விடியலின் மெல்லிய முத்தம் போல்,
ஒலிவ மரத்தில் ஓர் இனம்புரியாத அமைதி
வாரம்தோறும் வந்து சென்றாலும் இந்த வெள்ளி
புனித நீரோடையின் ஆழ்கடலாகி
அன்பின் காவியம் பாடுகிறது...
அந்த கருமையான வானில்
கருக்கலான சிலுவையில்
அன்பின் சின்னம் தன் மக்களுக்காய்
அவர்தம் பாவவிடுதலைக்காய்
கொடும்துன்பத்தை விரும்பி ஏற்றது...
அவரின் கைகளையும் கால்களையும்
துளைத்தன நீண்ட இரும்பாணிகள்...
உமிழ்நீரும் கேலிகளுக்கும்
வசவுகளும் கசையடிகளும் அரங்கேற
அவர் தலையில் ஏறியது முள் கிரீடம்...
அன்பின் சாரம் சிலுவையில் தொங்க
புனித உடல் முழுவதும் இரத்த வடுக்கள்
விலாவையும் ஊடுருவியது ஈட்டிமுனை...
இருண்ட மேகங்கள் அழுதது
அவரின் வேதனை நிறைந்த பாடுகள் கண்டு...
உயிர்பிரியும் இறுதி நிமிடத்திலும்
ஓர் முழுமையான அன்பு
"இவர்களை மன்னியும்"
வானத்தை நோக்கி மூச்சுவிட்டார்...
பூமி அதிர்ந்தது, திரை கிழிக்கப்பட்டது!
இந்தப் புனித வெள்ளி துக்கநாளன்று
நம் மீட்பிற்காய் விதை விதைக்கப்பட்ட நாள்...
கல்லறையின் அமைதிக்கு அப்பால்
கல் உருட்டப்பட்டு உயிர்ப்பின் நாள் உள்ளது
என்று சான்று பகரும் ஓர் நன்நாள்...
இந்நன்னாளில் இயேசுவின் அன்பை
தியாகத்தை நினைவு கூறுவோம்...
தவறுகளை சரிசெய்து அவர் காட்டிய வழியில்
அன்பினை, உண்மையினை
நம் இதயத்தில் விதைப்போம்...
சாட்சிகளாய் வாழ்வோம்!
- சகாய டர்சியூஸ் பீ