I Hate You. இதை தாண்டி சொல்ல வேறு எதுவும் இருக்கிறதா என்ன?
என்னை பார்க்காதே, என்னிடம் பேசாதே, என்னிடம் எதையும் எதிர்பார்க்காதே என்பதை தாண்டி வேறு எதுவும் இல்லை. உலகில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளை விடவும் மிகவும் வலிமை நிறைந்த ஒரு சொற்றொடர். அதனாலேயே இதை நான் பயன்படுத்தியதே இல்லை.
பல வருடங்களுக்கு முன்னர், ஓரிருவரை , அவர்கள் இறந்து போனால் கூட நன்றாக இருக்கும் என்று நினைத்த தருணங்களில் கூட, இந்த சொற்றடரை பயன்படுத்தியதில்லை.
I Hate You வில் உள்ள ஆழம் I Love You வில் கூட இல்லை. ஒருவரை பிடிக்காமல் போகும் பட்சத்தில் I Hate You சொல்லும் போது அதை பொருள் மாறுபாடு எதுவும் இல்லை.
ஒருவரின் மேல் அன்பு செலுத்தும் போதோ இல்லை அவரை பிரிய நேரும் போதோ சொல்லும் Hate You சொல்லும் போது எழும் அந்த மன அழுத்தத்தை ஆயிரம் ஆயிரம் அன்பு வார்த்தைகளுக்கு ஈடாகாது.
நண்பர்கள் அனைவரும் பெயரை சொல்லி அழைக்கும் போது, மிக நெருங்கி, நெருக்கமான நண்பர் 'நாயே, எரும' என்று அழைப்பது போல.
எதிரிகள் இருவர் ஒருவரைஒருவர் தாக்கிக் கொள்ளும் பொழுதும், அம்மாவோ அப்பாவோ கோபத்தில் நம்மை அடிக்கும் பொழுதும் இருக்கும் வேறுபாடு இந்த I Hate You.
பள்ளி பருவத்தில் ஒருமுறையும் கல்லூரி முடித்த சமயத்தில் ஒருமுறையும் இந்த சொற்றொடரை இருவர் என் மேல் பயன்படுத்தி இருக்கிறார்கள். இரண்டிலும் , அதில் இருந்த அன்பை தாண்டி ஒரு வலியை உணர முடிந்தது.
நான் காட்டும் அன்பு உனக்கு எப்போதுமே புரியாதா என்பதை வேறு என்ன வார்த்தைகள் கொண்டு சொல்வது! என் அன்பு நிராகரிக்கப்பட்ட உறவுகள் சில உண்டு. ஆனாலும் ஒருபோதும் இந்த சொற்றொடரை பயன்படுத்தியதில்லை.
ஒருவேளை என் அன்பு அத்தனை ஆழமானதாகவோ இல்லை அந்த நிராகரிப்பை கடந்து செல்லும் மன திடமாகவோ இருந்திருக்கலாம். இல்லை என்றால் இந்த நபர் இல்லையென்றால், வேறு நட்பு கிடைக்கும் என்ற எண்ணமாகவோ கூட இருந்திருக்கலாம்.
உடைந்து போன அந்த நட்பு அப்படியே ஓடைந்தே போனது. ஒட்ட வைக்க எந்த முயற்சியும் எடுத்ததில்லை. சொன்ன அவருக்கு எந்த இழப்பும் இல்லை. நிராகரித்த நான், என்ன இழந்திருக்கிறேன் என்று எண்ணும் பொழுது, மீண்டு அந்த நாளுக்கு சென்று அதை மாற்றி அமைக்க தோன்றுகிறது.
முதல் முறை தவற விட்ட அந்த அன்பை, இரண்டாம் முறை நிகழும் பொழுது கை நழுவாமல் பிடித்த பொழுது தான் தெரிந்தது I Hate You வில் எத்தனை அன்பு கொட்டிக் கிடக்கிறது என்று.
அடுத்த முறை மிகவும் அன்பு செலுத்திய யாரவது I Hate You என்று சொன்னால், அந்த நபரை மட்டும் தவற விட்டுவிடவே கூடாது. அது நட்போ , உறவோ , காதலோ.
உண்மையான அன்பைI Love You க்களைவிட I Hate You வே வெளிக்காட்டுகிறது.