மகா அசோகரைப் பற்றி நேரு - ஆதனூர் சோழன்


மகா அசோகர்

மார்ச் 30, 1932

அரசர்களையும் சிற்றரசர்களையும் நான் மதிப்பதில்லை. அவர்களை புகழ்வதற்கு உரிய எதுவும் அவர்களிடம் இல்லை என்பது எனது கருத்து. ஆனால், அரசனாகவும் பேரரசராகவும் இருந்தும் உண்மையில் பெரியவனாகவும் புகழுக்கு உரியவனாகவும் வாழ்ந்த ஒருவனைப் பற்றி பேசப்போகிறேன்.

 அவன்தான் அசோகன். சந்திரகுப்த மௌரியனுடைய பேரன். எச்.ஜி.வெல்ஸ் என்னும் ஆங்கில ஆசிரியர் தம்முடைய Outline of History என்னும் நூலில் அசோகரைப் பற்றி இப்படிக் கூறுகிறார். 

“வரலாறு நெடுகிலும் ஏராளமான மன்னர்களின் பெயர்கள் இருக்கலாம். ஆனால், அந்தப் பெயர்களுக்கு மத்தியில் அசோகனின் பெயர் ஒப்பற்ற பெருமையுடன் ஒரு நட்சத்திரம் போல ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது. வோல்காவிலிருந்து ஜப்பான் வரையில் அவனுடைய பெயர் நிலைத்திருக்கிறது. சீனாவிலும், திபெத்திலும், அவனுடைய கொள்கையை விட்டுவிட்ட இந்தியாவிலும்  அவனுடைய பெருமை தொடர்கிறது. கான்ஸ்டண்டைன் (Constantine) அல்லது சார்லமேன் (Charlemagne) ஆகியோரின் பெயர்களை அறிந்தவர்களை விட அசோகனை அறிந்திருக்கிறார்கள்.”

இவர் அசோகனை வானளாவப் புகழ்ந்திருக்கிறார் என்றாலும்  அவ்வளவும் அவனுக்குத் தகும். இந்திய வரலாறில் இவனுடைய காலத்தைப் படிக்கும் இந்தியர்கள் நிஜமாகவே மகிழ்ச்சி அடையலாம்.

கி.மு.300க்கு முன்பே சந்திரகுப்தன் இறந்துவிட்டான். அவனுக்குப் பின் அவனுடைய மகன் பிந்துசாரன் 25 ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவனுடைய ஆட்சியில் கிரேக்க உலகத்தோடு தொடர்புகளை காப்பாற்றினான். எகிப்து அரசனாகிய தாலமியின் தூதனும், மேற்கு ஆசியாவை ஆட்சி செய்த செலூகஸின் மகன் ஆண்டியோகஸ் (Antiochus) அனுப்பிய தூதனும் அவனுடைய அரசவைக்கு வந்தனர். இந்தியாவில் உற்பத்தியான அவுரியைக் கொண்டு எகிப்து நாட்டினர்  துணிகளுக்குச் சாயம் தோய்த்தார்கள். அவர்கள் பதப்படுத்திய மம்மிகளை இந்திய மஸ்லின் துணிகளில் சுற்றிப் பாதுகாத்தார்கள். பீகாரில் கண்டுபிடிக்கப்பட்ட சில பழங்காலச் சின்னங்களில் இருந்து மௌரியர் காலத்துக்கு முன்பே அங்கு கண்ணாடி பாத்திரங்கள் செய்திருக்கலாம் என்று தெரிகிறது.

சந்திரகுப்தன் அரசவைக்கு வந்திருந்த கிரேக்க தூதர் மெகஸ்தனிஸ்  இந்தியர்கள் அலங்கார ஆடை அணிகலன்களை விரும்பியதாக எழுதியிருக்கிறார். தங்கள் உயரத்தை அதிகப்படுத்த ஒருவித பாதணிகளை பயன்படுத்தினர் என்றும் கூறுகிறார். இதைக் கேட்க நீ ஆச்சரியப்படுவாய். ஆகவே உயர்ந்த குதிகால்கள் கொண்ட பாதணிகள் நீண்ட காலத்துக்கு முன்பே இருந்தவை என்பது புரியும்.

பிந்துசாரனுக்குப் பின் கி.மு.268ஆம் ஆண்டு அசோகன் பொறுப்பேற்றான். வட இந்தியா, மத்திய இந்தியாவுடன் மத்திய ஆசியா வரை பரவியிருந்த பேரரசுக்கு தலைவன் ஆனான். தெற்கிலும் தென்கிழக்கிலும் தன் பேரரசுக்குள் அடங்காமல் இருந்த வேறு பல நாடுகளையும் கைப்பற்ற நினைத்தான். தான் பொறுப்பேற்ற  ஒன்பதாவது ஆண்டில் கலிங்க நாட்டின் மீது படையெடுத்தான்.

மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா ஆகிய நதிகளுக்கிடையே இருப்பது கலிங்கம். கலிங்கர்கள் வீரத்துடன் போரிட்டாலும் இறுதியில் தோற்றார்கள். இந்தப் போரும் அதனால் விளைந்த உயிர்ப் பலிகளும் அசோகனை வாட்டி வதைத்தன. அவன்  போரை வெறுத்தான். தென் கோடித் தமிழ்நாடு தவிர்த்து இந்தியா முழுமையும் அவனுக்குக் கீழ் இருந்தது. வரலாற்றில், வெற்றிக்குப்பின் போர்த் தொழிலை விட்டொழித்த அரசன் அசோகன் ஒருவனே என்கிறார் எச்.ஜி. வெல்ஸ் கூறுகிறார். 

அசோகன் தனது எண்ணங்களையும் செயல்களையும் எழுதி வைத்தது நமது நற்பயன். மக்களும், அடுத்துவரும் தலை முறையினரும் கடைப்பிடிக்க பல கட்டளைகளைக் கல்லிலும் செம்பிலும் செதுக்கிவைத்தான். அலகாபாத் கோட்டையிலும் அத்தகைய அசோகத் தூண் இருப்பது உனக்குத் தெரியும். 

போரினால் விளைகின்ற கொடிய கொலைகளைக் கண்டு அச்சமும் நடுக்கமும் இரக்கமும் கொண்டதை தனது கல்வெட்டுகளில் எழுதி இருக்கிறான். மனம் போனபடி வாழாமல், தர்மத்தினால் பிறர் மனதை கவர்வதே நிஜமான வெற்றியாகும் என்கிறான். அவனுடைய கட்டளைகள் சிலவற்றை உனக்காக தருகிறேன்.

அசோக மகாராஜா பதவியேற்று எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கலிங்கம் கைப்பற்றப்பட்டது. அந்தப் போரில் ஒன்றரை லட்சம் பேர் சிறைப்பிடிக்கப்பட்டனர். ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டனர். மேலும் பல மடங்கினர் இறந்தனர்.

கலிங்கம் தோற்கடிக்கப்பட்டதும் அசோகருக்கு புத்தரின் கொள்கையில் ஈடுபாடு ஏற்பட்டது. அதை பிறரும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். கலிங்கத்தின் மீது வெற்றி கொண்டதற்காக அவர் வருத்தம் கொண்டார். போரில் ஏற்பட்ட உயிர்ப் பலிகள்அவரை துயரத்தில் தள்ளின.

கலிங்கப் போரில் பலியானவர்கள், சிறைப் பிடிக்கப் பட்டவர்களில் ஆயிரத்தில் ஒரு பங்கினர்கூட பலியாகவோ, சிறைப்படவோ அசோகன் பொறுக்கமாட்டான் என்று அந்தக் கட்டளை கூறுகிறது.

அசோக மகாராஜாவுக்கு யாராவது தீங்கிழைத்தால்கூட அதையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். தமது எல்லைக்கு உள்பட்ட காடுகளில் வாழும் உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும்.  அவ்வாறு செய்யத் தவறினால் அவர் வருந்துவார். உயிருள்ள யாவும் பாதுகாப்புடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் என்பது அவருடைய விருப்பம்.

இந்தக் கட்டளைகளில் தர்மம் என்று அடிக்கடி குறிப்பிடப்படுவது புத்த தர்மமே. அசோகர் புத்த மதத்தை பின்பற்றி அது பரவ தன்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்தார். மனிதருடைய இதயங்களை அன்பினால் வசப்படுத்தி புத்த மதத்தைத் தழுவும்படி செய்தார். அசோகரைப்போல் பிற மத வெறுப்பற்ற மதவாதிகள் மிக மிக அரிது. 

வரலாற்றில் எங்கு பார்த்தாலும் மதக் கொடுமைகளும் மதப்போர்களும் நிறைந்து இருக்கின்றன. மதத்தின் பேராலும் கடவுளின் பேராலும் ரத்தம் சிந்தப்பட்ட அளவுக்கு வேறு எதன் பேராலும் ரத்தம் சிந்தப்படவில்லை என்று சொல்லலாம். ஆனால், அசோகர் தம்முடைய கொள்கைகளை மற்றவர்கள் பின்பற்ற அன்பு வழியைப் பயன்படுத்தினார் என்பதே வியப்பாகும்.  கத்தியைக் காட்டி மிரட்டி மதத்தை திணிக்கலாம் என்ற மடமை வியப்பையே அளிக்கிறது.

மேற்கு ஆசியாவிலும், ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும் உள்ள நாடுகளுக்குத் தன்னுடைய தூதர்களையும் மத போதகர்களையும் அனுப்பினார். இலங்கைக்கு தனது சகோதரர் மகேந்திரரையும் சகோதரி சங்கமித்திரையையும் அனுப்பிவைத்தார். அவர்கள் கயாவில் இருந்து புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தின் கிளையை கொண்டு சென்றார்கள் என்பது உனக்கு தெரியும். அனுராதபுரத்தில் உள்ள புத்தர் கோயிலில் நாம் பார்த்த அரசமரம் அந்தப் கிளையில் இருந்து  வளர்ந்ததாக சொல்லப்படுகிறது.

இந்தியாவில் புத்த மதம் விரைவாகப் பரவியது. தோத்திரங்கள் சொல்லுவதும் பூஜைகளும் சடங்குகளும் தர்மம் அல்லவென்றும், நல்ல செயல்களால் சமுதாயத்தை மேம்படுத்துவதே தர்மம் என்றும் அசோகர் கருதினார். நாடு முழுவதும் சாலைகளும், சோலைகளும், குளங்களும், வைத்திய சாலைகளும் உருவாகின. பெண் கல்விக்கு தனி வசதிகள் செய்யப்பட்டன.

நான்கு பெரிய கலாசாலைகள் தோன்றின. தட்சசீலம், மதுரா, உஜ்ஜயினி, பாட்னாவுக்கு அருகில் உள்ள நாளந்தா ஆகியவை கல்வியை வளர்த்தன. இவற்றில் இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமின்றி, சீனா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் இருந்தும் மாணவர்கள் வந்தனர்.  இவர்கள் தங்களுடன் புத்தரின் உபதேசங்களையும் கொண்டு சென்றார்கள். நாடெங்கும் பெரிய விஹார்கள் எனப்படும் மடங்கள் தோன்றின. 

பாட்னா அல்லது பாடலிபுத்திரத்துக்கு அருகில் இந்த விஹார்கள் அதிகமாக இருந்தன. எனவே அந்த மாகாணம் ‘விஹார்’ என்று ஆனது. விஹார் என்பது திரிந்து பிஹார் என்று ஆனது. ஆனால் வழக்கம்போல இந்த மடங்கள் அவற்றின் நோக்கத்தை இழந்து வெறும் பூஜைகள் மட்டும் நடைபெறும் இடங்களாக மாறிவிட்டன.

அசோகருடைய ஜீவகாருண்யம் மனிதர்களை மட்டுமின்றி விலங்குகளையும் தழுவி நின்றது. விலங்குகளுக்கு நோய் வந்தால் அவற்றுக்கு வைத்தியம் செய்வதற்குத் தனியாக வைத்திய சாலைகள் ஏற்படுத்தப் பட்டன. விலங்குகளைப் பலியிடுவது தடுக்கப்பட்டது. ஆனால், விலங்குகளை பலியிடுவது இன்றும் சில மதங்களின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. புத்த மதம் பரவியதாலும் அசோகரின் ஒழுக்கம் காரணமாகவும் பலர் சைவ உணவு கொள்ளத் தொடங்கினார்கள். அதுவரையில் இந்தியாவில் க்ஷத்திரியர்களும் பிராமணர்களும் மாமிசம் உண்டு மது அருந்தினார்கள். புத்தமதம் பரவியதால் இந்தப் பழக்கம் மிகவும் குறையத் தொடங்கியது. 

அசோகர் முப்பத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். பொது நன்மைக்காக எப்போதும் உழைக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். எனவே எந்த நேரத்திலும் எல்லா இடங்களிலும் மக்கள் பிரச்சனைகளை என்னிடம் தெரிவிக்க வேண்டும் என்று அவர் சொல்லியிருக்கிறார்.

கி.மு. 226ஆம் ஆண்டு அசோகர் மரணம் அடைந்தார். அதற்குச் சில காலத்துக்கு முன் அவர் புத்த துறவி ஆனார். மௌரிய காலத்து மிச்சங்கள் சிலதான் கிடைக்கின்றன. காசிக்கு அருகில் சாரநாத் என்னுமிடத்திலுள்ள மேலே சிங்கங்கள் செதுக்கப்பட்ட அழகிய அசோகத் தூணை நீ இன்றும் பார்க்கலாம்.

அசோகரது தலைநகரான பாடலிபுத்திரப் பெருநகரில் எஞ்சி நின்றது ஒன்றேனும் இல்லை. 1,500 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது அசோகர் காலத்துக்கு 600 ஆண்டுகளுக்குப் பிறகு பாஹியன் (Fa-Hien) என்கிற சீன யாத்திரிகர் பாடலிபுத்திரத்தை  பார்வையிட்டார். அந்தக் காலத்திலும் அந்த நகரம் சீரோடு இருந்தது. கல்லினால் கட்டப்பட்ட அசோகரது அரண்மனை மட்டும் அழிவுற்றுக் கிடந்தது. அழிவுற்ற அதைப் பார்த்தே அவர் பிரமித்தார். தன் இந்திய பயணக் குறிப்பில், ‘இது மனிதர்களால் செய்யக்கூடிய வேலை என்று எனக்குத் தோன்றவில்லை’ என்று அந்த அரண்மனையைப் பற்றிக் கூறுகிறார்.

பெரிய கற்களால் கட்டப்பட்ட அந்த அரண்மனை அடையாளம் இல்லாமல் போயிற்று. ஆனால் அசோகரின் பெயர் ஆசியா கண்டம் முழுவதும் பரவியிருக்கிறது. அவருடைய கட்டளைகளில் நாம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. இந்தக் கடிதம் நீளமாகிவிட்டது.  அசோகர் கட்டளையிலிருந்து ஒரு சிறிய வாக்கியத்தைக் கூறுகிறேன்.

“எல்லா மதங்களும் ஏதாவது ஒரு வகையில் வணக்கத்துக்கு உரியவையாக இருக்கின்றன. இதை அறிந்து நடப்பவன் தன் மனத்தை உயர்த்துவதோடு பிற மதங்களுக்கும் சேவை செய்தவனாகிறான்.”

Previous Post Next Post

نموذج الاتصال