சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள்
உங்களை நோக்கி வரும் நிகழ்சிகள் அல்லது சம்பவங்கள் எல்லாமே உங்கள் அழைப்பிதழை பெற்ற பின்பே வருகின்றன.
உங்களுக்கு கிடைக்கும் பொருட்கள் செல்வங்கள் இன்பங்கள் அல்லது துன்பங்கள் எல்லாமே உங்கள் அழைப்பிதழ் கிடைக்காமல் உங்களை நோக்கி வரமுடியாது. இது நிச்சயமான உண்மையாகும். ஒருவரின் காதலோ அல்லது கோபமோ மட்டும் அல்லாது விபத்தும் லாட்டரி அதிஷ்டமும் கூட உங்கள் அழைப்பிதழை பெற்று உங்கள் அனுமதியுடன்தான் உங்களை வந்தடைகின்றது.
இதை விளங்கி கொள்வதில் உள்ள சிக்கல் என்னவென்றால், நீங்கள் உங்களை அறியாமலேயே அழைப்பிதழ்களை அள்ளி வீசி கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு விருப்பமான விடயங்களுக்கும் வீசுகிறீர்கள். உங்களுக்கு விருப்பமே இல்லாத விடயங்களுக்கும் கூட அழைப்பிதழ்களை அள்ளி அள்ளி வீசுகிறீர்கள்.
நீங்களே அழைப்பை அனுப்பி அனுமதியும் கொடுத்துவிட்டு பின்பு எனக்கு ஏன் இது வரவேண்டும் அல்லது இப்படி நடக்கவேண்டும் என்று உங்களை நீங்களே கேள்வி கேட்டு பதில் கிடைக்காமல் குழம்புகிறீர்கள். தெரிந்தோ தெரியாமலோ உங்கள் மனதில் வந்து போகும் எண்ணங்கள் எல்லாமே மின்சாரம்தான் . அவை மிகவும் சக்திவாய்ந்த தொழிற்சாலைகள்தான்.
இந்த பிரபஞ்சத்திற்கு நல்லது கெட்டது விரும்பியது வெறுத்தது என்று ஒன்றும் கிடையாது. உங்கள் மனம் என்ற தொழிற்சாலையில் வரும் மூலபொருள் அதாவது எண்ணங்கள் எல்லாமே சம்பவங்கள் அல்லது பொருட்களாக உருப்பெற்று வெளியேவரும்.
எவ்வளவுக்கு எவ்வளவு அழுத்தமாக மீண்டும் மீண்டும் நினைக்கின்றீர்களோ அவ்வளவு சீக்கிரமாகவும் முழுமையாகவும் அது வெளிவரும். அதாவது அதை நீங்கள் அனுபவமாக பெறுவீர்கள். நேற்று ஒரு சிறு உதாரணம் ஏன் கண்முன்னே இடம்பெற்றது.
ஒரு அம்மையார் சுமார் ஒரு மணித்தியாலமாக யாரோ தனது உறவினர்கள் நண்பர்கள் போன்றவர்களது தீராத நோய்களையும் அதன் தாக்கத்தை பற்றியும் ரொம்பவும் விலாவாரியாக தெளிவான மருத்துவ குறிப்புக்களோடு தொடர்ந்து பேசி கொண்டே இருந்தார். ஏன் இவ்வளவு தூரம் இவற்றை ஒரு மாதிரி ரசித்து ரசித்து பேசுவது போல பேசுகிறார் என்று எண்ணிக்கொண்டேன். ஏனோ அவரது மனதை அந்தவிதமான நோய்களும் அதற்குரிய வேதனை சிகிச்சை போன்ற விசயங்கள் கவர்ந்து கொண்டே இருந்ததை அவதானித்து கொண்டு இருந்தேன்.
அவர் மட்டும் அல்ல நம்மில் பலரும் எமது மனதின் இயங்கு சக்தியை பற்றிய புரிதல் இல்லாமல் தவறான சம்பவங்களுக்கு பச்சை சிக்னல் கொடுத்துகொண்டே இருப்பது அடிக்கடி நடப்பதுதான். திடீரென்று அவரது காலடிக்கு கீழ் படுத்திருந்த நாய் அவரை கடித்து விட்டது. அவர் பதட்டப்பட்டு நாளை டாக்டரை பார்க்க வேண்டும் என்று கூறி போததற்கு அவருக்கு டயபடீஸ் வேறு இருப்பதாகவும் விசனபட்டார்.
சுமார் ஒரு மணித்தியாலம் நோயையும் அதன் வேதனைகளையும் தொடர்ச்சியாக பேசி பேசி ஒரு ஸ்ட்ராங்கான அழைப்பிதழையும் அனுமதியையும் கொடுத்த அவரது எண்ணத்திற்கும் பேச்சிற்கும் பிரபஞ்சம் ஈடு கொடுத்ததாக தான் அந்த சம்பவம் எனக்கு தெரிந்தது.
எமக்கு வாழ்வில் நடைபெறும் நன்மை தீமை எல்லாமே ஏதோ ஒரு காலத்தில் எம்மை அறியாமலோ அல்லது அறிந்தோ நாமே அழைத்துகொண்டவைதான். எனது பழைய நண்பன் ஒருவனிடம் இந்த கருத்துக்களை பற்றி பேசிகொண்டிருந்த போது அவன் தனது அனுபவம் ஒன்றை கூறினான்.
சிறுவயதில் அவனுக்கு சோடா பாக்டரி போடவேண்டும் என்று ஒரு ஆசை இருந்தாம் அதே சமயம் பசு மாடு வளர்த்து ஒரு பெரிய பால் பண்ணை வைக்கவேண்டும் என்றும் விரும்பி இருந்தானாம்..
ஆனால் காலப்போக்கில் அந்த இரு எண்ணங்களும் அவனிடம் அழுத்தமாக இருக்கவில்லை. எனவே அது இரண்டும் நடைபெறவில்லை என்றும் கூறினான். அப்பொழுது நான் அவதானித்தேன் அவன் ஒன்றிரண்டு மாடுகள் வளர்க்கிறான் அதன் பாலை சிலவேளை அவனே கொண்டு சென்று கொடுக்கிறான். அவன் அந்த பாலை சோடா போத்தல்களிலேயே அடைத்து கொண்டு போய் கொடுக்கிறான். ஆகவே அவனது இரண்டு எண்ணங்களுமே ஈடேறி விட்டன என்றுதான் சொல்லவேண்டும் அவனது சிந்தனயில் பாலுக்கும் சோடாவுக்கும் பலமில்லாத அழைப்பையும் அனுமதியையும்தான் கொடுத்திருக்கிறான் எனவே இரண்டுமே சிறிய அளவில் நிறைவேறியுள்ளன.
இதுதான் கனவு காணும்போது அழகாக மகிழ்ச்சியாக கனவு காண வேண்டும். உங்கள் கற்பனைகள் எண்ணைகள் எல்லாமே பிரபஞ்சத்திற்கு நீங்கள் வழங்கும் அனுமதி பத்திரங்கள்.
பரந்து விரிந்த இந்த பிரபஞ்சத்திற்கு உங்கள் விருப்பமே அதன் விருப்பம். உங்கள் மூலம்தான் பிரபஞ்சம் தனது லீலையை ரசிக்கின்றது. உங்களின் ஊடாகத்தான் பிரபஞ்சம் தன்னை தானே செதுக்கி கொண்டிருக்கிறது. நீங்கள் வேறு அது வேறல்ல. நீங்கள் ஒரு கண்ணாடி. உங்கள் முகத்தில் பிரபஞ்சம் தன்னை பார்த்து ரசிகின்றது.
உங்களின் ஒவ்வொரு அசைவுக்கும் அது பதில் கொடுக்கிறது. உங்களின் ஒவ்வொரு எண்ணங்களும் அதற்கு நீங்கள் இடும் கட்டளைகள். உங்களின் எண்ணங்களை இனி இது எனது விருப்பமானதுதானா என்று எண்ணி பார்த்து எண்ணுங்கள். உங்கள் எண்ணங்கள் வேறு விருப்பங்கள் வேறு அல்ல.
இரண்டுமே ஒன்றுதான். இரண்டுமே பிரபஞ்சத்திற்கு நீங்கள் கொடுக்கும் கட்டளைகள்தான்.