கருப்பையும் சிவப்பையும் பிடிக்காதவர்கள் யாராச்சும் இருக்க முடியுமா?
கருப்பு தந்தை பெரியார் கற்பித்த சுயமரியாதையின் அடையாளம். சிவப்போ பொதுவுடமைத் தத்துவத்தின் அடையாளம்.
இந்த இரண்டு வண்ணங்களும் இணைந்ததே திராவிட முன்னேற்றக் கழகமாக உதயமானது.
ஆனால், இப்போது எனக்கு கருப்பின் மீதும், சிவப்பின் மீதும், இளஞ்சிவப்பான காவியின் மீதும் கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு படரத் தொடங்கியிருக்கிறது.
காவிகள் தங்கள் பிரித்தாளும் அரசியலில் தீவிரம் காட்டுகிறார்கள். அதாவது அவர்கள் தங்களுடைய நோக்கத்தில் தெளிவாக இருக்கிறார்கள்.
பெரியார் பிறந்த மண்ணிலேயே அவர்கள் தங்களுடைய ஆட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள்.
ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து காப்பாற்றியதிலிருந்து, அவரை மர்மமான முறையில் எம்ஜியார் சமாதி வளாகத்தில் அடக்கம் செய்தது வரை காவிகள் காட்டிய அக்கறை எனக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பில் இருந்து காப்பாற்றிய காவிகளுக்குப் போட்டியாக, அதே வழக்கில் தண்டனையை எதிர்நோக்கியுள்ள சசிகலாவை காப்பாற்ற திராவிடர் கழகம் துடிப்பது எனக்கு பிடிக்கவில்லை.
அதாவது பார்ப்பனர்கள் எந்தத் தவறையும் செய்துவிட்டு தப்பிக்க முடியும் என்ற நிலை இருப்பதை நாம் விமர்சிக்கிறோம். ஆனால், அதற்கு போட்டியாக திராவிடத்தின் பேராலும் தவறு செய்து தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் ஒரு பெண்ணை காப்பாற்ற திராவிடர் கழகம் முயற்சிப்பதை எப்படி ஏற்க முடியும்?
அதாவது, காவிகளுக்கு சற்றும் குறைவற்றவர்கள் நாங்கள் என்று நிரூபிக்கும் முயற்சியாகவே இதை பார்க்கிறேன்.
சரி, திராவிடர் கழகம் இப்படியென்றால், கம்யூனிஸ்ட்டுகள் சசிகலாவைத் தாங்குவதைப் பார்க்கும்போது குமட்டிக்கொண்டு வருகிறது.
ஊழலில் ஊறித்திளைத்த ஜெயலலிதாவுக்கும் சப்பைக் கட்டு கட்டினார்கள். இப்போ, அவருக்கு சற்றும் குறைவில்லாத சசிகலாவையும் தூக்கிச் சுமக்க தயாராகிவிட்டார்கள்.
எனவேதான், தாழ்ந்து கிடக்கும் தமிழகத்தை சுயமரியாதையையும், பொதுவுடமை தத்துவத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள, கருப்பையும், சிவப்பையும் தனது அடையாளமாக கொண்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தை எனக்கு ரொம்பவும் பிடிக்கிறது என்கிறேன்.
(சசிகலாவையும், டிடிவி தினகரனையும் திராவிடச் செல்வியாகவும், திராவிடச் செல்வனாகவும் சித்தரிக்க முயன்ற நேரத்தில் எழுதப்பட்டது)