலமேட்டிலும் அதற்கு மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும். 

ஆனால் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் காளைகளை தங்கள் இஷ்டத்திற்கு அவிழ்த்துவிட்டு தடையை மீறினர். பாலமேட்டில் போலீஸ் பாதுகாப்பையும் மீறி சில காளைகள் அவிழ்த்துவிடப் பட்டன. 

ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் மையப் புள்ளியாக உலகம் முழுவதும் அறியப்பட்ட அலங்காநல்லூரில் பதட்டம் நிலவியது. 2017 ஜனவரி 16ம் தேதி மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் விடிந்தது. 

அலங்காநல்லூருக்கு செல்லும் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. ஆனால் இதை எதிர்பார்த்து முதல்நாளே கிராமப் பகுதிகளுக்குள் இளைஞர்கள் நுழைந்துவிட்டனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் தினத்தன்று காலை அலங்காநல்லூர் கிராமத்தின் கோவில் காளைகள் அழைத்துவரப்பட்டன. காளைகளுக்கு பூஜை முடித்தவுடன் திடீரென கயிறோடு மாடுகளை விரட்டிவிட்டனர். 

கூடியிருந்த இளைஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் போலீஸாரை உசார்படுத்தியது. ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த நிலையில் அவர்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. 

இந்த நிகழ்வுகளை மீடியாக்கள் நேரலை செய்யத் தொடங்கின. இது மேலும் இளைஞர்களை அலங்காநல்லூர் நோக்கி இழுத்துவர உதவியாக அமைந்தது. போக்குவரத்து வசதிகள் முற்றிலும் தடுக்கப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து குழுக்களாக அலங்காநல்லூரை நோக்கி நடந்தே வரத்தொடங்கினர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான முழக்கங்களையும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினார்கள். 

ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு எதிரான கார்ப்பரேட் சதிகளையும் அந்த சதிகளுக்கு துணையாக இருக்கும் பீட்டா அமைப்பையும் இளைஞர்கள் அம்பலப்படுத்தினார்கள். 

இரவு வரை கூட்டம் குறையவில்லை. ஆனால் அன்று நள்ளிரவுக்குப் பிறகும் வாடிவாசல் அருகே அமர்ந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் வரை அவசரச்சட்டம் பிறப்பிக்கும்வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்தனர். 

அதிகாலை வரையிலும் இந்த போராட்டம் நீடித்தது. இதையடுத்து போராட்டத்தைத் தொடர்ந்த சுமார் 100 மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். 

இளைஞர்கள் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்ட செய்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் வேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக இணையத் தொடங்கினர். சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தன்னெழுச்சியாகத் திரண்டனர். கைது செய்யப்பட்ட மாணவர்களையும் இளைஞர்களையும் விடுதலை செய்யும்படி முழக்கம் எழுப்பினர். 

அந்தக்கூட்டம் நேரம் செல்லச்செல்ல அதிகரிக்கத் தொடங்கியது. மாலைக்குள் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மெரினாவில் கூடிவிட்டனர். போக்குவரத்துக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் இளைஞர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். 

அலங்காநல்லூரிலும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட போராட்டம், ஜல்லிக்கட்டுக்கு அவசரச்சட்டம் பிறப்பிக்கும்வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் உருவான மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டார். ஜனவரி 18ஆம் தேதி பிரதமர் மோடியை பன்னீர்செல்வம் சந்தித்தார். சந்திப்பு நடைபெற்ற சமயத்திலேயே மோடியின் டிவிட்டர் பக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு உதவி செய்ய முடியாது என்று கூறியதாக செய்தி வெளியானது. 

மோடியின் இந்த பதில் தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை உருவாக்கியது. மாணவர்கள் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறியது. அன்று மாலைக்குள் சென்னை மெரீனா கடற்கரை மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மோடிக்கு எதிரான முழக்கங்கள் அதிகரித்தன. மோடியைச் சந்தித்த பன்னீர் டெல்லியிலேயே தங்கிவிட்டார். 

சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவதாக கூறப்பட்டது. வியாழன்று ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசரச்சட்டம் பிறப்பிக்கப்படும் என்று பன்னீர் அறிவித்தார். அவசரச்சட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அந்தச் சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் கிடைத்துவிடும் என்றும் அவர் கூறினார். 

டெல்லியில் இதை அறிவித்த பன்னீர் அன்று மாலை தமிழகம் திரும்பினார். மாநிலத்திலும் அவசரச்சட்டம் பிறப்பிக்கப்படுவது உறுதி என்று தெரிவித்தார். தமிழக அரசு அவசரச்சட்டம் பிறப்பிக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து தமிழகத்திற்கான பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவ் அவசரமாக சென்னை திரும்பினார். 



வரைவு அவசரச்சட்டம் டெல்லியில் தயாரிக்கப்பட்டு உள்துறை அமைச்சகம், வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆகியவற்றின் ஒப்புதலோடு குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குடியரசுத்தலைவரின் ஒப்புதலோடு அந்த வரைவு அவசரச்சட்டம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது. ஜனவரி 21ம் தேதி சனிக்கிழமை ஆளுநர் கையெழுத்துடன்  ஜல்லிக்கட்டு அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 

அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்ட கையோடு ஜனவரி 22ம் தேதி தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயங்கள் நடத்தப்படும் என்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தானே தொடங்கி வைக்கப்போவதாகவும் முதல்வர் பன்னீர் அறிவித்தார். ஆனால் அவசர அவசரமாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாணவர்களும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

அதைமீறி முதல்வர் பன்னீர் மதுரை வந்துவிட்டார். ஆனால் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளுக்குள் அவர் நுழைந்துவிட முடியாதபடி பொதுமக்கள் தடுப்பு அரண்களை ஏற்படுத்தினர். மக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து பன்னீர் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தார். ஆனால் திங்கள்கிழமை அவசரச்சட்டத்தின் நகல் தாக்கல் செய்யப்பட்டு உடனடியாக அது சட்டமாக நிறைவேற்றப்படும் என்று கூறினார். 

அவசரச்சட்டம் என்ற கோரிக்கையோடு தொடங்கிய போராட்டம் ஜல்லிக்கட்டுக்கான நிரந்தரச் சட்டம் தேவை என்ற கோரிக்கையாக உருமாறியது. ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தடைப்பட்டது. மெரினாவிலும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் போராட்டக்காரர்கள் கலைய மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். 

அரசாங்கத்தின் வேண்டுகோளை அவர்கள் ஏற்க மறுத்தனர். அதே சமயம் மெரினாவில் அதுவரை இல்லாத அளவுக்கு போலீஸ் படை குவிக்கப்பட்டது. இதுகுறித்து ஊடகங்கள் விரிவாக செய்திகளை வெளியிட்டன. அதேநேரம் இந்தப் போராட்டத்துக்கு உந்துசக்தியாக இருந்ததாக கூறப்பட்ட ஹிப்ஹாப் ஆதி, போராட்டத்திலிருந்து தான் விலகுவதாக ஒரு வீடியோவை வெளியிட்டார். போராட்டத்தில் வெவ்வேறு குழுக்கள் நுழைந்துவிட்டதாகவும் அவர்கள் இந்தப் போராட்டத்தை திசை திருப்புவதாகவும் ஆதி கூறினார். அந்த வீடியோவை சில ஊடகங்கள் தொடர்ந்து ஒளிபரப்பின. 

அன்று இரவு இந்தப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த ஆதி, கார்த்திகேயன், ராஜேஷ், டைரக்டர் கௌதமன் ஆகியோர் தொலைக்காட்சிக்கு கூட்டாகப் பேட்டி அளித்தனர். அப்போதும் போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தார்கள். நடிகர் லாரன்ஸும் போராட்டத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்டதால் போராட்டத்தை முடித்துக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் போராட்டக்காரர்கள் இவற்றை ஏற்கவில்லை. 

23ம் தேதி சட்டசபை கூட வேண்டும். அதற்கு முன்னதாக அதிகாலையிலேயே மெரினாவில் இரவு முழுவதும் தங்கி இருந்த போராட்டக்காரர்களை சுற்றி வளைத்து போராட்டத்தை முடித்துக் கொண்டு வெளியேறும்படி போலீசார் வற்புறுத்தினர். 

சட்டமன்றத்தில் அவசரச்சட்டம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டவுடன் அமைதியாக கலைந்து செல்வதாக போராட்டக்காரர்கள் கூறினார்கள். அதை போலீசார் ஏற்கவில்லை. அவர்களை கலைத்து வெளியேற்றுவதில் உறுதியாக இருந்தனர். 

அந்த இடத்தில் தொடர்ந்து இருப்பதில் மாணவர்களும் இளைஞர்களும் பிடிவாதமாய் இருந்தனர். ஒரு சமயம் அவர்கள் கடலுக்குள் இறங்கி மனிதச்சங்கிலி அமைத்தனர். இந்தக் காட்சிகள் ஊடகங்களில் நேரலை செய்யப்பட்டன. போலீசார் தங்கள் நடவடிக்கையைத் தீவிரப்படுத்த முடிவு செய்த போது ஊடகங்களின் நேரலையை நிறுத்தும்படி உத்தரவிட்டனர். அதன்பிறகு மெரினா கடற்கரையில் என்ன நடந்தது என்பது முழுமையாக மறைக்கப்பட்டது. 



அதேசமயம் போலீசார் மெரினாவைச் சுற்றி இருந்த மீனவர் குப்பங்களிலும் திருவல்லிக்கேணியிலும் காட்டுமிராண்டித்தனமான வேட்டையைத் தொடங்கினர். அவர்களுடைய அட்டூழியங்கள் செல்போன் கேமராக்கள் மூலம் படம்பிடிக்கப்பட்டு அவை ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டன. 

போலீசாரே வாகனங்களுக்குத் தீ வைப்பதும், குடிசையைக் கொளுத்துவதும், சாலையோரங்களிலும் வீதி ஓரங்களிலும் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை கீழே தள்ளிவிட்டு அடித்து நொறுக்குவதும் என்று மிகக்கொடூரமான தாக்குதல்கள் படம்பிடிக்கப்பட்டு ஊடகங்களில் உலா வந்தன. 

போலீசா£ரின் இந்தத் தாக்குதல் குறித்து பன்னீர்செல்வம் எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை. மனித உரிமை ஆணையம் இந்தத் தாக்குதல் குறித்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தது. உண்மை கண்டறியும் குழுக்களும் தங்களுடைய விசாரணையை நடத்தின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் ஒரு குழு மீனவர் பகுதிகளில் ஆய்வு நடத்தியது. 

இவ்வளவு கலவரங்களுக்கு மத்தியிலும் மாநில அரசு ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழாவை நடத்தி முடித்தது. ஆனால் அந்த விழாவில் குடிமக்கள்தான் கலந்து கொள்ளவில்லை. 

அரசுக்கு எதிரான மிகப்பெரிய எழுச்சி அரசப்பயங்கரவாதம் மூலம் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த எழுச்சி நீருபூத்த நெருப்பாக நீடித்திருக்கும் என்பது மட்டும் உறுதி. 

ஜல்லிக்கட்டு விளையாட்டை தடைசெய்ய வேண்டிய அவசியம் என்ன? அந்த விளையாட்டை மீண்டும் நடத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏன் ஏற்பட்டது? 

காளையைப் பயன்படுத்தி நடத்தப்படும் ஒரு விளையாட்டை தடைசெய்வதில் தீவிரமாக ஒரு குழுவும் அந்த விளையாட்டை நடத்தியே தீரவேண்டும் என்பதில் தீவிரமாக ஒரு குழுவும் தொடர்ந்து சட்டப்போரில் ஈடுபட்டு வந்த நிலையில், மிகப்பெரிய ரணகளமே நடந்து முடிந்திருக்கிறது.

அப்படி என்னதான் இருக்கிறது அந்த விளையாட்டில்?

(தொடரும்)

https://www.uthayamugam.com/2024/01/1.html


Previous Post Next Post

نموذج الاتصال