ஜி.எஸ்.டி. கொள்ளையின் வரலாறு 2 - ஆதனூர் சோழன்

கார்ப்பரேட்டுகளின் பினாமி அரசு!

இப்பொழுது அமலுக்கு வந்துள்ள ஜிஎஸ்டியில் ஒரே வரிவிகிதம் என்பது இல்லை. பல்வேறு வரி விகிதங்கள் உள்ளன. அதாவது, 0சதவீதம், 5சதவீதம், 12சதவீதம், 18சதவீதம், 28சதவீதம் என்று வரிவிகிதங்கள் இருக்கின்றன. மிக முக்கிய அம்சம் என்னவென்றால் மாநிலங்களின் உரிமைகள் அப்பட்டமாக பறிக்கப்படுகின்றன. இன்றைய சூழலில் சில வரிவிகிதங்களை ஜிஎஸ்டி கவுன்சில் நிர்ணயித்துள்ளது.

மாநிலங்கள் ஒரு வரியை மாற்றி அமைக்க வேண்டும் என்றால் ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒப்புதலை பெற வேண்டும். ஆனால், மத்திய அரசின் கைதான் ஜிஎஸ்டி கவுன்சிலில் ஓங்கி இருக்கிறது. அதனால் வரிவிகிதங்களை மாநில அரசுகள் மாற்றி அமைப்பது மிகவும் கடினமான காரியமாகும்.

மோடி அரசு அமல்படுத்தியுள்ள ஜிஎஸ்டி குறித்து இரண்டு முக்கியமான அம்சங்களை கவனிக்க வேண்டும்.

முதலாவதாக, உலகின் முன்னணி முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் வரிவிதிப்பு உரிமைகள் பலவும் மாநிலங்களின் அதிகாரத்தின் கீழ் உள்ளன. அங்கு மாநிலத்திற்கு மாநிலம் வரிவிகிதங்கள் வேறுபடுகின்றன. ஏன் இந்தியாவில் மாநிலங்களின் உரிமைகளை பறித்து ஒற்றை வரி விதிப்பு முறை திணிக்கப்பட வேண்டும்?

இரண்டாவதாக, வரிகளை நிர்ணயிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்தின், சட்டமன்றங்களின் கையில் இருந்தது. இப்பொழுது ஜிஎஸ்டி கவுன்சிலின் கைக்கு போய்விட்டது. அதிலும் மத்திய அரசின் கை ஓங்கிவிட்டது. இது ஜனநாயகத்திற்கும் மாநிலங்களின் உரிமைகளுக்கும் எதிரானது. கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே இது நன்மையாக அமையும்.

ஜிஎஸ்டியை அமல்படுத்திய பின்னர் வரி குறையும் என்கிறார்கள். ஆனால் அதற்கான எந்த ஆதாரமும் கிடையாது. ஜிஎஸ்டி சட்டம் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், மது போன்ற பொருட்களை வெளியில் வைத்திருக்கிறது.

இவற்றின் விற்பனையில் கலால் வரி மூலமாக மத்திய அரசுக்கும், வாட் வரி மூலமாக மாநில அரசுக்கும் கணிசமான வருமானம் கிடைக்கும் என்பதால் இந்த ஏற்பாடு. ஜிஎஸ்டி வரிச் சுமையை குறைக்கும் என்பதில் உண்மை இல்லை. இந்த வரி விதிப்பானது நுகர்வோர்கள் பாதிக்கப்படக் கூடியதாக அமையும்.

பணக்காரர்களிடம் இருந்து முறையாக நேர்முக வரிகளை வசூலிப்பதற்குப் பதிலாக சாதாரண மக்களின் சுமைகளை கூட்டியிருக்கிறது. இது மட்டுமின்றி, சிறு, குறு தொழில்முனைவோர், வணிகர்கள் அரசு நிர்வாக அமைப்பின் கடுமையான தொந்தரவுக்கும் ஊழல்சார்ந்த  நிர்ப்பந்தங்களுக்கும் ஆளாக்கப்படுவார்கள்.

ஒற்றை மொழி, ஒற்றை மதம் என்று ஒற்றைக் கலாச்சாரத்தை திணிக்க முயற்சிப்பதைப் போன்றே ஒற்றை வரி என்பதையும் கொண்டு வந்திருக்கிறார்கள். 8 கோடி, முதல் 20 கோடி வரை மக்கள் கொண்ட மாநிலங்கள் உள்ளன. அந்த மாநிலங்களின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை நகராட்சி போல் நடத்த மத்திய அரசு முயற்சிப்பது தவறு.

மத்திய அரசின் நடவடிக்கைகள் முழுக்க முழுக்க கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாகவும் அமைப்புசாரா தொழில்கள், சிறு, குறு, நடுத்தரத் தொழில் முனைவோர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு எதிராகவும் உள்ளன.

உழைப்பாளர்கள் பணி நிலமைகளை முறைப்படுத்தி பயன்களை தொழிலாளிகளுக்கு தர அரசு தயாராக இல்லை. பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் உழைப்பாளர் உரிமைகளை பறிக்கும் சட்டங்களை கொண்டுவந்துள்ளனர்.

இதேபோல், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு தோல்விகண்ட பிறகு, மாநில சட்டங்கள் மூலம் பாஜக மாநிலங்களில் அதே காரியத்தை செய்கின்றனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், மாட்டிறைச்சிக்கு மாடுகளை விற்க தடை என்ற விதிமுறைகள் மாற்ற அறிவிக்கையும் இதே வகையைச் சார்ந்தவைதான். கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கான நடவடிக்கையாகத்தான் ஜிஸ்டியையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

தாக்குதலுக்குள்ளாகி இருக்கும் மாநில உரிமைகள்

இந்திய அரசமைப்புச் சட்டம் நாட்டில் அரசியல் கூட்டாட்சிக் கட்டமைப்பை  முழுமையாக்கும் விதத்தில் ஒரு கூட்டாட்சி நிதிக் கட்டமைப்பையும்  நிறுவியிருக்கிறது.

தங்களுடைய தேவைகள் ஒவ்வொன்றுக்கும் மத்திய அரசை நாடக்கூடிய விதத்தில் பிச்சைக்காரர்கள் நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்படுமானால், தற்போதுள்ள கூட்டாட்சி அமைப்பே தகர்ந்துவிடும் நிலை உருவாகும்.

எனவேதான், சில குறிப்பிட்ட வரிகளை மாநிலங்களே விதித்துக்கொள்ள அரசியல் அமைப்புச்சட்டம் அதிகாரம் அளித்திருக்கிறது.

ஆனால், மாநிலங்களின் வரி விகிதங்களை ஜிஎஸ்டி கவுன்சில்தான் நிர்ணயிக்கும் எனக்கூறி மாநிலங்களை அதற்குள் கட்டிப்போட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்தப் போக்கு மாநிலங்களின் உரிமைகள் மீதான கடுமையான தாக்குதலாகும். இதை நம்முடைய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் அனுமதிக்க முடியாது.

எனினும், மத்திய அரசு, கொஞ்சம் கொஞ்சமாக மாநிலங்களைப் பட்டினிப் போடும் கொள்கைகளை அமல்படுத்தத் தொடங்கியது. அநேகமாக அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசின் தயவை எதிர்பார்த்து ஏங்கிக்கொண்டிருக்கும் பிச்சைக்காரர்களைப்போல மாற்றி அமைத்துவிட்டது.

நிதி ஆணையத்தின் அதிகார வரம்பு எல்லையையும் தன் விருப்பத்திற்கு மாற்றி அமைத்துக் கொண்டுவிட்டது. இவை அனைத்தும் நமது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வுகளை மீறும் செயல்களாகும்.

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவைகள் வரி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மாநிலங்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. மத்திய அரசு, மாநில அரசுகளின் அரசமைப்புச்சட்ட உரிமைகளை வெகுவாகக் குறைத்துவிட்டது. இதனை எவரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. வேண்டுமானால் நாட்டின் ‘வளர்ச்சிக்காக’’ இது அவசியம் என்று சிலர் வாதிடலாம்.

மாநில அரசுகளின் அதிகாரத்தின்கீழ் விற்பனை வரி இருந்து வந்தது. மாநில அரசின் வரிவருவாயில் சுமார் 80 சதவீதம் விற்பனை வரியிலிருந்துதான் வந்துகொண்டிருந்தது. இனி விற்பனை வரியை எந்த மாநில அரசும் விதிக்க முடியாது. இனி ஜிஎஸ்டி வரிதான். இந்த வரி நேரடியாக மத்திய அரசுக்கு சென்றுவிடும்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூடித்தான் மாநிலத்திற்கு நிதி ஒதுக்கப்படும். இந்த ஜிஎஸ்டி கவுன்சிலில் மத்திய அரசுப் பிரதிநிதிகளுடன், மாநில அரசுகளின் சார்பிலும் ஓர் உறுப்பினர் இருப்பார். ஆனால் அவருக்கு அநேகமாக எந்த அதிகாரமும் கிடையாது.



ஜிஎஸ்டி மூலமாக மாநிலங்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுவிட்டன என்பது இதன்மூலம் தெளிவாகும்.

மாநில அரசுகளுக்கு இருந்த வரி விதிக்கும் அதிகாரங்களை இழந்தபின்னர், எத்தனை ஆண்டு காலத்திற்கு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அதற்கான இழப்பீடுகளை அளித்து வரும்? எவருக்கும் தெரியாது.

இது, அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக்கட்டமைப்பு சம்பந்தப்பட்ட கேள்வியாகும்.

எப்படி, இப்போதைய நாட்டின் அரசியலமைப்பை மத்திய ஆட்சியாளர்கள் தாங்கள் விரும்பினாலும், ‘‘இந்து ராஷ்ட்ரம்’’ என்று பிரகடனம் செய்ய முடியாதோ...

அதேபோன்று, மாநிலங்களின் அதிகாரங்களையும் மத்திய அரசும், மாநில அரசுகளும் விரும்பினாலும் கூட, மத்திய அரசு தனது விருப்பத்திற்கு பறித்துக் கொள்ளமுடியாது.

அவ்வாறு செய்தால், அது நம் அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறும் செயலாகும்.

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவைகள் வரி, ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு அதிக அளவில் பங்களிப்பை செலுத்தும் என்று ஒருதரப்பினரால் கூறப்படுகிறது.

இது முழுக்க முழுக்க போலித்தனமான பொருளாதாரக்கூற்று ஆகும். இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி ஏற்படும் என்பதற்கு எவ்விதமான அடிப்படையும் கிடையாது. வரிச்சீர்திருத்தங்கள் மூலமாகவெல்லாம் முதலாளிகளின் முதலீடுகளை அதிகரித்துவிட முடியாது.

ஜிஎஸ்டி போன்ற வரிச்சீர்திருத்தங்களால் தங்களுக்குக் கிடைக்கும் ஆதாயங்களை முதலாளிகள் தங்கள் பைகளில் நிரப்பிக்கொள்வார்களே தவிர, அவற்றை முதலீட்டிற்கோ, வளர்ச்சிக்கோ பயன்படுத்தமாட்டார்கள்.

அமெரிக்காவில் ஜிஎஸ்டி

அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சீரான ஜிஎஸ்டி தேவை என்று ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது.

இதற்கும் அமெரிக்காவையே உதாரணம் காட்டுகிறார்கள். உண்மையில் அமெரிக்காவில் இவ்வாறு ஒரே சீரானவிகிதம் கிடையாது.

ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறுவிதமான விகிதங்கள் கடைப் பிடிக்கப்படுகின்றன. உலகின் மிக பலம்வாய்ந்த முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் கூட ஒரே சீரான சந்தை இல்லை என்பதே நிஜமாக இருக்கிறது.

அமெரிக்காவில் சீரான விகிதம் இல்லாததற்கு காரணம் என்ன தெரியுமா?

ஏனெனில் அந்த நாடு கூட்டாட்சித் தத்துவத்தைப் பெரிய அளவில் மதிக்கிறது.

அமெரிக்கா, கூட்டாட்சித் தத்துவத்தை எந்த அளவிற்கு ஆழமாக எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு ஆதாரம் வேண்டும் என்றால் ஒரே ஒரு விஷயத்தில் புரிந்துகொள்ளலாம்.

அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் அந்த நாட்டின் மேல்சபையான செனட் சபைக்கு இரு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அதாவது மிகப்பெரிய மாநிலமான நியூயார்க் அல்லது கலிபோர்னியாவிற்கும் இரண்டு பிரதிநிதிகள்தான். அதேபோன்று மிகச் சிறிய மாநிலமான டெலாவாரே அல்லது ரோடீ ஐலண்ட்டிற்கும் இரண்டு பிரதிநிதிகள்தான்.

உலகின் மிக வலுவான முதலாளித்துவ நாடு என்று சொல்லப்படக்கூடிய அமெரிக்கா கூட, கூட்டாட்சித் தத்துவம் போன்ற அரசமைப்புச்சட்ட மாண்புகளை உயர்த்திப் பிடிக்கிறது.

அந்த நாட்டின் பெருமுதலாளிகளின் விருப்பத்திற்கு அது செவிசாய்க்கவில்லை. ஆனால் இந்தியா ஏன் உலகின் பெருமுதலாளிகளின் விருப்பத்திற்கு செவிசாய்த்து அவர்களுக்கு சாதகமாக நடந்துகொள்கிறது என்பதற்கான காரணம் தெரியவில்லை.

இந்தியாவில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பிற்கு எதிரானது. நாட்டின் ஒற்றுமைக்கு அபாயகரமான அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியது.

மாநிலங்களின் உரிமைகள் வெட்டிச் சுருக்கப்பட்டிருப்பதால். மத்திய அரசு எதேச்சதிகாரத்தை நோக்கிச் செல்வதற்கான பாதை சீராக்கப்பட்டிருக்கிறது.

இது மிகவும் ஆபத்தாகும். மாநில அரசுகளின் நிதி ஆதார வாய்ப்புகள் அடைக்கப்பட்டுவிட்டதால், அவர்கள் தங்கள் தேவை ஒவ்வொன்றுக்கும் மத்திய அரசின் தயவையே நாடவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

இது மத்திய அரசுக்கு, மாநில அரசுகளைத் தங்கள் இஷ்டத்திற்கு, தங்கள் விருப்பம்போல் ஆட்டிப்படைப்பதற்கான வாய்ப்பினை அளித்திடும்.

‘‘குடியரசுத் தலைவருக்கான எங்கள் வேட்பாளரை ஆதரியுங்கள், உங்கள் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்கிறோம்’’ என்று பாஜக அரசு கூற முடியும்.

‘‘நாங்கள் விரும்பும் அல்லது நாங்கள் கோரும் இந்து ராஷ்ட்ரத்தை ஆதரியுங்கள், உங்கள் தேவைகளை நாங்கள் நிறைவேற்றுகிறோம்’ என்றுகூட பாஜக அரசு நிர்பந்தம் செய்ய முடியும்.

மத்தியில் அதிகாரம் குவிவதற்கு எதிராக பல மாநிலங்களில் எதிர்ப்புக் கிளர்ச்சிகள் அதிகரித்துள்ளன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், அம்மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள அரசமைப்புச்சட்டத்தின் 370 ஆவது பிரிவின்கீழான சிறப்பு அதிகாரங்களை ஜிஎஸ்டி வெட்டிச் சுருக்கும் என்பதால் அதற்கு எதிராக கிளர்ச்சிகள் தொடங்கிவிட்டன.

ஆனால், இதைப்பற்றியெல்லாம் ஆட்சியாளர்களோ, கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஊடகங்களோ கவலைப்படவில்லை.

மாநிலங்களின் வரி விகிதங்களை ஜிஎஸ்டி கவுன்சில்தான் நிர்ணயிக்கும் எனக்கூறி மாநிலங்களை அதற்குள் கட்டிப்போட்டால், அது மாநிலங்களின் உரிமைகள் மீதான தாக்குதலாகவே கருதப்படும்.

இத்தகைய தாக்குதலை இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் அனுமதிக்கவே முடியாது.

பாஜக அரசின் இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து இந்தியாவின் புகழ்பெற்ற பொருளாதார அறிஞரான பேராசிரியர் பிரபாத் பட்நாயக் கூறியிருப்பதை குறிப்பிட்டால் எல்லோருக்கும் சுருக்கமாக புரியும் என்று கருதுகிறேன்.

ஜிஎஸ்டி அமல்படுத்தபட்ட பின்பு, எந்த மாநில அரசுகளும், எந்த பொருளுக்கு எவ்வளவு வரி என தீர்மானிக்க முடியாது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மாநில அரசுகளுக்கு ஏற்கனவே வழங்கியுள்ள இந்த அதிகாரம். இப்போது இந்த அதிகாரம் முற்றாக மறுக்கப்பட்டு விட்டது.

அனைத்து வரி அதிகாரமும் மத்திய அரசில் மையப்படுத்தப்பட்டு விட்டது.

எந்த மாநில அரசும் உள்ளூர் தேவை அடிப்படையில் மாற்று வரி யோசனைகளை இனிமேல் சிந்திக்கவே முடியாது.

அப்படி யோசித்தால் கூட ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் அங்கே மத்திய அரசே ஆதிக்கம் செலுத்தும்.

அதாவது, மத்திய அரசை பரிபூரணமாக சார்ந்தே மாநில அரசுகள் வரி விசயத்தில் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றன.

இது இந்தியாவின் கூட்டாட்சி கோட்பாட்டை குழிதோண்டி புதைப்பதாகும்.

எனவே ஜிஎஸ்டி இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது.

உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் 2 சதவீத வளர்ச்சியை அதிகரிக்கும் எனக்கூறி, எந்தவித அர்த்தமும் இல்லாத ஒரு பொருளாதார மோசடியை மோடி அரசு அரங்கேற்றியிருக்கிறது.

  

ஜிஎஸ்டிக்கு மூலகாரணம் யார்?

 


இந்தியா கூட்டாட்சி அடிப்படையில் செயல்படும் நாடு என்பதால் மத்திய அரசின் பட்டியலில் உள்ள சரக்குகளுக்கு மத்திய அரசின் வரியும் மாநில அளவில் உற்பத்தி மற்றும் வணிகம் செய்யப்படும் சரக்குகளுக்கு மாநில வரி வசூல்களும் செய்யப்படுகின்றன.

எனவே, இயல்பாக சரக்கின் மீதான பன்முக வரி விதிப்பு தவிர்க்க இயலாதவாறு நிகழ்ந்து வருகிறது. இதுதவிர உள்ளாட்சி அமைப்புக்களின் சார்பில் வசூலிக்கப்படும் வரிகள், நுழைவுக் கட்டணங்கள் தனி.

தற்போது மத்திய அரசின் கீழ் வசூலிக்கப்படும் வரிகளாக மத்திய கலால் வரி, கூடுதல் கலால் வரி, கூடுதல் சுங்க வரிகள், சிறப்பு கூடுதல் சுங்க வரி, சேவை வரி, சரக்கு அல்லது சேவைகள் மீதான செஸ் மற்றும் சர்சார்ஜ் ஆகியவை உள்ளன.

மத்திய அரசின் மேற்கண்ட அனைத்து வரிகளும் நீக்கப்பட்டு இனி, மத்திய சரக்கு மற்றும் சேவை வரி சிஜிஎஸ்டி என்ற பெயரில் ஒரே வரியாக வசூலிக்கப்படும்.

மாநில அரசின் வரிகளாக தற்சமயம் மத்திய விற்பனை வரி, மாநில வாட், கொள்முதல் வரி, ஆடம்பர வரி, நுழைவு வரி, பொழுதுபோக்கு வரி, விளம்பரங்களின் மீதான வரி, போட்டிகள் மற்றும் லாட்டரிகள் மீதான வரி, சரக்கு அல்லது சேவைகள் மீதான மாநில அரசின் செஸ் மற்றும் சர்சார்ஜ் என வசூலிக்கப்படுகிறது.

தற்போதைய ஜிஎஸ்டி வரி முறையில் இவை அனைத்தும் நீக்கப்பட்டு மாநில சரக்கு மற்றும் சேவை வரி எஸ்ஜிஎஸ்டி மட்டும் வசூலிக்கப்படும்

உலகமய, தாராளமய வணிக சந்தையில் இந்தியாவின் மேற்கண்ட பலவிதமான வரி விதிப்பு நடைமுறை பெருநிறுவனங்களுக்கும். பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களின் சரக்கு பரிவர்த்தனைகளுக்கும் ‘‘தடையாக’’ இருந்து வருவதாக கூறப்பட்டு வந்தது.

எனவே, அதை மாற்றுமாறு உலக வங்கி மற்றும் உலக வர்த்தக அமைப்புகள் தொடர்ந்து இந்திய அரசை நிர்பந்தப்படுத்தி வந்தன.

இந்தப் பின்னணியில்தான் 2000ஆம் ஆண்டில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, ஜிஎஸ்டிக்கு முன்னோட்டமாக, ‘வாட்’ வரி விதிப்பு முறை விவாதிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அடுத்து வந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்  கூட்டணி அரசும் ஜிஎஸ்டியை அமலாக்க முயற்சிகளை மேற்கொண்டது.

ஆனால், அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த பாஜக, ‘‘ஜிஎஸ்டி வந்தால் மாநில அரசுகளின் வருவாயை இழக்கச் செய்யும்’’ என்று வாதாடி தடுத்து நிறுத்தியது. காங்கிரசும் ஜிஎஸ்டி வரிவிதிப்பைக் கைவிட்டது.

ஆனால் மோடி ஆட்சிக்கு வந்ததும், பாஜகவின் நிலைப்பாடு தலைகீழாக மாறிவிட்டது.

உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பதில் மோடி அரசு, இந்திய நலன்களையும் கூட காவு கொடுத்து அமலாக்குவதில் வேகமாக இருக்கிறது. அதன் ஒருபகுதியே ஜிஎஸ்டி.

உலகின் பல நாடுகளிலும் நீண்ட ஆண்டுகளாக ஜிஎஸ்டி மற்றும் வாட் வரி நடைமுறைகள் இருந்து வருகின்றன. ஜிஎஸ்டி 1954ம் ஆண்டு பிரான்ஸில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது 159 நாடுகளில் பின்பற்றப்படுகிறது. மற்ற பல நாடுகளில் மதிப்புக் கூட்டு வரித் திட்டம் (வாட்) செயல்படுத்தப்படுகிறது.

நமது நாடு கூட்டாட்சி முறையில் இயங்குவதால், மாநில அரசுகளுக்கான நிதி வருவாய் பெரும்பாலும் வரி வசூலை நம்பியுள்ளதால் பன்முக வரி விதிப்பு நடைமுறையினை பின்பற்றி வருகிறோம். அதுதான் இப்போது ஒரே வரியாக மாறுகிறது.

ஜிஎஸ்டி வரி விகிதங்கள் எப்படி தீர்மானிக்கப்படுகின்றன?

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியானது 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிதம் மற்றும் 28 சதவிகிதம் என நான்கு வகையாக வசூலிக்கப்படுகிறது.

1. உணவு எண்ணெய், சர்க்கரை, மசாலாக்கள், தேயிலை, காபி, நிலக்கரி, இந்திய இனிப்பு வகைகள், உயிர்காக்கும் மருந்துகள் - இவைகளுக்கு 5 சதவிகிதம் வரி.

2. கம்ப்யூட்டர் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு 12 சதவிகிதம் வரி.

3. பற்பசை, ஹேர் ஆயில், சோப் வகைகள், மூலதன சரக்குகள் மற்றும் தொழிற்கூட கருவிகளுக்கு- 18 சதவீதம் வரி.

4. சிறு கார்கள் (1 அல்லது 3 சத செஸ் உட்பட), ஏசி, குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட நுகர்வுப் பொருட்கள், பிஎம்டபிள்யு போன்ற ஆடம்பரக் கார்கள், சிகரெட்டுகள், குளிர்பானங்கள் (15 சத செஸ் உட்பட), விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் (15 சத செஸ் உட்பட) - இவைகளுக்கு 28 சதவிகிதம் வரி.

5.கல்விக் கூடங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

1. தற்போதைய கார் விற்பனை சந்தையில் சிறு கார்களில் பெட்ரோல் வகை மற்றும் நடுத்தர கார்களின் விலையில் சிறு உயர்வும் டீசல் வகை கார்களின் விலையில் கணிசமான உயர்வும் இருக்கும். அதேசமயம், மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய வாட் வரி நீக்கத்தால், பிஎம்டபிள்யு போன்ற ஆடம்பர சொகுசு கார்களின் விலைகள் கணிசமான அளவில் குறையும் என்றும் ஆட்டோமொபைல் துறை ஆலோசனை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இது கார்ப்பரேட்டுகளுக்கும், பெரும் பணக்காரர்களுக்கும் லாபம்.

2. தங்கத்திற்கு 3 சதவிகிதம் வரி போடப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 சதவிகிதம் வரி இருந்தது. இதனால் தங்கத்தின் விலையில் உயர்வு ஏற்படும்.

3. தொழில்துறை சரக்குகளுக்கு 18 சதவிகிதமும் அத்துடன் உள்ளீட்டு வரி பயன்பாட்டை அனுமதிப்பதன் மூலம் தொழிற்துறை உற்பத்தி வளரும் என தொழிலதிபர்கள் தெரிவிக்கின்றனர்.

4. கட்டுமானத்துறையில் சிமெண்ட் வரி 30 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதமாக குறைந்துள்ளது. ஆனால் மறுபுறம் தற்போது பரவலாக அலுமினிய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் அலுமினிய தகடுக்கு 28 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. பெயிண்ட், செராமிக்ஸ், பட்டி போன்ற உபபொருட்களின் வரி 2 சதவிகிதம் கூடியுள்ளது. ரப்பர் பொருட்களின் வரி 18.5 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ரப்பரை பயன்படுத்தி உற்பத்தியாகும் அனைத்து பொருட்களின் விலைகளும் உயரும். குறிப்பாக மோட்டார் டயர் உள்ளிட்ட உதிரி பாகங்களின் விலைகள் உயரும்.

5. பெட்ரோலியப் பொருட்களான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி கவுன்சில் தீர்மானிக்கும் காலத்திலிருந்து  வரி நடைமுறைக்கு வரும்.

6. புகையிலை மற்றும் புகையிலை பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரியுடன் தற்போது புழக்கத்தில் உள்ள மத்திய கலால் வரியும் தொடரும். ஏற்றுமதி வரிகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.20 லட்சத்திற்கு குறைவாக வணிகத்தில் ஈடுபடுவோர் ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். இது தவிர சிறு வர்த்தகர்கள் ரூ.50 லட்சத்திற்கும் குறைவாக வியாபாரம் செய்வார்களேயானால் அவர்களுக்கு தொகுப்பு வரி விதிக்கப்படும்.

ஜிஎஸ்டி வரியால் வாடிக்கையாளர்களாக உள்ள பொதுமக்களுக்கு பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும் என மத்திய ஆட்சியாளர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். அது எந்தளவிற்கு உண்மை என்பது வரி அமலானால்தான் தெரியும்.

இந்தியாவின் பெரும்பான்மை நுகர்வோர் கோடிக்கணக்கான நகர்ப்புற ஏழை மக்களும், கிராமப்புற மக்களும்தான். இவர்களுக்கு என்ன பலன் கிட்டப் போகிறது?

சரக்கின் அசல் விலை, அதன் உண்மையான ஜிஎஸ்டி வரி பற்றிய வெளிப்படையான பட்டியல் விபரத்தை நுகர்வோர் எதிர்பார்க்க முடியுமா என்பதை நடைமுறையில்தான் காண முடியும்.

ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய பாஜக அரசு ‘‘ஒரு வரி. ஒரு நாடு, ஒரு சந்தை’’ என்ற முழக்கத்தை எழுப்பியுள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி என்ற முழுக்கத்தை கேட்கும்போது நன்றாகத் தானே இருக்கிறது எனத் தோன்றக்கூடும். ஆனால் மோடி அரசின் நோக்கம் அதுவல்ல.

இந்தியாவின் கூட்டாட்சி நடைமுறையில் மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்து வதையும் அதை வளர்த்தெடுக்கவும் முனைகின்றன.

உதாரணமாக கோவையில் சிறு உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படும் வெட் கிரைண்டருக்கு தமிழ்நாடு அரசு 5 சதவிகித வரி மட்டுமே வசூலித்து வந்தது. சிவகாசிப் பட்டாசுக்கு 14.5 சதவிகிதம் வசூலித்து வந்தது. தற்போதைய ஜி.எஸ்.டி வரி விதிப்பில் இவ்விரண்டும் 28 சதவிகிதமாக உயர்ந்துள்ளதால் இத்தொழில்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன.

சிக்கிம். உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் அகிய மாநிலங்களில் தொழில் உற்பத்திக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அங்கு மத்திய எக்சைஸ் வரிக்கு முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 உத்தரப்பிரதேசத்தின் பிரபலமான பனாரஸ் சேலை உற்பத்தி ரகங்களுக்கு வரி விலக்கு அளித்து மாநில அரசு ஊக்கப்படுத்துகிறது.

 மது விற்பனையில் கூட மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசங்கள் உண்டு. தமிழகத்தின் வருவாயில் பெரும்பான்மையாக எதிர்பார்க்கப்படும் மது விற்பனைக்கு 200 சதவிகிதம் வரை வரி விதிக்கப்படுகிறது.

மறுபுறம் சுற்றுலாவை நம்பியுள்ள கோவா மாநிலத்தில் மதுவிற்கு 20சதம் மட்டும் வரி விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இதற்கு 14.5 சதவிகிதமாக உள்ளது. இப்படி மாநிலத்தின் நிலைமைகளுக்கு ஏற்பவும் தொழில் வளர்ச்சி மற்றும் சமூக, கலாச்சார நிலைமைகளை கவனத்தில் கொண்டே வரிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

சிறு, குறு, பாரம்பரியத் தொழில்களைக் கொண்ட கேரள மாநிலம் மூலப்பொருட்கள் மற்றும் சரக்குகளுக்கு பெரும்பாலும் 5 சதவிகித வரியையே அமலாக்கி வருகிறது. அதிகபட்சமே 14.5 சதவிகிதம்தான். ஆனால் தற்போதைய ஜி.எஸ்.டியில் 28 சதவிகிதம் வரை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல சினிமா தொழிலுக்கு மாநிலத்திற்கு மாநிலம் சலுகைகள், கட்டணங்கள் நடைமுறையில் இருந்ததை ஜி.எஸ்.டியில் ஒரே வரி என்ற பெயரால் தியேட்டர் கட்டணங்கள் 28 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த பன்முகத்தன்மையையும், இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தின் அடித்தளத்தையும் புறக்கணித்துவிட்டு ஒற்றை வரி கோட்பாட்டை பாஜக அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பில் அமலாக்கியுள்ளது.

ஒரே மாதிரியான வரிக் கொள்கை என்பது பெருநிறுவனங் களின் சரக்குகள் நாடு முழுவதும் தங்கு தடையின்றி செல்லவும். தங்களுடைய உற்பத்திச் சரக்குகள் சந்தைக்கு விரைவாக எடுத்துச் செல்ல தடையாக உள்ளவைகளை நீக்கி தாராளமாக செயல்படவே ஜிஎஸ்டி முக்கியப் பங்கு வகிக்கும்.

முதலாளித்துவத்தின் சரக்கு விநியோகச் சங்கிலி தடையின்றிச் செல்ல வேண்டும் என்பதற்காகவும், தங்களுடைய சரக்கின் விலைமதிப்பு, வரிகளால் உயர்த்தப்பட்டு நுகர்வோர் மத்தியில் போட்டியைச் சமாளிக்கும் நிலைமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற பெருமுதலாளிகளின் இலக்கிலிருந்தே ஜிஎஸ்டி தொடங்குகிறது.

மாநிலங்களுக்கு வருவாய் அம்போ!

ஒரு சரக்கு இந்தியாவின் எந்தவொரு மூலையிலிருக்கும் நுகர்வோரை அடைந்தாலும் அந்த சரக்கின் மீதான ஒரு பகுதி வரி மத்திய அரசிற்கு உத்தரவாதமாக சென்றடையும் விதத்தில்தான், ஜிஎஸ்டி மூலமான வருவாய் பகிர்வுத் திட்டத்தை மோடி அரசு முன்வைத்துள்ளது.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வழக்கமான வரி விதிப்பு முறையில் சரக்கின் கலால் வரி மட்டும் மத்திய அரசிற்கு செல்லும். மாநிலங்களுக்கு இடையேயான வரியினை (மத்திய விற்பனை வரி) மாநில அரசுகள் வசூலித்து அதன் ஒரு பகுதியினை மத்திய அரசிற்கு செலுத்தும். ஜிஎஸ்டியில் அந்த வருவாய் மொத்தமும் மத்திய அரசுக்கு சென்று விடும்.

தற்போதைய வரி முறையில், உற்பத்தியாகும் இடத்திலிருந்து அனுப்பப்படும் சரக்குக்கான வரி அந்தந்த மாநிலத்தின் வருவாயாக இருந்து வந்தது. ஆனால் ஜிஎஸ்டியில் சரக்கு இறுதியாக வாடிக்கையாளரை எட்டும் மாநிலத்திற்கு வரிவருவாய் சென்றடையும்.

இதன்படி, உற்பத்தி செய்த மாநிலத்திற்கு எந்தவொரு பலனும் இருக்காது. ஜிஎஸ்டியில் மாநிலத்திற்கான வருவாய் என்பது, சரக்கு உள் வருகையையும் மக்களின் நுகர்வையொட்டியுமே அமையும்.

பழைய நடைமுறையில் நாடு முழுவதும் வசூலிக்கப்படும் வருமான வரி மற்றும் கலால் வரி போன்ற நேரடி வரியில் 97 சதவிகிதம் மத்திய அரசின் பங்காகவே சென்றது.

மாநில அரசுகளால் பெரும்பாலும் மறைமுக வரிகளே விதிக்கப்பட்டன. இதுவும் மாநில வருவாயில் 55 சதவிகிதமாக இருந்து வந்தது.

நாடு முழுவதும் வசூலிக்கப்படும் மறைமுக வரியிலிருந்து கிடைக்கப் பெறும் ஒவ்வொரு ஒரு ரூபாயிலும் 46 பைசா மத்திய அரசிற்கும் 54 பைசா மாநில அரசுகளுக்கு பங்கு செல்கிறது.

பல்வேறு நிதி கமிஷன்கள் அமைக்கப்பட்டு இந்த பங்கு விகிதத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற பரிந்துரைகள் இதுவரையிலும் அமலாக்கப்படவில்லை. மத்திய, மாநில அரசுகளின் செலவுகள் குறித்த பொறுப்புக்கள் சம்பந்தமான கொள்கைகள் பற்றி பரிசீலிக்கவில்லை. இந்த சமத்துவமற்ற நிலைமை தொடர்கிறது. ஜிஎஸ்டியிலும் இதற்கு பதில் இல்லை.

நேர்முக வரியின் வீழ்ச்சி

மோடி அரசு பதவியேற்றதற்கு பிறகு நேர்முக வரி வருவாய் சதவிகிதம் குறைந்து வருவதையும் காண முடிகிறது. 2009&-10ம் ஆண்டில் மொத்த நேர்முக வரி வருவாய் ரூ. 3.70 லட்சம் கோடி. இது 2013&-14ம் ஆண்டில் ரூ.6.38 லட்சம் கோடியாக உயருகிறது. இது 72 சதவிகிதம் உயர்வாகும்.

மோடி அரசு பதவிக்கு வந்தது 2014-15ம் ஆண்டு இந்த வருவாய் ரூ.6.90 லட்சமாகிறது. இது 8.15 சதவிகித உயர்வாகும். அடுத்த 2015-16ல் ரூ.7.4லட்சம் கோடியாகிறது. இதன் உயர்வு 8 சதவிகிதம் மட்டுமே.

2009-10 ஆம் ஆண்டில் மொத்த வரி வருவாயில் நேர்முக வரியின் பங்கு 61 சதவிகிதமாக இருந்தது.

 2015-16ம் ஆண்டில் அது 51 சதவிகிதமாக குறைந்துவிட்டது. இதேபோல 2007-08ம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நேர்முக வரியின் பங்கு 6.3 சதவிகிதமாக இருந்தது 2015-16ல் 5.7 சதவிகிதமாக குறைந்துவிட்டது.

பெருநிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கியதும் நடுத்தர மக்கள் மீதும், ஏழை மக்கள் மீதும் வரிச் சுமையை ஏற்றிக் கொள்ளை அடித்ததும்தான் இதற்கு காரணம் என்பதைப் பளிச்செனப் புரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டின் சொந்த வருவாய் விகிதம் தொடர்ந்து எதிர்பார்த்த அளவில் உயரவில்லை.

இந்த நிலையில், சுமாராக ஆண்டு ஒன்றுக்கு ரூ.65 ஆயிரம் கோடி வரையில் வசூலிக்கப்பட்டு வந்த விற்பனை வரி தற்போது ஜிஎஸ்டி வருகையால் கடும் பாதிப்படையும்.

இந்திய அரசியல் சட்டத்தில் ஜிஎஸ்டிக்காக மேற்கொள்ளப்படுகிற 150வது திருத்தத்தின்படி, எதிர்காலத்தில் ஜிஎஸ்டி வரியினை கூட்டவோ அல்லது குறைக்கவோ ஜிஎஸ்டி கவுன்சிலிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

மாநில அரசுகளின் சட்டமன்றங்கள் ஜிஎஸ்டி விஷயத்தில் தலையிட முடியாது. மாநில நலன் சார்ந்த வரிகள் பற்றிய பிரச்சனைகளை கவுன்சில் கூட்டத்தில் முன் வைக்க மட்டுமே முடியும். இறுதி முடிவை கவுன்சில்தான் தீர்மானிக்கும்.

ஒரு பக்கம் நாட்டின் நிதி வருவாயின் பெரும்பகுதியை தன்னகத்தே குவித்துக்கொள்வதும் மறுபுறம் மாநிலங்களின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியினை வெட்டுவதும், வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின்போது மாநில அரசுகளை நிதியின்றி மத்திய அரசிடம் சரணடைய வைக்கும் எதேச்சதிகார அரசியல் பாதையின் ஒரு வடிவமே ஜிஎஸ்டி.

ஜிஎஸ்டி என்பது நாட்டில் உள்ள கார்பரேட்டுகளின் விருப்பமே ஆகும். அதையே மோடி அரசு நிறைவேற்றியிருக்கிறது. 

(தொடரும்)
Previous Post Next Post

نموذج الاتصال