அமெரிக்க வானியல் அறிஞரான எட்வின் ஹப்பிள், நமது நட்சத்திர மண்டலத்தைத் தாண்டி ஏராளமான நட்சத்திர மண்டலங்கள் இருப்பதை வெளிப்படுத்தினார். விண்இயற்பியலில் அவருடைய சேவைக்காக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய தொலைநோக்கிக்கு “ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்” என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. அவரைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.
* அமெரிக்க வானியல் அறிஞரான எட்வின் ஹப்பிள், 1889 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி மிசூரியில் உள்ள மாஷ்ஃபீல்ட் என்ற இடத்தில் பிறந்தார். 1953 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி மரணம் அடைந்தார்.
* நமது பால்வெளி மண்டலத்தைத் தவிர வேறு நட்சத்திர மண்டலங்களும் இருப்பதை வெளிப்படுத்தினார். இதையடுத்து, அறிவியல் துறையில், குறிப்பாக விண்ணியல் ஆய்வுகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினார். விண்ணில் ஒரு பால்வீதி மட்டுமே இருப்பதாக முன்னர் நம்பப்பட்டது. ஆனால், வேறு நட்சத்திர மண்டலமும் இருப்பதை 1925 ஆம் ஆண்டு வெளியிட்டார் ஹப்பிள். இது பிரபஞ்சம் பற்றிய நமது கருத்துக்களில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
* இளம் வயதில் திறன்பெற்ற விளையாட்டு வீரராகவும், சிறந்த மாணவராகவும் விளங்கினார். தான் ஈடுபட்ட விளையாட்டுத் துறையில் போட்டியிட்டு பெரிய சாதனைகளைப் படைத்தார்.
* சிகாகோ பல்கலைக் கழகத்தில் கணிதம், வானியல், தத்துவம் ஆகிய படிப்புகளில் கவனம் செலுத்தினார். பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் ரோட்ஸ் ஸ்காலராக மாறினார். கப்பா சிக்மா பிரேட்டர்னிட்டி உறுப்பினராகவும் மாறினார்.
* பூமியிலிருந்து ஒரு பால்வீதி அதிக தொலைவுக்கு செல்லச் செல்ல அதிலிருந்து வெளியாகும் சிவப்பு ஒளியின் அளவு அதிகரிக்கும் என்பதை ஹப்பிள் கண்டுபிடித்தார். இது ஹப்பிள் விதி என்று அழைக்கப்படுகிறது. இதன்மூலம், பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் இந்த விதியை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஏற்றுக் கொள்ளத் தவறிவிட்டார். பின்னர், இதனை பின்பற்றாதது தனது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு என்று ஒப்புக் கொண்டார்.
* சாதனையாக கருதப்படும் நாஸாவின் மிகப்பெரிய டெலஸ்கோப்பிற்கு ஹப்பிள் டெலஸ்கோப் என்று பெயரிடப்பட்டது. இது 1990 ஆம் ஆண்டு விண்வெளியில் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த தொலைநோக்கி அளித்துவரும் தகவல்கள் மற்றும் படங்கள், விண்இயற்பியல் துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இது தவிர ஒரு குறுங்கோளுக்கும், நிலவில் உள்ள ஒரு பள்ளத்தாக்கிற்கும் ஹப்பிள் பெயரை சூட்டியுள்ளனர்.