அரசாங்க ஆயுதங்களும் விவசாயிகளின் கவசங்களும்.. - கோவி.லெனின்


பறந்து வரும் ட்ரோன்கள், பாய்ந்து வரும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள், பீய்ச்சி அடிப்பதற்கானத் தண்ணீர் வண்டிகள் என முப்படைத் தாக்குதலை விவசாயிகள் மீது தொடுத்திருக்கிறது மோடி தலைமையிலான பாசிச பா.ஜ.க அரசு.

வசந்த பஞ்சமி நாள் (மக மாதம் வளர்பிறை ஐந்தாவது நாள்) என்பதால் வட இந்தியாவில் பட்டம் (காற்றாடி) விடும் வழக்கம் உண்டு. போராட்டத்திற்குத் திரண்டிருந்த விவசாயிகள், தாங்கள் கொண்டு வந்திருந்த பட்டங்களைப் பறக்கவிட்டு வசந்த பஞ்சமியைக் கொண்டாடினர். அவர்கள் மீது கண்ணீர்புகை வீசுவதற்காகப் பறந்து வந்தன ட்ரோன்கள். பட்டத்தின் கயிற்றில் ஒரு ட்ரோனின் ஃபேன் சிக்கிக் கொள்ள, அதை அப்படியே கீழே இழுத்துப்  போட முயன்றனர் விவசாயிகள். அது முள்வேலித் தடுப்புகளுக்கு அந்தப் பக்கமாகப் போய் விழுந்தது. இனி எந்த ட்ரோன் வந்தாலும் இதே நிலைமைதான் என விவசாயிகள் பட்டமும் கயிறுமாக நிற்கத் தொடங்கினர்.


‘வான் வழி’த் தாக்குதல் முறியடிக்கப்பட்டதால், தரை வழித் தாக்குதலுக்குத் தயாரானது காவல்துறை. கண்ணீர்ப் புகை துப்பாக்கிகள் தொடர்ந்து இயங்கின. புகை மூட்டத்தால் விவசாயிகளின் கண்களிலும் உடலிலும் எரிச்சல் ஏற்பட்டது. இதிலிருந்து தப்பிப்பதற்காக, கண்களுக்கு சொட்டு மருந்து  விட்டுக்கொண்ட விவசாயிகள், உடம்பில் பல் விளக்கும் பேஸ்ட்டை அப்பிக் கொண்டனர். முல்தானி மெட்டி எனப்படும் ஒரு வகை களிமண் கலவையையும் பூசிக்கொண்டனர்.

இந்த முல்தானி மெட்டி பெரும்பாலும் அழகு நிலையங்களில் ஃபேஸியலுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. அந்த அழகுப் பொருளே ஆபத்திலிருந்து காக்கும் கவசமானது விவசாயிகளுக்கு. தண்ணீரில் நனைக்கப்பட்ட கோணி சாக்குகளும் கண்ணீர்ப் புகைக் குண்டிலிருந்து பாதுகாக்கும் கவசங்களாகப் பயன்படுகின்றன.

நெடுஞ்சாலைகளில் கூரான இரும்பு ஆணிகளைப் பதித்து, விவசாயிகளின் டிராக்டர்களைப் பஞ்சராக்கும் புதிய ‘கண்ணி வெடி’களும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.  இந்தியாவிடம் இதுபோல இன்னும் என்னென்ன புதுப்புது ஆயுதங்கள் இருக்கின்றன என்பது எல்லையில் வாலாட்டும் சீன ராணுவத்திற்குக் கூடத் தெரியாது.  உரிமைக்காகப் போராடும்  விவசாயிகள் அவற்றை எதிர்கொண்டு வருகின்றனர்.

 - கோவி.லெனின்

Previous Post Next Post

نموذج الاتصال