உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள்
இன்றைய பகுத்தறிவு வாதம் என்பது சென்ற அல்லது அதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் உருவான கருத்துக்களில் இருந்து கொஞ்சம் கூட மாறியதாக தெரியவில்லை. நூற்றாண்டுக்கு முந்தைய பகுத்தறிவு கோட்பாடுகளையே இன்னும் பின் பற்றுகிறார்கள்.
ஆத்மீகவாதிகள் அல்லது சமயவாதிகள் எப்படி எப்படியெல்லாம் அறியாமையில் மூழ்கி உள்ளார்களோ அவர்களை போலவே இந்த பகுத்தறிவுவாதிகளும் ஏதோ ஒரு வகையில் ஒரு இறுகிய நிலையில் உள்ளதாகவே தெரிகிறது. இது கொஞ்சம் இடக்கு மிடக்கான கருத்தாக தோன்றலாம். இவர்களின் பகுத்தறிவு பெரும்பாலும் தந்தை பெரியாரின் கருத்துக்களோடு ஒத்து இருக்கிறது.
தந்தை பெரியாரின் சுயமரியாதை போராட்டம் ஜாதி அடக்குமுறைக்கு எதிராகவே ஆரம்பிக்கப்பட்டது. முக்கியமாக பார்ப்பனர்களின் ஜாதி அடக்குமுறை படுமோசமாக இருந்தது. அது மட்டும் அல்லாமல் உயர் ஜாதியினரின் ஆதிக்க கொடுமையில் இருந்தும் தாழ்த்தப்பட்டவர்களை மீட்க வேண்டிய ஒரு தளத்துக்கு பெரியாரை அது கொண்டு சேர்த்தது.
ஜாதி அமைப்பானது பார்பனர்களால் வடிவமைக்கப்பட்டு பின்பு ஏனைய ஜாதிகளாலும் இறுக்கி பிடித்து நிலை நிறுத்தப்பட்டு வந்தது. இந்த ஜாதியும் இந்துசமயமும் பிரிக்க முடியாமல் இரட்டை குழந்தைகளாக இருந்தன. ஜாதி என்பதே இந்து சமயம்தான் அல்லது இந்து சமயம் என்பதே ஜாதி அமைப்புதான் என்ற அளவுக்கு இரண்டுமே பின்னி பிணைந்து இருந்தது அல்லது இருக்கிறது.
இந்த இடத்தில் பெரியாருக்கு வேறு வழியே இருக்கவில்லை. இந்த கொடுமைக்கு முடிவு கட்ட சிலிர்த்தெழுந்த சிங்கம்தான் தந்தை பெரியார். கடவுள் சொல்கிறார் என்பதையும் தாண்டி பார்ப்பான் சொல்கிறான் அல்லது ஆண்டே சொல்கிறார் என்று தமிழகம் தாழ்ந்து போய் கேட்டுக்கொண்டு இருந்த காலத்தில் பெரியாரால் முன்வைக்கப்பட்ட கருத்துகள் கோட்பாடுகள் அன்றைய யதார்த்தம்.
அவரின் காலத்தில் தமிழக மக்கள் மிக மோசமான அறியாமையில் இருளில் மூழ்கி கிடந்தார்கள். ஜாதி அடக்குமுறை ஒருபுறமும் அடிப்படை வசதிகள் மட்டுமல்ல வாழும் உரிமையையும் கூட இல்லாத அளவு வறுமையும் பஞ்சமும் கோரதாண்டவம் ஆடிய காலமது.
சமுகத்தின் அடிமட்டத்தில் தமிழன் விழுந்து கிடந்தான். அந்த தமிழ் சமுகத்தை தட்டி எழுப்பி உரிமைக்காக போராடவேண்டிய பல தளங்களில் அவருக்கு தேவை இருந்தது. பார்ப்பனீய மூட நம்பிக்கையால் மனிதன் அறிவிழந்து அடிமையாக இருந்தான். மக்களை பார்பனீயத்தின் அடிமைத்தனத்தில் இருந்து மீட்பதற்கு மக்களுக்கு பகுத்தறிவு வாதத்தை கற்பித்தார்.
கடவுள் என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு பார்ப்பான் அல்லது மேட்டுக்குடி ஜாதியான் என்ன சொன்னாலும் அதை கேட்பதைதவிர வேறு மார்க்கமே அறியாமல் மனிதர்கள் கட்டுண்டு வாயில்லா பூச்சிகளாக இருந்தார்கள்.
அதனால்தான் பெரியார் கடவுள் இல்லை கடவுளை நம்புபவன் முட்டாள் கடவுளை கும்பிடுபவன் அயோக்கியன் என்று கடவுள் பார்பனீயம் ஹிந்து சமயம் போன்ற எல்லாவற்றையும் கடுமையாக எதிர்த்தார். பெரியாரின் வாழ்வையும் அவரது கோட்பாடுகளையும் நாம் முழுவதுமாக மதிக்கிறோம் ஏற்றுகொள்கிறோம்.
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் சுயமரியாதை என்பது ஓரளவு சட்டத்தால் அங்கீரிக்கப்பட்ட ஒரு விடயமாக உள்ளது. அதுமட்டும் அல்ல ஒருவரின் சுயமரியாதை என்பதை சமுகம் அங்கீகரித்தே ஆகவேண்டிய அளவு சமுகம் அறிவு பெற்றிருக்கிறது அல்லது வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று கூறலாம். ஆனால் பூரணமாக சுயமரியாதை பேணப்படுகின்றது என்ற பொருளில் நான் கூறவில்லை.
இங்கே நான் எடுத்துக்கொண்ட விடயம் சுயமரியாதை பற்றியதல்ல. நான் கூறவந்த விடயம் பகுத்தறிவு பற்றியதாகும். மேற்கு நாடுகளில் பகுத்தறிவு என்பது பலபடிகளை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் நாம் இன்னும் தந்தை பெரியார் காலத்து பகுத்தறிவு கொள்கை கோட்பாடுகளையே இறுக்கி பிடித்து கொண்டு இருக்கிறோம்.
இதானால் இந்த பகுத்தறிவு கொள்கைக்கு விரோதமான கொள்கைகளை கொண்டிருக்கும் சமயவாதிகள் அல்லது நம்பிக்கை கோட்பாட்டாளர்களே பெரிதும் இலாபம் அடைகிறார்கள். விஞ்ஞானம் இன்று பெரியார் காலத்தை விட எவ்வளவோ தூரம் முன்னேறி விட்டது. ஒரு விசயம் கவனித்திருப்பீர்கள், எப்பொழுதெல்லாம் ஏதாவது புதிய கண்டு பிடிப்பு பற்றி அறிவிப்பு வந்ததும், பார்பனர்கள் இது ஏற்கனவே வேதத்தில் கூறப்பட்டுள்ளது ரிக்வேதத்தில் இருக்கிறது.
உபநிஷதத்தில் இதுபற்றி ஒரு பாஷ்யம் உள்ளது என்றெல்லாம் கதை அளக்க தொடங்கி விடுவார்கள். இஸ்லாமியர்கள் மட்டும் என்ன சளைத்தவர்களா? குர்ஆனில் இருப்பதாக ஆளாளுக்கு முழக்க தொடங்கி விடுவார்கள். பின் என்ன கிருஸ்தவ சமயம் மாற்றும் கோஷ்டியினரும் தங்கள் பங்குக்கு பைபிளில் விளக்கமாக இதுபற்றி இருப்பதாக கூற தொடங்கி விடுவார்கள்.
இனி நான் குறிப்பிடப்போகும் விடயம்தான் மிகவும் முக்கியமானது. ஒரு விஞ்ஞான கோட்பாடு ஆரம்ப கட்டத்தில் இருக்கும்போதே அதுபற்றி சமயவாதிகள் முழங்க தொடங்கி விடுவார்கள். விஞ்ஞானிகள் அதிகம் பேசமாட்டார்கள்.
தங்கள் கண்டுபிடிப்பு மிகவும் நிரூபணமாக தெரிந்த பின்புதான் அறிவிப்பார்கள். அதற்கு முன்பே அதுபற்றிய இலவச விளம்பரங்களை சமயவாதிகள் போதியளவு செய்திருப்பார்கள். எனவே மக்களும் ஓரளவு சமயவாதிகளின் கூற்றுக்களில் அர்த்தம் இருப்பதாக கருதி கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. இதில் என்ன பிரச்சனை என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
சமயவாதிகள் தங்கள் மீது மக்களுக்கு எப்படீப்படி எல்லாம் நம்பிக்கை வரவேண்டுமோ அதைப்பற்றியே சதா சிந்திதுகொண்டு இருப்பவர்கள். ஏனெனில் அவர்களுக்கு தெரியும் தங்களிடம் ஒன்றுமே இல்லை . தாங்கள் வெறும் பிரசாரத்தால் மட்டுமே மக்களை கட்டி போட்டிருக்கிறோம். எனவே சதா ஏதாவது ஒரு புருடா விட்டுக்கொண்டு இருக்கும் வரைதான் தங்கள் வண்டி ஓடும் என்று ஒட்டி கொண்டிருக்கிறார்கள்.
நமது பகுத்தறிவு வாதிகளோ மறுபக்கம் சென்ற நூறாண்டை விட்டு நகரவே மறுக்கிறார்கள். இதில் மிகபெரும் வேடிக்கை என்னவென்றால் பெருபாலான பகுத்தறிவுவாதிகள் பெரியாரை வழிபாடு செய்துகொண்டும் இருக்கிறார்கள்.ஆனால் மனதில் எவ்வளவு தூரம் அவரது கருத்துக்கள் பற்றி சிந்தித்து இருக்கிறார்கள் என்றால் உண்மையில் கொஞ்சம் கவலைக்கு உரியதாகத்தான் இருக்கிறது.
பெரியார் எதையும் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றியவர் அல்ல.
பல பெரியார் வழிவந்த பகுத்தறிவுவாதிகள் பலரும்ஞ் அந்தகாலத்து பகுத்தறிவு கருத்துக்களை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுகிறார்கள். உண்மையில் இந்த வகையினர் பெரியாரின் சிந்தித்து செயலாற்றும் பகுத்து அறியும் ஆற்றலை மறந்தவர்களாக இருக்கிறார்கள்.
விஞ்ஞானம் பெரிய அளவில் முன்னேறி இருக்கிறது. அந்த காலத்தில் மூட நம்பிக்கை என்று சொல்லப்படும் சில விடயங்கள் தவறு என்று இன்றைய விஞ்ஞானம் நிருபித்து உள்ளது. உதாரணமாக Quantum Science அல்லது Quantum Mechanics பற்றிய பல விடயங்கள் எமது பாரம்பரிய அறிவுக்கு புலப்படாத சில முன்னேற்றங்களை அடைந்து இருக்கிறது.
நடக்கும் சம்பவங்களை பற்றிய ஆராய்ச்சி அல்லது சம்பவங்களுக்கு இடையிலான தொடர்பு பற்றிய கருத்துக்கள் எல்லாம் விஞ்ஞான ரீதியான ஆய்வுகளுக்கு உட்படுத்தபட்டு வருகின்ற கோட்பாடுகள்.
கொள்கை அடிப்படையில் மட்டும் அல்லாமல் பல ஆய்வுகளிலும் நிருபிக்கப்பட்ட சில அற்புதமான உண்மைகள் உள்ளன. பௌதீக விளைவுகள் இதுவரை பௌதீகம் தனது பிரயாணத்தை எதை நோக்கி என்பதைபற்றி கொஞ்சம் கோடி காட்டி உள்ளது.
இங்கேதான் இந்த பாரம்பரிய பகுத்தறிவுவாதிகள் கொஞ்சம் தங்களை உயர்த்தி கொள்ளவேண்டும் என்று கருதுகிறேன். சமயவாதிகள் ஏற்கனவே தங்கள் உரிமை கோரலை அல்லது தத்துவ திருட்டு தனத்தை ஆரம்பித்து விட்டார்கள்.
முற்போக்காக முன்னேறிய சிந்தனையாளர்களாக இருக்கவேண்டிய பகுத்தறிவுவாதிகளோ இன்னும் பதினெட்டாம் நூறாண்டு கோட்பாடுகளையே கட்டி பிடித்துகொண்டு இருக்கிறார்கள். அதனால்தான் மக்கள் கொஞ்சம் சமயவாதிகள் பக்கமும் நிற்கிறார்கள். பகுத்தறிவு பேசினாலும் பகுத்தறிவுவாதிகளை இன்னும் Mainstream சிந்தனையாளர்களாக மக்கள் ஏற்க தயங்குகிறார்கள்.
உதாரணமாக மனிதர்களின் உள்ளுணர்வு என்பதை நமது பகுத்தறிவாளர்கள் பெரிதும் வேடிக்கையாக கையாள்வார்கள்.மாறாக சமயவாதிகளோ உள்ளுணர்வுகளை எதோ கடவுள் சமாச்சாரமாக கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்.
உண்மையில் உள்ளுணர்வு என்பது விஞ்ஞான உண்மைதான், பல விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் கூட பலரின் உள்ளுணர்வால் ஏற்பட்ட வரலாற்று உண்மைகள் பல உண்டு, ஐன்ஸ்டீன் கூட விஞ்ஞான ஆய்வுக்கு அறிவைவிட கற்பனை அதிகம் தேவை என்று கூறியுள்ளார்.
ஆர்தர் கிளார்க் போன்ற விஞ்ஞான கற்பனையாளர்களின் கற்பனைகள் பல பின்பு யதார்த்த கண்டுபிடிப்புக்களாக உருவான வரலாறும் உண்டு. கற்பனைகள் பௌதீக கண்டுபிடிப்புக்கள் இடையே உள்ள தொடர்புகள் மட்டும் அல்ல இன்னும் பல விடயங்களை இன்றைய பகுத்தறிவாளர்கள் ஆய்ந்து பார்க்கவேண்டும்.
இன்னும் ஏராளமான விசயங்கள் எழுதவேண்டும்.