வாழ்வியல் சிந்தனைகள் 20 – ராதா மனோகர்


நீங்கள் விரும்புவதும் நினைப்பதுவும் ஒன்றா?

ஓடிக்கொண்டு இருக்கும் இந்த வாழ்கை ஒவ்வொரு கணமும் உங்களால் தீர்மானிக்கப்பட்டு உருவாக்க பட்டுக்கொண்டே ஓடுகிறது. 

நிச்சயமாக உங்களின் வாழ்க்கை வேறு ஒரு சக்தியால் தீர்மானிக்கப்படவில்லை, இதை நம்புவது அல்லது ஏற்று கொள்வது மிகவும் கடினமான காரியமாகும்.

நமக்கு இந்த வாழ்க்கையை தீர்மானிக்கும் சக்தி இருந்தால் நாம் ஏன் எமக்கு விருப்பமான விதத்தில் எமது வாழ்க்கையை தீர்மானித்து உருவாக முடியாமல் இருக்கிறது என்ற கேள்வி எழுவதும் தவிர்க்க முடியாது. எமது வாழ்க்கை அல்லது எமது நோக்கம் எமது விருப்பப்படியே உருவாக்கப்படுகிறது எனில், ஏன் நாம் விரும்பியபடி எமது வாழ்க்கை அமைவது இல்லை?

நிச்சயமாக நாம் விரும்பியபடிதான் எமது வாழ்க்கை அமையும். இதில் சந்தேகமே தேவை இல்லை, நாம் எதை விரும்புகிறோம் என்பது மிகபெரும் உள்ளார்த்தம் உள்ள கேள்வியாகும். நாம் விரும்புவது என்று நாம் நினைக்கும் எல்லாவற்றையும் நாம் நிச்சயம் விரும்புகிறோமா?

நாம் விரும்பவில்லை என்று நாம் நினைக்கும் எல்லாவற்றையும் உண்மையில் நாம் விரும்பவில்லையா? உதாரணமாக நாம் ஒருவரும் விபத்துக்கள் எமக்கு நடக்க வேண்டும் என்று விரும்புவதில்லை. ஆனாலும் எமக்கு விபத்துக்கள் சிலவேளை நடக்கின்றதே?

அது எப்படி? எமக்கு ஒரு விபத்து நடந்து விட்டால் அது எப்படி எமக்கு சம்பவித்தது?

நிச்சயமாக நாம் அதை விரும்பி இருக்க முடியாது. நிச்சயம் நாம் அதை உருவாக்கி இருக்கவும் முடியாது. எமக்குள் இருக்கும் எது அந்த விபத்தை எம்மை நோக்கி ஈர்த்தது?

நிச்சயமாக அந்த விபத்தை ஈர்க்கும் ஏதோ ஒரு சக்தி எம்முள் இருந்துதான் உருவாக்கி இருக்கிறது. எம்மை அறியாமலே நாம் உருவாக்கும் சக்திகளுக்கு இயங்கும் ஆற்றல் இருக்கிறது.

எமது சிந்தனைகள், எமது உள்ளுணர்வுகள், எமது உணர்ச்சிகள் மட்டும் அல்லாது எமக்குள் எம்மை அறியாமலேயே எமது ஆழமான அடிமனதில் மறைந்து இருக்கும் எண்ணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை, இவைதான் எல்லா சம்பவங்களுக்கும் ஆதார சக்தியாக இருக்கிறது,

நாம் விபத்தை விரும்ப மாட்டோம் ஆனால் விபத்து பற்றி செய்திகளை டிவியில் பார்ப்போம், சிலவேளைகளில் எம்மை அறியாமல் அந்த விபத்து பற்றிய எண்ணங்கள் எமக்குள் பதிந்து விடுகிறது.

விபத்து பற்றிய செய்தி எமக்குள் இருந்து எவ்வளவு அழுத்தமாக அது தனது இயங்கு சக்தியை பெறுகிறதோ அந்த அளவு விபத்து நடக்கும் சாத்தியமும் அதிகமாகிறது. எமது மனம் இயங்கும் வழிமுறைக்கும் வெளி உலகம் எமக்கு கற்று தந்த வழிமுறைகளுக்கும் இடையில் பாரிய ஒரு இடை வெளி இருக்கிறது.

அதனால்தான் எமக்கு வாழ்வானது அனேகமாக ஒரு போராட்டமாக மாறிவிடுகிறது. இதை விளங்கி கொள்வது எளிதான காரியம் அல்ல. ஏனெனில் இயற்கையின் சிருஷ்டி நிர்வாக பொறி முறையை பற்றி ஏதும் அறியாதவர்களாக இருக்கிறோம். இயற்கையின் இயங்கு விதிகளை நாம் பெரிதும் அக்கறை கொள்வதில்லை.

இந்த இயங்கு விதிகளை பற்றிய எமது கோட்பாடுகள் எல்லாம் சமயங்கள் சார்ந்த கோட்பாடுகள் அல்லது செய்திகளாக தான் உள்ளன. அவை விஞ்ஞான ரீதியான அல்லது தர்க்க சாஸ்திர ரீதியான கோட்பாடுகளாக பெரிதும் இருப்பதில்லை. மனிதர்களின் சிருஷ்டி பற்றிய ரகசியங்கள் பெரிதும் ரகசியங்களாகவே இருக்கின்றன. சிருஷ்டியின் அற்புத சக்திகளை நாம் ஏன் அறியாமல் போய்விட்டோம் என்பது உணமையில் கவலைக்கு உரியதுதான்,

நாம் எமக்கு நடக்கும் சம்பவங்கள் எல்லாம் ஏதோ கண்ணுக்கு தெரியாத கடவுள் அல்லது கிரகங்கள் எமது தலையில் இட்டு கட்டுவதாகதான் எமக்கு இதுவரை காலமும் கற்பிக்க பட்டு வந்துள்ளது. எமக்கு வருவதெல்லாம் எமது தலையில் இருந்து வந்தவை என்பது தான் உண்மை.

இந்த சிருஷ்டி ரகசியத்தை அறிவதற்கு உள்ள ஒரே வழி எம்மை பற்றி நாமே கொஞ்சம் ஆராய்ச்சி செய்வதுதான். நாம் இதுவரை எம்மை பற்றி சரியாக ஆராய்ச்சி செய்ய வில்லை என்றுதான் கூறுவேன். நாம் சதா ஏதாவது ஒன்றின் பின்னால் ஓடிகொண்டே இருக்கிறோம். ஓடுவதை நிறுத்தி விட்டால் நாம் ஏதோ பின்தங்கி விட்டோம் அல்லது தோற்று விட்டோம் அல்லது வாழவே இல்லை என்ற முடிவுக்கு வந்து விடுவோம். தன்னை மறக்காமல் ஓடிகொண்டே இருந்தால் அது நல்லது.

ஆனால் தன்னை மறந்தல்லவா பலரும் ஓடிகொண்டிருக்கிரார்கள். ஒரு அழகான நதியானது தான் கடலை சேரவேண்டும் அதற்கிடையில் அழகான பல ஊர்களை பார்க்கவேண்டும் பல மொழிபேசும் மாநிலங்களை கடக்கவேண்டும் பலவிதமான காற்றை சுவாசிக்க வேண்டும் பலவிதமான காட்சிகளை காணவேண்டும் இப்படி எல்லாவற்றையும் கண்டுகொண்டே அது வேக வேகமாக கடலை நோக்கி ஓடுகிறது.

அது அதன் வாழ்க்கை. நீரோடு நீராக சேர்வது அதன் விருப்பம். அந்த நதியானது கடலை சேருமுன் அனுபவங்களை ரசித்த பின்பே அது கடலை அடைகிறது. அது பின்பு கடலாக வாழ தொடங்குகிறது. மனிதவாழ்வுக்கும் இந்த நதியின் கதைக்கும் நல்ல நெருக்கம் இருக்கிறது.

நாம் எங்கிருந்து வருகிறோம்? எங்கே போகிறோம்?

இந்த கேள்விகளுக்கு எல்லா சமயங்களும் விதம் விதமான பதில்களை கூறுகின்றனர்.நாம் அந்த விடயத்திற்கு போகவில்லை. எங்கிருந்தோ வந்துவிட்டோம் எங்கேயோ போகப்போகிறோம் அது பற்றி பிறிதொரு அத்தியாயத்தில் பார்போம்.

தற்போது இந்த உலகத்தில் நாம் எப்படி மகிழ்ச்சியாக வாழலாம்? எப்படி நாம் நினைத்ததை எல்லாம் சாதிக்கலாம்? நாம் நினைத்தபடியே எமது வாழ்வு அமையுமா? அதற்கு நாம் என்னதான் செய்ய வேண்டும்?

முதலில் எமது எண்ணங்களை நாம் ஒழுங்கு படுத்தி கொள்ளவேண்டும். ஒவ்வொரு எண்ணமும் எமது மனதில் உதிக்கும்போதும் இது நிச்சயம் ஒரு நாளில் ஒரு நிதர்சனமான உண்மையாக போகிறது என்று கருதி கொள்ளவேண்டும். இது முதல் படி.

இந்த எண்ணம் மட்டும் எமக்குள் உருவாக்கி விட்டால் எமது எண்ணங்களுக்கு வலிமை வந்துவிடும், இந்த கோட்பாட்டை அழுத்தமாக நாம் நம்பும் பொழுது எமது எண்ணங்கள் எவ்வளவு சக்திவாய்ந்தவை என்பது நடைமுறை வாழ்க்கையிலேயே எமக்கு மெல்ல மெல்ல புரியதொடங்கும்.

எமக்கு தெரிந்தோ தெரியாமலோ எமது மனதில் வந்து போகும் அத்தனை எண்ணங்களுக்கும் அத்தனை செய்திகளுக்கும் அத்தனை உணர்வுகளுக்கும் அத்தனை உணர்சிகளுக்கும் நிச்சயம் சிருஷ்டி சக்தி இருக்கிறது.

அது எவ்வளவு அழுத்தமோ அல்லது அழுத்தம் இல்லையோ அதற்கு ஏற்ற அளவு அது நிதர்சனமாக நடைபெறும். இதனால்தான் எமது மனதை ஒரு அதி சக்திவாய்ந்த மின்சாரம் போன்று கருத வேண்டும். நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ என்னன்னா எண்ணங்களுக்கு அல்லது என்ன செய்திகளை அதிகம் எண்ணுகிறீர்களோ அவற்றிக்கு உயிர்கொடுப்பது நீங்கள் தான் என்பதை மறக்க வேண்டாம்.

உதாரணமாக எனக்கு தெரிந்த ஒருவர் சதா துன்ப பாடலை விரும்பி விரும்பி பாடுவார் அல்லது முணுமுணுப்பார் கடைசியில் அவர் அதிகம் முணுமுணுத்த பாடல் போன்றே அவரது வாழ்க்கையும் அமைந்து விட்டது. எனது வேறொரு நண்பர் சதா சண்டை படங்களை விரும்பி பார்ப்பார். அவர் மிகவும் நல்லவர். ஆனால் அவரது வாழ்வில் யாரும் எதிர்பாராத மாதிரி ஒரு சண்டை சம்பவம் நடந்தது. தற்போது அவர் அதிலிருந்து மீண்டுவிட்டார்,

இது போல இன்னும் எத்தனையோ பல சம்பவங்கள் நான் அறிந்துள்ளேன். மனதின் வலிமையின் நாம் இன்னும் சரியாக உணரவில்லை. வருந்தி வருந்தி மனதையும் ஞ்.வருத்தி வருத்திக்கொண்டு இருந்தால் வருத்தம் தான் வரும். வாழ்க்கை வாராது. வாழ்க்கை வேறு மகிழ்ச்சி வேறல்ல.

இன்னும் சரியாக சொல்லப்போனால் இந்த பூமிக்கும் நாம் வந்த நோக்கமே வாழ்க்கைதான். இந்த வாழ்க்கை சகல சக்திகளும் கொண்டதாகும். எம்மை சுற்றி உள்ள இந்த பிரபஞ்சத்தை கொஞ்சம் உற்று நோக்கினால் சகல சிருஷ்டி ரகசியங்களும் தெளிவாகவே தெரியும்.

நாம்தான் கண்ணை மூடிக்கொண்டு சதா யாரோ சொல்வதை எல்லாம் நம்பி கொண்டு காலத்தை கடத்தி விட்டோம். இயற்கையை மிஞ்சிய சக்தி எதுவுமே இல்லை.

இன்றய சமயங்கள் எல்லாம் தோன்றுவதற்கு எத்தனையோ கோடானு கோடி ஆண்டுகளாக இந்த அற்புதமான உலகத்தை படைத்து காத்து நாமும் சகல ஜீவராசிகளும் வாழக்கூடிய வாய்ப்பை எமக்கு தந்தது இந்த பிரபஞ்சம்தான். அதன் கோட்பாடுகள் எல்லாமே நம் கண்முன்னே தெரிபவைதான். பிரபஞ்சம் யாரையும் தனியே கூப்பிட்டு உங்களுக்கு மட்டும் சொல்கிறேன் என்று தனது இயங்கு விதிகளை கூறவில்லை.

நாம்தான் அவற்றை பார்க்க மறுத்து கண்களை மூடிக்கொண்டு கண்ணுக்கு தெரியாதவற்றை பார்க்க முயற்சிக்கிறோம் ஆனால் கண்ணுக்கு தெரிந்த பிரபஞ்சத்தை பார்க்க மறுக்கிறோம். நாம் வேறு பிரபஞ்சம் வேறல்ல. நமக்கு வரும் எண்ணங்களும் பிரபஞ்சத்திற்கு வரும் எண்ணங்களும் வேறல்ல.

அதனால்தான் நாம் எப்படியோ அப்படித்தான் எம்மை சுற்றி உள்ள பிரபஞ்சமும் இயங்குகிறது. இது எப்படி என்பது நிச்சயமாக நாம் விளங்கி கொள்ள முடியும். இதில் ஒன்றும் மர்மம் இல்லை, சாதாரண மக்கள் அறியக்கூடாது என்று ஆண்டாண்டு காலமாக மக்களை இருட்டில் வைத்திருந்த சுயநலவாதிகளை மனித சரித்திரம் கண்டிருக்கிறது.

அதனால்தான் இன்னும் மனிதர்கள் சண்டை போட்டு கொண்டிருக்கிறார்கள். எல்லா மனிதர்களும் எல்லா ஜீவராசிகளும் பிரபஞ்சத்தில் ஒன்றோடு ஒன்று உறவு கொண்டவை தான். ஒரு நாய்க்குட்டியின் சுவாசித்திற்குள் இருந்து வந்த காற்றை நீங்களும் நானும் சுவாசித்திருப்போம். கோடானு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு ஜீவராசியின் ஒரு அணு கூறு எமது உடலிலும் இருக்ககூடும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு மகானின் சுவாசம் அல்லது ஒரு கொலைகாரனின் சுவாசமும் கூட எமது சுவாசிதிற்குள் புகுந்து வந்திருக்க கூடும். இதை போன்று எமது உடலும் மனமும் கூட பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயணம் செய்து வருபவைதான். இந்த பிரபஞ்ச நாடகம் வெறுமனே தற்செயலாக நடைபெறவில்லை.

எல்லாவற்றிக்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதுதான் வாழ்க்கை. தற்போது நமக்கு வாய்த்திருக்கும் வாழ்க்கை அழகானது. இந்த வாழ்க்கையை நாம் எப்படி புரிந்திருக்கிறோம்? இதுதான் மிகப்பெரும் கேள்வி. இதற்கு பதிலும் கூட அவ்வளவு இலகுவானதல்ல.

ஒவ்வொருவரும் தானே தனக்குள் கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன. நாம் சிந்திக்க கொஞ்சம் பயப்படுபவர்கள். சிந்திக்காமலேயே நம்புவதற்கு பழக்கபடுத்த பட்டவர்கள். நம்புவது நல்லது என்றே பலரும் நம்புகிறார்கள். அது மிகவும் தவறு, எதிலும் நியாயமான சந்தேகம் கொள்வது மிகவும் நல்லது. சந்தேகம்தான் உங்களை சிந்திக்க தோன்றும், போதை வஸ்த்து போன்று இலகுவில் நம்பி சரணடைந்து பின்பு நிரந்தரமாக ஒரு தூக்க நிலையில் தான் நமது வாழ்வு பெரும்பாலும் கழிந்திருக்கிறது.

சிந்தனைதான் மனிதர்களை வாழ வைத்திருக்கிறது.

Previous Post Next Post

نموذج الاتصال