குப்தர்கள் அமைத்த ஹிந்துப் பேரரசைப் பற்றி நேரு - ஆதனூர் சோழன்

ஏப்ரல் 29, 1932

தென் இந்தியர் வெளிநாடுகளில் குடியேற்றங்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர். அதேவேளையில், வட இந்தியாவில் குடியேறி பிழைக்க வந்து அரசு அமைத்த அன்னியர்களுக்கு எதிராக ஒரு போர் தொடங்கியிருந்தது.

300 ஆண்டுகள் ஆட்சி செய்த குஷாணர்களின் வலிமை குன்றி, அந்த பேரரசு வீழ்ச்சி அடைந்தது. இந்நிலையில்தான் இந்தியாவுக்கு வந்து குடியேறிய சாகர், ஸிதியர், துருக்கியர் உள்ளிட்டோர் சிறு சிறு அரசுகளை ஆட்சி செய்தனர். இந்தியாவில் குடியேறியவர்கள் இந்தியாவிலேயே வாழ விரும்பி வந்தவர்கள். அவர்கள் இந்திய நாகரிகத்தையும் பண்பாட்டையும் ஏற்றுக் கொண்டவர்கள்.

மதம், கலை, நாகரிகம் ஆகியவற்றுக்கு இந்தியாவே அவர்களின் தாயகமாக இருந்தது. குஷாணர்களும் பவுத்த மதத்தை கடைப்பிடித்தாலும், இந்திய பழக்க வழக்கங்களையே பின்பற்றினர்.  இந்தியர்களாகவே தங்களை கருதி ஆண்டதால்தான் நீண்டகாலம் அவர்கள் ஆட்சி செய்ய முடிந்தது. அதாவது, தங்களை அன்னியர்கள் என்று இந்தியர்கள் கருதிவிடக்கூடாது என்றே அவர்கள் விரும்பினர்.

ஆரியபட்டா


ஆனால், தங்களை அன்னியர் ஆட்சி செய்கிறார்கள் என்ற உணர்ச்சி இந்திய வம்சாவளி வீரர்களுக்கு இருந்தது. குஷாணர்கள் ஆட்சிக் காலத்திலேயே இந்தியாவின் பல பகுதிகளில் ஆரிய அரசுகள் அமைந்திருந்தன. இந்நிலையில்தான் பாடலிபுத்திரத்தை ஆட்சி செய்த சந்திரகுப்தன் அன்னிய அரசுகளுக்கு எதிராக கிளம்பினான். அன்னியர்களை ஒழிக்க ஆரிய அரசுகளை ஒன்றுசேர்க்க முயன்றான்.

ஏற்கெனவே கொந்தளித்துக் கொண்டிருந்தவர்கள் அவன் தலைமையில் ஒன்றுசேர்ந்து போருக்கு தயாரனார்கள். சரி, யார் இந்த சந்திரகுப்தன்? அசோகனின் பாட்டனான சந்திரகுப்தன் வேறு. இவன் வேறு. இதை நீ தெளிவாக மனதில் வைக்க வேண்டும். இவனுக்கும் மௌரிய வம்சத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவன் ஒரு சிற்றரசன். இவனுடைய காலம் நாலாம் நூற்றாண்டின் தொடக்கம்.  அதாவது கி.பி. 308ஆம் ஆண்டு. அதாவது, அசோகன் இறந்து 534 ஆண்டுகள் ஓடிவிட்டன. அசோகனின் வம்சமே காணமால் போயிருக்கும்.

சந்திரகுப்தனுக்கு ஆசையும் திறமையும் இருந்தது. வட இந்திய ஆரிய அரசர்களோடு ஒருவித கூட்டு ஏற்படுத்திக் கொள்ள முயன்றான். அதற்காக வலிமையும் மக்கள் ஆதரவும் கொண்ட லிச்சாவி வம்சத்தைச் சேர்ந்த குமாரதேவியை மணந்தான். தேவையான ஏற்பாடுகளை செய்து முடித்த சந்திரகுப்தன் அன்னிய அரசுகள் மீது போர் தொடங்கினான். அவனுக்கு சத்திரியர்களும் ஆரியர்களும் ஆதரவு தெரிவித்தனர். பன்னிரண்டு ஆண்டு போருக்கு பிறகு வட இந்தியாவின் ஒரு பாகத்தை கைப்பற்றினான். தன்னை பேரரசனாக முடி சூட்டிக்கொண்டான். 

இப்படித்தான் குப்த வம்சம் ஆரம்பமாயிற்று. 200 ஆண்டுகளுக்குப் பிறகு ஹூணர்களால் ஆபத்து ஏற்பட்டது. குப்தப் பேரரசு காலம் ஆரியர்களின் கை மேலோங்கி இருந்த காலம். ஆரியரல்லாத பார்த்தியர், துருக்கியர் உள்ளிட்ட அன்னிய அரசர்கள் ஒழிக்கப்பட்டனர். அதாவது, பிற மத வெறுப்பு தலைதூக்கியது. இந்திய உயர்குல ஆரியன் தன்னைத் தவிர மற்ற எல்லோரையும் வெறுத்தான். குப்தர்கள் தங்களால் வெல்லப்பட்ட ஆரியர் அல்லாத அரசர்களிடம் மிகவும் கடுமையாக நடந்துகொண்டனர்.

சந்திரகுப்தனுடைய மகன் சமுத்திரகுப்தன் தந்தையை விடப் வீரமும், போர்த் திறமையும் கொண்டவன். பெரிய தளபதியாக இருந்தான். அவன் முடிசூட்டிக் கொண்டதும் இந்தியாவின் பெரும்பகுதியை கைப்பற்றினான். ஆனால் தென் இந்தியாவில் அவனுடைய அதிகாரம் செல்லவில்லை. வடக்கில் குஷாணர்கள் சிந்து நதிக்கு அப்பால் துரத்தப்பட்டனர். 

சமுத்திர குப்தனுடைய மகன் இரண்டாம் சந்திரகுப்தன் நெடுங்காலமாக சாகர் அல்லது துருக்கியரின் பிடியில் இருந்த  கத்தியவார், குஜராத் ஆகியவற்றை வென்றான். அவன் விக்கிரமாதித்தியன் என்ற பட்டப்பெயரை சூட்டிக் கொண்டான். இந்தப் பட்டப்பெயர் அடுத்தடுத்த மன்னர்களுக்கும் வருவதால் குழப்பம் ஏற்படுகிறது. 

காளிதாஸ்


டில்லியில் ‘குதுப்மினார்’ என்ற தூணுக்கு அருகில்  பெரிய இரும்புத் தூண் ஒன்றைப் பார்த்தது உனக்கு நினைவிருக்கிறதா? இது விக்கிரமாதித்தியன் கட்டிய வெற்றித் தூண் என்று சொல்லப்படுகிறது. சிறந்த வேலைப்பாடமைந்த அந்த தூணின் உச்சியில் தாமரைப் பூ செதுக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் குப்தர்களின் காலம் ஆரியர்களின் காலமாக இருந்தது.  ஆரியர்களின் பழைய கலைகளும் சமஸ்கிருதக் கல்வியும் புத்துயிர் பெற்றன. கிரேக்கர்களாலும் குஷாணர்களாலும் இந்தியர்களின் வாழ்க்கையில் பரவிய கிரேக்க, மங்கோலிய சாயல் அழிக்கப்பட்டது. அதற்கு பதிலாக ஆரியப் பழக்க வழக்கங்கள் திணிக்கப்பட்டன. சமஸ்கிருதம் அரசாங்க மொழியாக  இருந்தது. ஆனால் அந்தக் காலத்திலேயே சமஸ்கிருதம் மக்கள் பேசும் மொழியாக இல்லை. பிராகிருத மொழியே பேச்சு மொழியாக இருந்தது. சமஸ்கிருதம் மக்கள் பேசும் மொழியாக இல்லாவிட்டாலும் உயிருள்ள மொழியாக இருந்தது. வட மொழியில் காவியமும், நாடகமும் படைக்கப்பட்டன.

மகாகவி காளிதாசன் வாழ்ந்த காலம் இது. விக்கிரமாதித்தனின் அரசவையில் சிறந்த கவிவாணரும், இசைவாணரும், கலைவாணரும் இருந்தனர். அவர்கள் நவரத்தினங்கள் என்று அழைக்கப்பட்டனர். அந்த நவரத்தினங்களில் காளிதாசன் ஒருவன்.

சமுத்திரகுப்தன், தனது தலைநகரைப் பாடலிபுத்திரத்தில் இருந்து அயோத்திக்கு மாற்றினான். வால்மீகியின் ராமாயண காவியத்தில் சொல்லப்பட்ட ராமன் வாழ்ந்த அயோத்தியை அவன் தனது ஆரிய மனோபாவத்துக்கு ஏற்ற இடமென்று நினைத்திருக்கலாம்.

ஆரியத்துக்கும் பிராமண மதத்துக்கும் புத்துயிர் கொடுத்த குப்தர்கள் பவுத்த மதத்தை ஆதரிக்காமல் கைவிட்டனர். குப்தப் பேரரசில் சத்திரிய அரசர்கள் நிறைய இருந்தனர். இவர்கள் பிரபுத்துவ மனநிலையில் இருந்தார்கள். ஆனால், பவுத்த மதத்தில் ஜனநாயகம் அதிகமாக இருந்தது. பவுத்த மதத்தின் மஹாயானப் பிரிவைக் குஷாணர்களும் வட இந்தியாவிலிருந்த அன்னிய அரசர்களும் ஆதரித்தது இன்னொரு காரணம். எனினும் பவுத்தர்கள் துன்புறுத்தப் பட்டதாக தெரியவில்லை. பவுத்த மடங்கள்  கல்விச் சாலைகளாகவே இருந்தன. பவுத்தம் வளர்ந்திருந்த இலங்கையுடன் குப்தர்கள் நட்பாக இருந்தனர். இலங்கை மன்னனான மேகவர்ணன் சமுத்திரகுப்தனுக்கு  வெகுமதிகள் அனுப்பினான். சிங்கள மாணவர்களுக்காக கயாவில்  ஒரு மடம் ஏற்படுத்தினான்.

ஆனால் இந்தியாவில் பௌத்த மதம் மங்கி மறைந்துவிட்டது. பிராமணர்களோ அல்லது அரசாங்கமோ தங்கள் பலத்தை வெளிப்படையாக உபயோகித்துப் பவுத்த மதத்தை அழிக்கவில்லை. ஆனால், பவுத்த கோட்பாடுகளை தனதாக மாற்றி ஏற்றுக் கொண்டு  அழித்தது எனலாம்.

கிட்டத்தட்ட இந்தக் காலத்தில்தான் சீன யாத்திரிகர்களுள் மிகவும் புகழ்பெற்ற ஒருவரான பாஹியான் இந்தியாவுக்கு வந்தார். பவுத்த மத நூல்களைத் தேடிவந்தார். மகத நாட்டு மக்கள் இன்பமாக வாழ்ந்தனர். நீதி நிர்வாகம் செம்மையாக நடைபெற்றது. யாருக்கும் மரண தண்டனையே இல்லை என்று இவர் எழுதி இருக்கிறார்.  

புத்த கயா அழிந்து கிடந்தது. புத்தர் பிறந்த கபிலவஸ்து காடு மண்டிக் கிடந்தது. ஆனால் பாடலிபுத்திர மக்கள் செல்வச் செழிப்புடன் அறவழியில் நடந்தனர் என்று இவர் சொல்கிறார். அக்காலத்தில் வசதி படைத்த பல பவுத்த மடங்கள் இருந்தன. வழி நெடுகிலும் தர்மச் சத்திரங்கள் இருந்தன. அங்கே வழிப் போக்கர்கள் தங்கி, உண்டு இளைப்பாறிச் சென்றார்கள் என்றும் எழுதி இருக்கிறார். 

இந்தியாவில் சுற்றிவிட்டு இலங்கைக்குச் சென்ற பாஹியான் அங்கே இரண்டு ஆண்டுகள் தங்கினார். ஆனால் அவருடைய தோழரான டவோ சிங் இந்தியாவை விரும்பி இங்கேயே தங்கிவிட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு பாஹியான் இலங்கையிலிருந்து கடல் வழியாகச் சீனாவுக்குச் சென்றார். 

விக்கிரமாதித்தியன் 23 ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவனுக்குப் பின் அவனுடைய மகன் குமாரகுப்தன் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான். அடுத்தபடியாக கி.பி. 453ஆம் ஆண்டு ஸ்கந்த குப்தன் பட்டத்துக்கு வந்தான். இவன் ஒரு புதிய பகையை எதிர்த்து நிற்க வேண்டியிருந்தது. அந்தப் பகை குப்த சாம்ராஜ்யத்தின் முதுகையே ஒடித்துவிட்டது. இதைப்பற்றி அடுத்த கடிதத்தில் சொல்கிறேன்.

அஜந்தாவிலுள்ள சிறந்த சித்திரங்களும் மண்டபங்களும் குப்தர் காலத்துக் கலையின் உயர்வுக்கு சாட்சியாக இருக்கின்றன. அவற்றைப் பார்க்கும் போது நாம் வியப்படைகிறோம். ஆனால் கெடுவாய்ப்பாக  நீண்ட காலமாக காற்று, மழையில் சேதமடைகின்றன.

இந்தியாவில் குப்தர்கள் ஆண்ட காலத்தில் உலகின் மற்ற பகுதிகளில் என்ன நடந்தது? முதலாவது சந்திரகுப்தனும் கான்ஸ்டாண்டிநோபிளைக் உருவாக்கிய கான்ஸ்டண்டைன் என்ற ரோமப் பேரரசரும் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள். பிறகு வந்த குப்தர்களின் காலத்தில்தான் ரோமப் பேரரசு கிழக்கு பேரரசு என்றும் மேற்கு பேரரசு என்றும் பிளவுபட்டது. இறுதியில்  மேற்கு பேரரசு வட ஐரோப்பியர்களால் வெல்லப்பட்டது. இவ்வாறு ரோம பேரரசு வலிமை குறைந்த காலத்தில் பெரிய தளபதிகளையும், பலம் பொருந்திய படைகளையும் கொண்ட அரசு இந்தியாவில் நடைபெற்றது. சமுத்திர குப்தனை இந்திய நெப்போலியன் என்று அழைப்பார்கள். அவனுக்கு நாடு பிடிக்கும் ஆசை இருந்தாலும், இந்தியாவுக்கு வெளியில் அவன் செல்லவில்லை. 

குப்தர்களின் காலத்தைப் பலாத்காரமும், போரும், வெற்றியும் மிகுந்த ஆரிய பேரரசின் காலம் என்றே கூறவேண்டும். ஆனால் ஒவ்வொரு தேசத்தின் வரலாறிலும் காலங்கள் பல வருகின்றன. நாளடைவில் அவற்றை யாரும் கருத்தில் கொள்வதில்லை. குப்தர்களுடைய காலத்தை இந்தியாவிலுள்ள நாம் பெருமையுடன் நினைப்பதற்கு அந்தக் காலம் கலை இலக்கியத்தின் மறுமலர்ச்சி காலமாக இருந்ததே காரணம்.  

Previous Post Next Post

نموذج الاتصال