ராமதாஸ் டாக்டர் ராம்தாஸ் ஆன கதை




”அம்பேத்கர் என்ன அம்பேத்கர் அவர் சோடாபுட்டி கண்ணாடி போட்டுருக்கார். கண்ணு தெரியாதவர்” என்றெல்லாம் வசைபாடும் டிக் டோக் காட்சி ஒன்றை பார்த்தேன்.
அதை பேசியவர் பா.ம.க சாதியை சேர்ந்த சகோதரர். அதைப் பார்த்து பெரிய கோபமோ எரிச்சலோ வரவில்லை. அவரைப் பார்க்கும் போது அன்றாடம் கூலிக்கு வேலை செய்யும் எளிய நிலையில் இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
அவருக்கு உண்மை எதுவும் தெரியாது. தெரிந்தால் அப்படி எல்லாம் பேச மாட்டார்.
சரி பா.ம.க வை சேர்ந்த சகோதரர்கள் அல்லது வன்னியர் சாதி அடிப்படைவாதத்தை ஆதரிக்கும் சகோதரர்கள் டாக்டர் ராமதாஸ் கல்வி கற்று டாக்டர் ஆனார் என்ற Timeline ஐ தெரிந்து கொள்ளுதல் அவசியம்.
இது டாக்டர் ராமதாஸ் 1991 யில் கொடுத்த பேட்டியில் இருந்து எடுக்கப்பட்ட தகவல் ஆகும்.
1. டாக்டர் ராமதாஸ் ஜூலை 25, 1939 மிக எளிய குடும்பத்தில் பிறந்தார்.
2.முதலில் மொளவு கவுண்டர் என்பவர் நடத்திய திண்ணை பள்ளிக்கூடத்தில் பயின்றார். அங்கே மணலில்தான் எழுதவும் எளிய கணக்கு போடவும் கற்றுக் கொண்டிருக்கிறார்.
3.அவர் ஊரில் வேறு பள்ளிகளே இல்லாத காலம் அது. அங்கே பட்டியலின சமூகத்தை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் தன் மனைவியுடன் சேர்ந்து ஒரு பள்ளி ஆரம்பித்தார். அவ்வூரில் அனைவரும் அவரை பெரிய அண்ணா என்று அன்புடன் அழைப்பார்கள். ராமதாஸ் பெரிய அண்ணா என்று அழைக்கும் பாலசுந்தரம் நடத்திய பள்ளியில்தான் ஒருவருடத்துக்கும் மேலாக படித்திருகிறார். தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் நடத்தும் பள்ளி என்பதால் ராமதாஸ் அங்கே சென்று படிக்க எதிர்ப்பு இருந்திருக்கிறது. இருப்பினும் கல்வி கற்கும் ஆசையினால் ராமதாஸ் அங்கே சென்று கற்றிருக்கிறார். அவர் பள்ளி சென்று வீடு திரும்பியதும் அம்மா தலையில் நீரை ஊற்றி தீட்டுக் கழித்தே வீட்டுக்குள் விடுவாராம்.
4. ஒருவருடத்துக்கும் மேலாக பாலசுந்தரம் என்ற பெரிய அண்ணா பள்ளியில் படித்து அவரிடம் பணிவுடன் நடந்து கொண்ட மாணவராக டாக்டர் ராமதாஸ் இருந்தார். இதனால் பாலசுந்தரத்துக்கு அப்பையனை ( ராமதாஸை) பிடித்து விட்டது. இதை வாய்ப்பாக வைத்து பெரிய வகுப்பு படிக்க சென்னை அனுப்பி வைக்கும்படி பாலசுந்தரத்தை ராமதாஸ் வேண்டுகிறார்.
5.சரி என்று பாலசுந்தரம் ஒரு கடிதம் கொடுத்து சென்னை ராயபுரத்தில் இருக்கும் பெரிசாமி வாத்தியாரிடம் கொடுக்குமாறு சொல்கிறார்.
6.பாலசுந்தரம் கொடுத்த சிபாரிசு கடிதத்தை எடுத்துக் கொண்டு சென்னை ராயபுரத்தில் வசிக்கும் பட்டியலனத்தவரான பெரியசாமி வாத்தியாரிடம் சிறுவனாக வருகிறார் ராமதாஸ்.
7. பெரியசாமி வாத்தியார் ராயபுரத்தில் கண்ணப்ப நாயனார் கழகம் என்றொரு இயக்கம் நடத்தி வந்ததோடு ஒரு பள்ளியும் நடத்தி வந்தார். அங்கே ராமதாஸை ஆறாம் வகுப்பில் சேர்த்துக் கொண்டார். அப்பள்ளியில் பலரும் தாழ்த்தபட்ட மாணவர்களாக இருந்தார்கள். அவர்களோடுதான் ராமதாஸ் ஒன்றாகவும் விரும்பியும் கல்வி கற்றார். ( 1952 - 1955 )
8. எட்டாம் வகுப்பு வரை அங்கே படித்த ராமதாஸ் ஒன்பதாம் வகுப்புக்காக சென்னை மண்ணடி தம்புச்செட்டித் தெருவில் உள்ள முத்தியாலுப்பேட்டை உயர்நிலை பள்ளியில் சேர்கிறார். படிப்பில் ஆர்வம் உள்ள ராமதாஸ் கடுமையாக உழைத்துப் படித்தார். +1 யில் நல்ல மதிப்பெண் பெற்றார். ( 1955 - 1958 )
9. அதை வைத்து அவருக்கு லயோலா கல்லூரியில் பி.யூ.சி சீட் கிடைக்கிறது. அவர் தங்கி இருந்தது சேப்பாக்கத்தில் உள்ள எம்.சி. ராஜா இலவச ஹாஸ்டலில். கையில் பெரிய அளவு பணம் எதுவும் இல்லாத ஏழை மாணவர் வேறு. சேப்பாக்த்தில் இருந்து லயோலாவுக்கு உள்ள மூன்று கிலோமிட்டர் தூரத்தை படிப்பு முடியும்வரை நடந்தேதான் கல்வி கற்றிருக்கிறார். பேருந்துக்கோ ரயிலுக்கோ பணம் கொடுக்க காசில்லை என்று பேட்டியில் சொல்லி இருக்கிறார். ( 1958 - 1959 )
10. அதன் பிறகு அவர் நண்பர் சென்னை மருத்துவக்கல்லூரியில் அப்ளை பண்ண வற்புறுத்த ராமதாஸ் அப்ளை செய்ய மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அங்கே மருத்துவக் கல்வியை செவ்வனே கற்று முடித்திருக்கிறார். ( 1959 - 1967)
இப்படித்தான் ராமதாஸ் டாக்டர் ராம்தாஸ் ஆகி இருக்கிறார்.
திண்ணை பள்ளிக்கூடம் - பாலசுந்தரம் என்ற பெரிய அண்ணா பள்ளிக்கூடம் - பெரியசாமி அவர்கள் நடத்திய பள்ளிக்கூடம் - முத்தியாலுப்பேட்டை பள்ளி - லயோலா - சென்னை மருத்துவக் கல்லூரி.
இதில் கவனியுங்கள் திண்ணைப் பள்ளியில் இருந்து பாலசுந்தரம் ஐயாதான் ராமதாஸுக்கு உருப்படியாக கல்வி நிலைக்கு கொண்டு செல்கிறார்.
பாலசுந்தரம் ஐயா ஒரு தலித்.
அடுத்து சென்னையில் ராமதாஸை அணைத்துக் கொண்டது பெரிய சாமி ஐயா. அவரும் ஒரு தலித். ராமதாஸ் தலித் மாணவர்களுடன் ராயபுரத்தில் கல்வி கற்றிருக்கிறார்.
லயோலா ஒரு சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரி. அப்போது ராமதாஸுக்கு அடைக்கலம் கொடுத்த எம்.சி ராஜா ஹாஸ்டலும் ஒரு தலித் மாணவர்கள் அதிகம் புழங்கும் ஹாஸ்டல்தான்.
ஆக ராமதாஸ் என்னும் கிராமத்து சிறுவன் டாக்டர் ராம்தாஸ் ஆவதற்கு மிக முக்கிய காரணமாக தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள்தாம் இருந்திருக்கிறார்கள்
டாக்டர் ராமதாஸ் கல்வி கற்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் அப்போது சாதி எல்லாம் பார்க்கவில்லை. கற்பதிலேயே குறியாய் இருந்து கற்றிருக்கிறார்.
1939 ஆம் ஆண்டு பிறந்த அவரே இவ்வளவு கவனமாக இருந்து டாக்டர் ஆகி இருக்கும் போது.
2000 ஆம் வருடம் பிறந்த பா.ம.கவை சேர்ந்த வன்னிய இளைஞர்களே நீங்கள் மட்டும் ஏன் சாதி சாதி . என்று உங்கள் படிப்பையும், பண்பாட்டையும் இழந்து விட்டு வாழ்க்கையில் ரிஸ்காக இயங்குகிறீர்கள்.
உங்கள் தலைவர் ராமதாஸ்தான் உங்களுக்கான எடுத்துக்காட்டு.
சாதி வெறியை விட்டு அவரைப் போல கல்வியறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
பா.ம.கவின் உசுப்பேற்றலை நம்பி உங்கள் வாழ்க்கையை விட்டு விடாதீர்கள்.
(பேட்டி எடுப்பட்ட புத்தகம்
“ஒடுக்கப்பட்டோர் உரிமைப்போரில் சமூகநீதி காவலர் டாக்டர் ராமதாஸ்”...
எழுதியவர் அ.ம சத்தியமூர்த்தி )

நன்றி : இம்சையரசி தென்றல். 

Previous Post Next Post

نموذج الاتصال