முத்தமிழறிஞர் கலைஞரின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு - ஆதனூர் சோழன்



முன்னுரை

முத்தமிழறிஞர் என்றும் கலைஞர் என்றும் அழைக்கப்படும் மு.கருணாநிதி அவர்கள், தமிழ்நாட்டின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்தவர். 19 ஆண்டுகள் ஆட்சி செய்தவர். 

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் 75 ஆண்டுகள் தவிர்க்கவே முடியாத ஆளுமையாக வாழ்ந்தவர். திமுகவின் தலைவராக 50 ஆண்டுகள் தொடர்ச்சியாக பொறுப்பு வகித்தார். நவீன தமிழ்நாட்டின் முக்கிய அடையாளங்களாக உள்ள திட்டங்கள், கட்டுமானங்கள் அனைத்தையும் வடிவமைத்து உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி.

அரசியல், சினிமா, நாடகம், இலக்கியம் என பல துறைகளில் வித்தகராக திகழ்ந்தவர் கலைஞர். எல்லாத் தரப்பு மக்களையும் கவரும் வகையில் சிறந்த மேடைப் பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் மரணம் வரை தனது இடத்தைத் தக்கவைத்தவர்.

தமிழ்நாட்டின் முதல்வராக ஐந்து முறை பதவி வகித்தவர். கால்பதித்த அனைத்து துறைகளிலும் தன்னை முதன்மைப்படுத்த உழைத்தவர். தமிழ் இலக்கியங்களை தன்னுடைய பாணியில் மறுவாசிப்புக்கு கொடுத்தவர். அத்தகைய தலைவர் கலைஞரின் வாழ்க்கை வரலாறு பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

தொடக்ககால வாழ்க்கை

1924ம் ஆண்டு ஜுன் 3ம் தேதி திருவாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்ற கிராமத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மாளுக்கும் பெண்குழந்தைகளுக்குப் பிறகு ஒரே மகனாக பிறந்தார் கலைஞர். 

கிராமத்தில் இசைப் பயிற்சிக்கு சென்ற இவர், அங்கு தனது சுயமரியாதை பாதிக்கப்படுவதாகக் கூறி பயிற்சியை புறக்கணித்தார். அதையடுத்து, தந்தை முத்துவேலர், வீட்டிலேயே ஆசிரியர் வைத்துப் பாடம் கற்பித்தார். முத்துவேலர் சிறந்த எழுத்தாளராகவும், நாட்டு வைத்தியராகவும் திகழ்ந்தார். கவிதை வடிவில் உள்ளூர் அநியாயங்களை கண்டித்து நிறைய எழுதி இருக்கிறார். இவருடைய எழுத்துகளும் துணிச்சலுமே தன்னை உருவாக்கியதாக கலைஞர் கூறியிருக்கிறார்.  தொடக்கக் கல்வியை முடித்து, உயர்நிலைப் பள்ளிக்கு திருவாரூர் சென்றார். அங்கு இவரை ஐந்தாம் வகுப்பில்கூட சேர்க்க மறுத்தார்கள். 

ஆனால், தன்னை பள்ளியில் சேர்க்காவிட்டால், எதிரே உள்ள குளத்தில் குதித்து உயிரை விடப் போவதாக கூறினார். அவருடைய உறுதியைக் கண்ட தலைமை ஆசிரியர் பள்ளியில் இடம் கொடுத்தார். பள்ளியில் சேர்ந்ததும், அடுத்தடுத்து தனது திறமையை வெளிப்படுத்தி தலைமை ஆசிரியரிடம் தன்னை நிரூபித்தார். இவருடைய படிப்புக்காக குடும்பத்தினர் திருவாரூருக்கு இடம் பெயர்ந்தனர்.

திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே நாடகம், கவிதை என்று எழுத்தில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். விளையும் பயிர் முளைக்கும்போதே தெரியும் என்பதற்கு இவர் உதாரணமாக இருந்தார். பள்ளிப் பாடங்களைத் தவிர அன்றைக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கிய திராவிட இயக்கத் தலைவர்களின் அரசியல், சமூகக் கருத்துகளையும் படித்தார். படிக்கும்போதே கையால் எழுதி, மாணவநேசன் என்ற பத்திரிகை நடத்தினார். மாணவர் மன்றம் தொடங்கி 200 மாணவர்களுக்கு தலைவராக வழிநடத்தினார். அறிஞர் அண்ணா நடத்திய திராவிடநாடு இதழில் இவர் எழுதி அனுப்பிய இளமைப் பலி என்ற கட்டுரை வெளியாகியது. அடுத்து சிறிது நாட்களில் திருவாரூர் வந்த அண்ணா, கலைஞரை அழைத்துவரச் செய்து பேசினார். அவருடைய வயதை அறிந்த அவர், படிப்பில் கவனம் செலுத்தும்படி அறிவுரை கூறிச் சென்றார். 

அரசியல் வாழ்க்கை

1938 ஆம் ஆண்டு, தமிழ்நாடு முழுவதும் பரவி இந்தி எதிப்புப் போரில் தமிழ்க் கொடி ஏந்தி மாணவர்களைத் திரட்டி போராட்டம் நடத்தினார். எட்டாம் வகுப்பு படிக்கும்போதே, நட்பு என்ற தலைப்பில் உரையாற்றி ஆசிரியர்களையே வியப்படைய வைத்தார்.  அதே நேரத்தில்தான் தமிழ்நாடு மாணவர் மன்றம் தொடங்கி பாரதிதாசனின் வாழ்த்தைப் பெற்றார். பேராசிரியர் அன்பழகன், கே.ஏ.மதியழகன் ஆகியோரை அழைத்துப் பேச செய்தார். 1942ஆம் ஆண்டு மாத இதழாக ‘‘முரசொலி’’யை வெளியிட்டார். அதில் ‘‘சேரன்’’ என்ற புனைப் பெயரில் கட்டுரைகளை எழுதினார்.

முரசொலி ஏடு கண்டு மகிழ்ந்த பெரியார், தன்னுடன் கூட்டங்களில் பேச கலைஞரை அழைத்துக் கொண்டார். 1945ல் புதுவையில் காங்கிரஸ் கும்பல் தாக்கியதில் கலைஞர் காயமடைந்து மயங்கி விழுந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பெரியாரின் ‘குடியரசு’ வார இதழில் துணை ஆசிரியரானார்.

பெரியாரின் அனுமதியோடு சேலம் மார்டன் தியேட்டரில் சினிமா பணியைத் தொடங்கினார். 1949ல் திமுக உருவானபோது அண்ணாவுடன் இணைந்தார் கலைஞர். கட்சி வளர்ச்சியில் கலைஞரின் பங்கு அண்ணாவை வெகுவாக ஈர்த்தது. கல்லக்குடி போராட்டத்திற்கு தலைமை வகித்த கலைஞர், திமுகவை பட்டி தொட்டியெங்கும் அறிமுகப்படுத்த அந்தப் போராட்டத்தை பயன்படுத்தினார். 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, ஆறுமாதங்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். 1967 தேர்தலில் திமுக வெற்றிபெற்று அண்ணா தலைமையில் அமைச்சரவை பொறுப்பேற்றது. அதில் கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சரானார். 1969 பிப்ரவரி மாதம் அண்ணா மறைந்தார். அதையடுத்து பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் கலைஞர் முதலமைச்சரானார். 

அவர் மறையும்வரை 5 முறை முதல்வராக பொறுப்பு வகித்தார். அவருடைய ஆட்சிக் காலத்தில்தான் தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் நவீன முன்னேற்றம் கண்டது. தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய அடையாளங்கள் அனைத்தும் அவர் உருவாக்கியவைதான். குறிப்பாக கல்வி வளர்ச்சியிலும், சமூக நலத்திட்டங்களிலும் கலைஞரின் பங்கு தொலைநோக்குப் பார்வை கொண்டது ஆகும்.

1957 முதல் 2016 வரை போட்டியிட்ட அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றிபெற்றார். ஒருமுறை எம்எல்சியாகவும் இருந்திருக்கிறார். 

படைப்புகள்

பராசக்தி, மனோகரா, மந்திரிகுமாரி, மலைக்கள்ளன், உள்ளிட்ட 75 திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார். குறளோவியம், சங்கத்தமிழ், தொல்காப்பியப் பூங்கா உள்ளிட்ட பல உரை நூல்களை எழுதியிருக்கிறார். ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டிச்சிங்கம், தாய் காவியம் உள்ளிட்ட வரலாற்றுப் புதினங்களையும், சிறுகதைகள், கட்டுரை நூல்கள், பொன்மொழிகள்,   உரைத் தொகுப்புகள், உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதங்கள், நெஞ்சுக்கு நீதி என்ற தலைப்பில் தன்வரலாறு நூல்கள் 6 தொகுப்புகள் என கலைஞர் ஏராளமாக எழுதிக் குவித்திருக்கிறார்.

முடிவுரை

கலைஞர் 94 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தார். பராசக்தி திரைப்படத்தில், தென்றலைத் தீண்டியதில்லை, தீயைத் தாண்டியிருக்கிறேன் என்று கதாநாயகனுக்கு வசனம் எழுதினார் கலைஞர். அது அவருடைய சொந்த அனுபவத்தில் இருந்து எழுதப்பட்டது. அவருடைய வாழ்க்கையே போராட்டமாக அமைந்தது. எதிரிகள் இல்லாவிட்டால் வாழ்க்கை ருசிக்காது என்று சொல்லும் அளவுக்கு அவர் போராட்டங்களையும், எதிர்ப்புகளையும், துரோகங்களையும் சந்தித்திருக்கிறார். அதேசமயம், ஆளுங்கட்சியாக இருக்கும்போது மக்களுக்கான நல்ல திட்டங்களை நிறைவேற்றினார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது, மக்களுக்கான நல்ல திட்டங்களை நிறைவேற்ற ஆளுங்கட்சியை வலியுறுத்தி போராடினார். மாநில உரிமைக்காகவும், மொழி உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் எழுப்பினார். 


Previous Post Next Post

نموذج الاتصال