பிரியங்கா காந்தி பில்டப் தலைவரல்ல! - ஆதனூர் சோழன்

 


(02-02-2019 அன்று நக்கீரனில் நான் எழுதிய கட்டுரை இது..)

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில் யாரும் எதிர்பார்த்திராத ஆயுதத்தை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. புராணங்களில் இத்தகைய இறுதிக்கட்ட ஆயுதத்தை பிரம்மாஸ்திரம் என்பார்கள். நீண்ட காலமாகவே பிரியங்கா காந்தியை தீவிர அரசியலுக்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சிக்குள் மட்டுமின்றி, பாஜக எதிர்ப்பாளர்கள் மத்தியிலும் இருந்து வந்தது.
ஆனால், ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸை வளர்க்கும் முடிவில் சோனியா உறதியாக இருந்தார். அதற்கேற்றபடி ராகுலும் கட்சி விவகாரங்களில் தீவிர பயிற்சி பெற்று இளைஞர்களை ஈர்ப்பதில் ஓரளவு வெற்றியும் பெற்றார். சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு ராகுல் காந்தியின் உழைப்பும், பிரச்சார தந்திரமும் மிக முக்கியமான அம்சமாக சொல்லப்பட்டது.
அதாவது, மூத்தோரையும் இளையோரையும் அனுசரித்து, காங்கிரஸ் கட்சியின் தீராத நோயான கோஷ்டிகளை ஒழிப்பதில் அவர் வெற்றிபெற்றார் என்பதையே முக்கியமான விஷயமாக அரசியல் பார்வையாளர்கள் கணித்தனர்.
ஆனால், ராகுலை அடுத்த பிரதமர் வேட்பாளராக ஏற்பதில் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு இன்னும் தயக்கம் இருப்பதை அறிந்த காங்கிரஸ், ராகுலை தனது பிரதமர் வேட்பாளராகக்கூட அறிவிக்க தயங்குகிறது. அதைக்காட்டிலும் உத்தரப்பிரதேசத்தில் வெறும் இரண்டு தொகுதிகளை ஒதுக்கியதுடன், காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்கக்கூட மாயாவதியும் அகிலேஷும் தயாராக இல்லை என்று அறிவித்தது காங்கிரஸை ஆத்திரமடையச் செய்தது.
7 மாநிலங்களில் ஆளுங்கட்சியாகும் தகுதி படைத்த காங்கிரஸ் கட்சியை, 50 ஆண்டுகள் மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்த தேசிய கட்சியை இரண்டு மாநிலக் கட்சிகள் அவமானப்படுத்தின. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்தது. அந்த அறிவிப்பு பாஜகவுக்கு ஆனந்தம் அளித்தது. அதாவது, காங்கிரஸ் வாக்குகள் பிரிந்தால் தனக்கே சாதகமாகும் என்று அது நினைத்தது. கடந்த 2014 தேர்தலில் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டதால், உ.பி.யில் மட்டுமே 70 தொகுதிகளில் பாஜக வென்றது. இப்போது, பகுஜன் சமாஜும் சமாஜ்வாடியும் கூட்டணி அமைத்தவுடன் பாஜக பதறியது. இந்நிலையில்தான், காங்கிரஸ் தனித்து போட்டி என்றவுடன் பாஜக உள்ளூர மகிழ்ச்சி அடைந்தது.
அந்த மகிழ்ச்சியை நீடிக்கவிடாமல், அடுத்த அதிரடி அறிவிப்பாக, பிரியங்கா காந்திக்கு பொதுச்செயலாளர் பொறுப்பை வழங்கி, அந்த மாநிலத்தின் கிழக்கு பகுதிக்கு தேர்தல் பொறுப்பாளராகவும் களம் இறக்கியது. அதுமட்டுமின்றி, மத்தியப்பிரதேசத்தில் பாஜகவை தோற்கடிப்பதில் பெரும் பங்காற்றிய ஜோதிராதித்திய சிந்தியாவை உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதியின் தேர்தல் பொறுப்பாளராகவும் அறிவித்தது.
காங்கிரஸின் இந்த அதிரடி முடிவு இந்திய அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 2019 தேர்தல் களத்தின் போக்கையும் திடீரென திசைதிருப்பியுள்ளது. இத்தகைய முடிவை எதிர்பார்க்காத பாஜக, வழக்கம்போலவே தனது பதற்றத்தை மறைக்க, காங்கிரஸுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாகவும் அதனால்தான் பிரியங்காவை களம் இறக்கியிருப்பதாகவும் கருத்து தெரிவிக்கத் தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ் குடும்பக் கட்சி என்பதையே இந்த அறிவிப்பு வெளிப்படுத்துகிறது என்றும் பாஜக தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.
முதலில் காங்கிரஸ் கட்சியை குடும்பக் கட்சி என்று முத்திரை குத்துவது சரியா என்று பார்க்க வேண்டும்?
இந்தியாவில் இருப்பதிலேயே ஜனநாயகத் தன்மை கொண்ட, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிக்கக்கூடிய, இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை, மதசார்பற்ற தன்மை போன்ற முக்கியமான அம்சங்களை கடைப்பிடிக்கக்கூடிய கட்சிகளில் முதன்மையானது காங்கிரஸ் கட்சி என்று குறிப்பிடலாம். இன்னொரு விஷயம் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட தேசத்தில் எல்லா மக்களுக்கும் தெரிந்த ஒரு முகம் இருந்தால்தான் தேசத்தை எளிதில் ஒருங்கிணைக்க முடியும் என்பதால்தான் மோடியை மூன்று ஆண்டுகள் 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து புரமோட் செய்தார்கள்.
காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பு என்று பார்த்தால் எத்தனையோ பேர் வந்திருக்கிறார்கள். ஆனால், காந்தி மட்டுமே காங்கிரஸ் தலைவராக இதுவரை அறியப்படுகிறார். ஆனால், அவர் கட்சித் தலைவராக பொறுப்பு வகித்தது ஒரு ஆண்டுதான். நேரு காந்தி இருக்கும்போதே 1929, 30, 36, 37 ஆகிய நான்கு ஆண்டுகளில் நான்கு முறை தலைவராக இருந்திருக்கிறார்.
விடுதலைக்குப் பிறகும் அவர், 1951, 52, 53, 54 ஆகிய நான்கு ஆண்டுகள் நான்குமுறை தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார். 1978 ஆம் ஆண்டு வரை காங்கிரஸின் தலைவர்களும் பிரதமர்களும் மாறி மாறி வந்திருக்கிறார்கள். 1969 ஆம் ஆண்டு அன்றைக்கு பிரதமராக இருந்த இந்திராவின் முற்போக்கு திட்டங்களை காங்கிரஸ் கட்சியில் இருந்த பிற்போக்கு தலைவர்கள் எதிர்த்தார்கள். அதைத் தொடர்ந்துதான் காங்கிரஸில் முதன்முறையாக பிளவு ஏற்பட்டது. இந்திராவை மட்டும் நம்பியவர்கள் தனி அணியாகப் பிரிந்தார்கள்.
தனக்கு இணக்கமான தலைவரை நியமிக்கும் போக்கை இந்திரா கடைப்பிடித்தார். ஆனால், நெருக்கடி நிலைக்கு பிறகு நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. உடனே, 1978 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக இருந்த பிரமானந்த ரெட்டி இந்திராவை கட்சியிலிருந்து நீக்கினார். அதைத்தொடர்ந்து காங்கிரஸில் இரண்டாவது முறையாக பிளவு ஏற்பட்டது. இப்போதும் இந்திரா தலைமையிலான அணிதான் வலுவாக இருந்தது. இந்திரா தலைமையில்தான் 1980ல் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
இப்படிப் பார்த்தால் இந்திராவின் கட்சிதான் இப்போதைய காங்கிரஸ் என்றுகூட சொல்ல முடியும். இந்தியாவில் பிளவுவாத முயற்சிகளை முறியடிக்க தேசம் முழுக்க அறிந்த வலுவான தலைவர் தேவை என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். மோடியைக்கூட அப்படித்தான் 56 இன்ச் மார்புடைய மாவீரர் என்று பில்டப் செய்தார்கள்.
பிரமானந்தரெட்டியின் நடவடிக்கைக்கு பிறகுதான் காங்கிரஸின் தலைவரும், பிரதமரும் ஒருவராக இருப்பதுதான் நல்லது என்ற முடிவுக்கு இந்திரா வந்தார். 1978 முதல் 1984 ஆம் ஆண்டு காலிஸ்தான் தீவிரவாதிகளால் எந்திரத்துப்பாக்கியின் குண்டுகளால் சல்லடைக் கண்களாய் துளைக்கப்பட்டு மரணம் அடையும்வரை காங்கிரஸின் தலைவராகவும் பிரதமராகவும் அவரே நீடித்தார்.
அவருடைய மரணத்தைத் தொடர்ந்து அவருடைய மூத்த மகன் காங்கிரஸின் தலைவராகவும் பிரதமராகவும் பொறுப்பேற்றார். 1985 முதல் 1991 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்தபோது மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழக்கும்வரை தலைவராக இருந்தார்.
அவருடைய மரணத்துக்கு பிறகு நரசிம்மராவ் 1992 முதல் 1996 வரை பிரதமராகவும் தலைவராகவும் இருந்தார். 1996ல் காங்கிரஸ் தோல்வி அடைந்தவுடன் பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து சீதாராம் கேசரி தலைவராக பொறுப்பேற்றார். 1998 தேர்தலில் பாஜக தனிப்பெருங் கட்சியாக வந்த நிலையில் காங்கிரஸின் எதிர்காலம் குறித்து அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் கவலை கொண்டனர். அதைத்தொடர்ந்து, அரசியலில் இருந்தே ஒதுங்கியிருந்த சோனியாவை கட்சிப் பொறுப்பேற்கும்படி வற்புறுத்தினர். பாஜகவின் வளர்ச்சியை தடுக்கவும், இந்திய அரசியலில் நிலையற்ற தன்மை உருவாகாமல் தடுக்கவும் சோனியா தலைமையேற்க வேண்டும் என்று அகில இந்திய அளவில் கோரிக்கை வலுப்பெற்றது. எனவேதான் சோனியா காந்தி 1998 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். இந்திரா மற்றும் ராஜிவ் காந்தியின் உயிர்த்தியாகத்தை கருத்தில்கொண்டே அவர் தலைவராக பொறுப்பேற்றார். அதன்பிறகு காங்கிரஸ் இந்திய அளவில் பெரிய முன்னேற்றம் அடையவில்லை என்றாலும், தேசிய அரசியல் கூட்டணி அரசாங்கத்தை நோக்கி தள்ளப்பட்டிருப்பதை புரிந்துகொண்டு, முதல் முறையாக மத்தியில் கூட்டணி அரசுக்கு சம்மதம் தெரிவித்து அணி அமைக்க ஒப்புதல் அளித்தார்.
2017 வரை காங்கிரஸ் தலைவராகவும் கூட்டணி அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பு வகித்த சோனியா தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு பதவி விலக விருப்பம் தெரிவித்தார். இப்போதும், ராகுல் காந்தியை தலைவர் பொறுப்பேற்கும்படி அகில இந்திய காங்கிரஸ் கட்சிதான் கேட்டுக்கொண்டது. போட்டியின்றியே அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது தலைமைப் பண்பை நிரூபித்த நிலையில்தான், உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பிரியங்கா காந்தியை பொதுச்செயலாளர் ஆக நியமித்துள்ளார்.
தனது சகோதரருக்கு உதவியாக அரசியல் களமிறங்க பிரியங்காவும் ஒப்புக்கொண்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் இந்த புதிய முடிவுதான் பாஜகவை பதற வைத்திருக்கிறது. ராகுல் மற்றும் பிரியங்காவின் பிரச்சாரம் 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2014ல் மோடியைப்பற்றி கிளப்பிவிடப்பட்ட பொய்கள் அனைத்தும் அம்பலமாகி இப்போது அவர் புதிய பொய்களை அவிழ்த்துவிடத் தொடங்கியிருக்கிறார். இந்நிலையில், பிரியங்கா களம் இறங்கியிருப்பது உத்தரப்பிரதேச தேர்தல் களத்தை சூடாக்கியிருக்கிறது.
அதேசமயம், பிரியங்காவின் நியமனத்தை ஜீரணித்துக்கொள்ள மறுக்கும் பாஜக, குடும்ப ஆதிக்கத்தின் நீட்சியே பிரியங்காவின் நியமனம் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறது.
பாஜக தலைவர்களின் இந்த குற்றச்சாட்டையும், காங்கிரஸ் உடனடியாக தகர்த்திருக்கிறது. காங்கிரஸ் மட்டுமின்றி, இந்தியாவின் அனைத்து மாநில அரசியல் கட்சிகளிலும் குடும்ப அரசியல் இருக்கிறது. பாஜகவிலும் மாநிலத் தலைவர்கள் அளவில் அவர்களின் வாரிசுகள் அடுத்தடுத்து பொறுப்புகளுக்கு வருவதையும் ஆதிக்கம் செலுத்துவதையும் காங்கிரஸ் சுட்டிக்காட்டியிருக்கிறது.
மிக முக்கியமாக ஆர்எஸ்எஸ்சிலும், பாஜகவிலும் குடும்பம் இல்லாதவர்கள் நிறைய இருக்கிறார்கள். வாஜ்பாய்க்கு குடும்பம் இல்லை. மோடிக்கும் குடும்பம் இல்லை. அரசியலில் குடும்பம் இருந்து வாரிசுகள் இருந்தால், அவரவர் கட்சியின் நலனுக்காக அவர்களை ஈடுபடுத்தவே செய்வார்கள் என்பதை இன்றைய இந்திய அரசியல் நிலைமை தெளிவுபடுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
முடிவாக, 30 ஆயிரம் கோடி செலவழித்து, மூன்று ஆண்டுகள் பல்வேறு பொய்களை சொல்லி மோடியைப் போல ஒரு பில்டப் தலைவரை உருவாக்க வேண்டிய நிலை தங்களுக்கு ஏற்படவே செய்யாது என்கிறார்கள் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்.
(இந்தக் கட்டுரை 2024 மக்களவைத் தேர்தலில் இப்போது நிஜமாகி இருக்கிறது... கேடியின் தாலி குறித்த பேச்சுக்கு ராகுல் பேசியிருந்தால்கூட இந்த அளவுக்கு வீச்சு இருந்திருக்காது... பிரியங்காவின் பேச்சுக்கு இந்தியா முழுவதும் ஏற்பட்டிருக்கிற ஆதரவு மிக முக்கியமானது)
Previous Post Next Post

نموذج الاتصال