பத்திரிகை சுதந்திரத்திற்காக நக்கீரன் நடத்திய போராட்டம்! - ஆதனூர் சோழன்


உலக பத்திரிகை சுதந்திர நாள் என்றால், ஒரு பத்திரிகையாளனாக எனக்கு சந்தோஷம்தான் ஏற்பட வேண்டும். அப்படியெல்லாம் இல்லை.

பத்திரிகை சுதந்திரம் குறித்து 1975 காலகட்டத்தில்தான் எனக்கு புரிபடத் தொடங்கியது.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகைகள் என்று அரசியல் சாசனம் கூறுகிறது. இப்போது பத்திரிகைகள் என்பதைத் தாண்டி காட்சி ஊடகங்களும் இணைந்துள்ளன. 

ஆனால், ஒரு பத்திரிகையாளனாக நான் வெட்கப்படுகிறேன். இன்றைய பத்திரிகைகளும், காட்சி ஊடகங்களும் செயல்படும் விதம் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

நேர்மையாக செயல்பட வேண்டும், ஜனநாயகம், சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கமுள்ள பத்திரிகையாளர்களுக்கு இப்போது மதிப்பே இல்லை.

பத்திரிகைகள் அனைத்துமே எந்தக் காலத்திலும் நேர்மை, நீதி, நியாயம் பக்கம் நின்றன என்று சொல்லிவிட முடியாது.

முதலாளிகள் விருப்பத்துக்கே செய்திகளை போட முடியும் என்பதே காலத்துக்கும் தொடர்கிற நடைமுறை. 

ஆனால், தங்களுக்கு நல்லது எது என்று பார்த்து எல்லா முதலாளிகளும் செயல்பட்டார்கள். அதேசமயம், மக்களைப் பாதிக்கும், தங்களுடைய தொழிலுக்கு உரிய உரிமைகளைப் பாதிக்கும், தங்கள் தொழிலை கேவலப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை எந்தப் பத்திரிகை முதலாளியும் ஏற்பதில்லை.

நெருக்கடி நிலைக் காலத்தில் பேச்சுரிமை, எழுத்துரிமை பறிக்கப்பட்டபோது அதற்கு எதிராக எவ்வளவு திறமையாகவும், துணிச்சலாகவும் பத்திரிகைகள் செயல்பட்டன என்பதை பார்த்திருக்கிறேன்.

தமிழ்நாட்டில் இருந்த திமுக அரசு, தனக்கு எதிராக செயல்படும் பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்க எல்லா வாய்ப்பும் இருந்தபோதும், அரசுக்கு எதிராக எழுத அனுமதித்ததையும் பார்த்திருக்கிறேன்.

அதுபோலத்தான் 1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதா அரசின் அட்டூழியங்கள் அளவுக்கு மீறிப் போனபோது, பெரும்பாலான பத்திரிகைகள் ஜெயலலிதாவின் அராஜகத்தையும், ஊழல்களையும் அம்பலப்படுத்தின.

அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டால், பத்திரிகைகளின் செயல்பாடுகள் மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என்பதை, முதலாளிகளே உணர்ந்திருந்தார்கள். 

அரசு மீதனா மக்கள் வெறுப்பையும் அரசுக்கு எதிரான மக்கள் மனநிலையையும் வெளிப்படுத்தாமல், அவற்றை மூடி மறைத்து, போலித் தோற்றத்தை உருவாக்கும் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளுமே இப்போது இருக்கின்றன.

முன்பு பத்திரிகளையே தங்கள் தொழிலாக நடத்திய முதலாளிகள் இருந்தார்கள். அரசாங்கத்தையே சட்டைப் பிடித்து கேட்கிற துணிச்சலை வெளிப்படுத்தினர். அதன் காரணமாகவே தங்கள் விற்பனையை அதிகரித்து பணம் சம்பாதித்தனர்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்று, அவர்களுடைய பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தவர்கள் ஜெயித்தார்கள். ஒளிக்கப்படும் உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் துணிச்சல் மிக்க பத்திரிகைகள் விற்பனையில் சாதனை படைத்து மக்கள் நம்பிக்கையைப் பெற்றன.

கொள்கைகளை குப்பையில் போடுவதும், அதிகாரத்தில் இருப்பவர்களுடன் ஐக்கியமாவதும் எந்தக் காலத்திலும் சகஜமாகவே இருந்திருக்கிறது. ஆனால், அது ஒரு அளவுக்குத்தான். தங்கள் தொழில் பாதிக்கும் அளவுக்கு போக மாட்டார்கள்.

குறைந்தபட்சம் முதல்பக்கத்தில் இடம்பெறக்கூடிய செய்தி உள்பக்கத்திலாவது இடம்பெறும். ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று இருதரப்புச் செய்திகளையும் பிரசுரிப்பார்கள்.

எதையும் முந்தித் தரவேண்டும் என்ற வேகம் இருக்கும். உறுதி செய்யப்படாத செய்திகள் பெரும்பாலும் இருக்காது. தவறான செய்திகளைப் பிரசுரித்துவிட்டால், வருத்தம் தெரிவிக்கும் பண்பு இருந்தது.

இதெல்லாம் இப்போது சுத்தமாக இல்லை. ஆளுந்தரப்பின் குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சிகளின் பதில் பெரும்பாலும் இடம்பெறுவதில்லை. தங்களுக்குப் பிடித்தவர்கள் ஆதாரமே இல்லாமல் எத்தகைய பொய்த் தகவல்களைச் சொன்னாலும் அப்படியே பிரசுரிக்கிறார்கள். ஒளிபரப்புகிறார்கள். அவர்கள் சொல்வது உண்மையா பொய்யா என்ற அறிவும் இல்லை. தெரிந்தே இருந்தாலும் எதிர்க்கேள்வி கேட்கும் பழக்கமும் இல்லை.

முதலாளிகள் அல்லது முதன்மை ஆசிரியரின் வழிகாட்டுதல்கள் இந்த லட்சணத்தில்தான் இருக்கின்றன. நேர்மையாக செயல்படும் நெறியாளர்கள் பந்தாடப்படுகிறார்கள். ஊடக தர்மம் புரிந்தவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக எதையும் தாங்கும் இதயத்தை யாரிடமாவது கடன் பெற்று வேலை செய்கிறார்கள்.

தமிழில் ஒரு வரி பிழையில்லாமல் எழுதத் தெரியாதவர்கள் சொல்லும் தகவலை அவர்களுடைய பெயரில் செய்தியாக்கும் வேலையைத்தான் அவர்கள் செய்கிறார்கள்.

பத்திரிகைகள் கொடுக்கும் சம்பளத்துடன் செய்தியாளர் சந்திப்பில் தரப்படும் கவர்களும் கூடுதல் சம்பளமாக இருந்தது. அது இப்போதும் இருக்கிறது. 

முன்பு கவர் கொடுத்தாலும், உள்ளது உள்ளபடி செய்தியை பதிவு செய்தார்கள். அந்தச் செய்தியின் பின்னணித் தகவல்களையும் கொடுத்தார்கள். 

இப்போது, யாருக்கு எதிராக அந்தச் செய்தி இருக்கிறது? அவர்களுக்குப் பாதிப்பு இல்லாமல் அந்தச் செய்தியை எப்படி வெளியிடுவது? என்றெல்லாம் யோசனை செய்யும் நிலை இருக்கிறது.


உண்மைகளை வெளிக் கொண்டு வருவதிலும், பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக தொடர்ந்து நிற்பதிலும் நக்கீரன்தான் எனக்கு மிகவும் பிடித்த பத்திரிகை.

தீக்கதிர் நியாயத்தின் பக்கம் நின்றே ஆகவேண்டிய கட்டாயம். ஏனென்றால் அது மக்கள் பத்திரிகை. ஆனால், நக்கீரன் அப்படியல்ல. உண்மையைக் கொண்டு வரும் முயற்சியில் நக்கீரனும், அதன் ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களும் சந்தித்த சவால்களையும், துன்பங்களையும், வழக்குகளையும் வேறு எந்தப் பத்திரிகையும் சந்திக்கவில்லை.

அதுமட்டுமல்ல. பத்திரிகையின் உரிமைகள், பத்திரிகையாளனின் உரிமைகளுக்கான போராட்டத்தில், நக்கீரன் பெற்றுக் கொடுத்த பல தீர்ப்புகளின் பலனை பல பத்திரிகைகள் வேறு வகையில் அனுபவிக்கின்றன.

நக்கீரனை எந்த நோக்கத்தில் தொடங்கினேனோ, இறுதிவரை அதில் உறுதியாக இருப்பேன் என்று ஒருமுறை சொன்னார் நக்கீரன் கோபால்.

நக்கீரன் அரசியல், கிரைம், செக்ஸுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் என்று சிலர் சொல்வார்கள். அவர்கள் வாசிப்பதாக சொல்லும் பத்திரிகைகளில் வேறு என்ன வாழுது என்பதே எனது கேள்வி.

இதுவரை வேறு பத்திரிகைகள் பத்திரிகைகளின் உரிமைக்காகவோ, மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிப்படுத்தவோ என்ன செய்திருக்கின்றன என்று கேட்டால், ஒன்றுமே இருக்காது.


பத்திரிகையாளர்களைச் சந்திக்க விரும்புவதாக எல்லா பத்திரிகைகளுக்கும் சந்தனக்கடத்தல் வீரப்பன் கடிதம் அனுப்பினான். ஆனால், நக்கீரனைத் தவிர வேறு யார் அவனை சந்திக்க தயாராக இருந்தார்கள்?

நித்தியானந்தா, பிரேமானந்தா உள்ளிட்ட சாமியார்களின் லீலைகளையும், ஆட்டோ சங்கர், காஞ்சி சங்கராச்சாரி உள்ளிட்டோரின் குற்றச் செயல்களையும் துணிச்சலாக அம்பலப்படுத்தியது யார்? நக்கீரன் வெளிக்கொண்டு வந்த பிறகுதான் மற்ற பத்திரிகைகள் வேறு வழியின் அந்தச் செய்திகளை பிரசுரிக்கத் தொடங்கின.

ஊடகங்கள் நக்கீரன் போல துணிச்சலான முயற்சிகளில் ஈடுபட்டு நாட்டுக்கும் மக்களுக்கும் எதிரான விஷயங்களை அம்பலப்படுத்தினால் வருகிற இளைய தலைமுறை விழிப்புணர்வு பெறும். 


Previous Post Next Post

نموذج الاتصال