முதலமைச்சர் ஸ்டாலினிடம் விருது பெறும் முனைவர் ராமன்
உலகம் முழுவதும் தமிழர்கள் வேலைக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், பணிபுரியும் நாட்டில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்து, சாதனை புரிபவர்கள் மிகவும் சிலரே இருக்கிறார்கள்.அப்படி பல துறைகளிலும் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சாதனை புரிந்த தமிழர்களைக் கவுரவிக்க, தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விழாநடத்தி விருது வழங்குகிறது.
சைக்கிள் பயணத்தில் முனைவர் ராமன்
2023 ஆம் ஆண்டுக்கான அயலகத் தமிழர் விருது வழங்கும் விழா 2024 ஜனவரியில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. மூன்றாம் ஆண்டாக நடைபெற்ற இந்த அயலகத் தமிழர் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், அறிவியல், தொழில், சமூக சேவை, விளையாட்டு என 8 பிரிவுகளின் கீழ் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 14 அயலகத் தமிழர்களுக்கு விருதுகளை வழங்கினார்.2024 ஜனவரியில் "தமிழ் வெல்லும்" என்ற கருப்பொருளில் அயலகத் தமிழர்கள் நாள் கொண்டாடப்பட்டது. இதில் 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 218 உலகத் தமிழ் சங்கங்களை சேர்ந்த அயலகத் தமிழர்கள் பங்கேற்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விருதுபெற்ற 14 அயலகத் தமிழர்களில், அவர்களில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள குதிரைகுத்தி கிராமத்தைச் சேர்ந்த முனைவர் குருசாமி ராமன் தனித்த சிறப்புடையவர். இவருக்கு விளையாட்டில் சாதனை புரிந்த தமிழர் பிரிவில், தமிழ்நாடு அரசின் கணியன் பூங்குன்றனார் விருது, தங்கப் பதக்கத்துடன் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.கொரியா விருது மற்றும் சான்றிதழுடன் முனைவர் ராமன்
முனைவர் ராமன் குருசாமி, கொரியாவில் 1857 கிலோமீட்டர் தூரமுள்ள சைக்ளிங் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் வெற்றிபெற்ற முதல் இந்தியத் தமிழர் என்ற பெருமையைப் பெற்றவர். இதன்மூலம், தமிழ்நாட்டுக்கும், கொரியாவில் வசிக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.தமிழ்நாடு அரசு வழங்கிய சான்றிதழும் தங்கப் பதக்கமும்
குதிரை குத்தி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி – மாரியம்மாள் தம்பதியின் மகனாக, பின்தங்கிய கிராமத்தில் பிறந்த முனைவர் ராமன் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலைக் கழகத்தில் (Yengnam university), ஜினோமிக்ஸ் பிரிவில் ஆராய்ச்சியாளராகவும் உதவி பேராசிரியராகவும் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலையில் கடந்த பத்து வருடங்களாக பணிபுரிகிறார். முனைவர் ராமன், மனைவி பொன் அருணா மற்றும் மகள் அதிராவுடன் தென் கொரியாவில் வசித்து வருகிறார்.