இந்திரா
காந்தி 1975 ஆம் ஆண்டு கொண்டுவந்த நெருக்கடி நிலைக் காலத்தில்தான் அகில இந்திய தலைவர்கள்
பலரைப்பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்களை ஜெயப்பிரகாஷ்
நாராயணன் ஒருங்கிணைத்தார். அதுவரை சிதறிக்கிடந்த எதிர்க்கட்சிகளை சிறையிலேயே ஒருங்கிணைத்து
ஜனதாக் கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கினார்.
தமிழ்நாட்டில்
கலைஞர் தலைமையிலான அரசு இருந்ததால் நெருக்கடி நிலையின் வெப்பம் இங்கே தடுக்கப்பட்டது.
அன்றைய தமிழ் செய்தித் தாள்களில்தான் வடக்கே நடப்பவைகள் தணிக்கையின்றி வெளியிடப்பட்டன.
தினமணி,
எக்ஸ்பிரஸ் போன்ற தேசிய நாளிதழ்கள் ஜெயப்பிரகாஷ் நாராயண், ராஜ்நாராயண், தேவிலால், சரண்சிங்,
வாஜ்பாய், ஜார்ஜ் பெர்ணான்டஸ், பிஜு பட்நாயக் போன்ற தலைவர்களையும் அவர்களுடைய கட்சிகளையும்
தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தின.
மத்திய
அரசால் தேடப்பட்ட சில தலைவர்களுக்கு கலைஞர் தலைமையிலான அரசு அடைக்கலம் கொடுத்ததாகவும்
செய்திகள் வெளியாகின. ஒருவழியாக, 1977 மார்ச் மாதம் நெருக்கடிநிலை திரும்பப்பெறப்பட்டு
தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச்
சந்தித்தது. அவரே தோல்வியடைந்தார்.
மொரார்ஜிதேசாய்
பிரதமராகப் பொறுப்பேற்றார். அவருடைய அமைச்சரவையில் வாஜ்பாய் வெளியுறவுத்துறை அமைச்சராகவும்,
அத்வானி தகவல் தொடர்புத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்கள். இவர்கள் ஜனசங்கத்தைச்
சேர்ந்தவர்கள். இவர்களால்தான் ஜனதா அரசுக்கு முதல் நெருக்கடி முளைத்தது. ஜனசங்கத்தில்
இருப்பவர்கள் ஆர்எஸ்எஸ்சிலும் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது என்ற குரல் ஒலித்தது.
ஆனால், ஆர்எஸ்எஸ் உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலக முடியாது என்று கூறி வாஜ்பாயும்
அத்வானியும் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
அதைத்தொடர்ந்து,
ஜனதாக் கட்சியை காங்கிரஸ் எளிதாக உடைத்தது. அந்தக் கட்சியில் பிரதமர் கனவோடு இருந்த
சரண்சிங்கை ஆதரிப்பதாக ஆசைகாட்டி ஜனதாக் கட்சியை பிளந்து, அடுத்த சில மாதங்களில் அவரையும்
கவிழ்த்தது காங்கிரஸ்.
இந்த
நிகழ்வுக்குப் பிறகுதான் ஜனசங்கம் என்ற பெயர் பாஜக என்று மாற்றப்பட்டது. ஜனதாக் கட்சி
ஆட்சி கவிழ்ந்தபிறகு பாஜக என்ற பெயரில் போட்டியிட்டாலும் பெரிய வெற்றி எதையும் அது
பெற்றுவிடவில்லை. ஆனால், 1989ல் வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணி அரசு அமைந்தபோது,
அந்த அரசுக்கு 86 இடங்களை வைத்திருந்த பாஜகவும், 52 இடங்களை வைத்திருந்த இடதுசாரிகளும்
வெளியிலிருந்து ஆதரவளிக்க முன்வந்தன.
இந்த அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டே, மதவெறியைத்
தூண்டும் வகையில் ரதயாத்திரையை தொடங்கினார் அத்வானி. அதேநேரத்தில் கிடப்பில் போடப்பட்டிருந்த
மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசுப் பணிகளிலும் இட ஒதுக்கீடுக்கு வழி அமைத்தார்
வி.பி.சிங். அவருடைய முடிவை எதிர்த்து பாஜக போராட்டங்களை முன்னெடுத்தது. அத்வானியின்
ரதயாத்திரை பிகாருக்குள் நுழைந்தவுடன் அவரைக் கைதுசெய்தார் லாலு. இதையடுத்து வி.பி.சிங்கிற்கு
அளித்த ஆதரவை திரும்பப் பெற்றது பாஜக.
1991
ஆம் ஆண்டு நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தது. அந்த நாடாளுமன்றத்தில் பாஜக
120 இடங்களுடன் எதிர்க்கட்சியாக அமர்ந்தது. 244 பேர் ஆதரவுடன் பிரதமரான நரசிம்மராவ்
5 ஆண்டு பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்தார். ஆனால், பாஜக தனக்கிருந்த 120 எம்பிக்களின்
பலத்தைக் கொண்டு அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து நாடுமுழுவதும் ரத்தக்களறியை ஏற்படுத்தியது.
1996
ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக பாஜக 161 இடங்களுடன் தனிப்பெருங்கட்சியாக
வந்தது. அதன் கூட்டணிக் கட்சிகள் 26 இடங்களை பெற்றிருந்தன. பாஜகவை ஆதரிக்க வேறு எந்தக்
கட்சியும் முன்வரவில்லை. தேசிய முன்னணி மற்றும் மாநிலக் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்தால்
வெளியிலிருந்து ஆதரிக்க தயார் என்று காங்கிரஸ் அறிவித்தது. ஆனால், தனிப்பெருங்கட்சி
என்ற வகையில் தன்னைத்தான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று வாஜ்பாய் பிடிவாதமாக
இருந்தார்.
இதையடுத்து,
குடியரசுத்தலைவர் சங்கர்தயாள் சர்மா வாஜ்பாய்க்கு பிரதமராக பதவிப்பிரமானம் செய்துவைத்தார்.
ஆனால், 13 நாட்களே பிரதமராக இருந்த வாஜ்பாய், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ராஜினாமா
செய்தார். அதைத் தொடர்ந்து, மாநிலக் கட்சிகள் இணைந்த ஐக்கியமுன்னணி அரசு, தேவெகவுடா
தலைமையில் காங்கிரஸ் ஆதரவுடன் பதவியேற்றது.
இரண்டே
ஆண்டுகளில் இரண்டு பிரதமர்கள் பொறுப்பேற்ற ஐக்கிய முன்னணி அரசு கவிழ்ந்த பிறகு
1998 ஆம் ஆண்டு அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு வாஜ்பாய் பிரதமரானார். இந்தமுறை
தமிழகத்தில் திமுக ஆட்சியை கலைக்கும்படி வாஜ்பாயை அடிக்கடி வற்புறுத்தினார் ஜெயலலிதா.
வாஜ்பாய் நிம்மதி இழந்து தவித்தார். பாஜகவின் மூத்த தலைவர்களும் கூட்டணிக் கட்சி தலைவர்களும்
டில்லிக்கும் சென்னைக்குமாக பறந்து கொண்டிருந்தனர். திமுக அரசை கலைக்க வாஜ்பாய் மறுத்துவிட்டார்.
எனவே, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து வாஜ்பாய்க்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்றார் ஜெயலலிதா.
ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு 11 மாதத்திலேயே கவிழ்ந்தது. ஆனால், மாற்று
அரசு அமைக்கும் முயற்சி கைகூடவில்லை. இந்நிலையில்தான் கார்கில் சண்டை தொடங்கியது. அந்தச்
சண்டை முடியும்வரை வாஜ்பாய் அரசு நீடித்தது. அந்தச் சண்டையில் கிடைத்த வெற்றியும் திமுக
உள்ளிட்ட புதிய கட்சிகளின் கூட்டணியும் 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில்
வாஜ்பாய் தலைமையில் மீண்டும் அரசு அமையும் வாய்ப்பை ஏற்படுத்தியது.
இந்தமுறை
முழுமையான பதவிக்காலத்தை நிறைவு செய்தார் வாஜ்பாய். ஆனால், 2001 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின்
மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் முயற்சி பாஜக அரசின் பாதுகாப்புத் தன்மையை கேள்விக்குரியதாக
ஆக்கியது.
அதைத்தொடர்ந்து
2002 ஆம் ஆண்டு குஜராத்தில் மிகப்பெரிய மதக்கலவரம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான
முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அவர்களுடைய சொத்துக்கள் சூறையாடப்பட்டன. பாஜகவும் சங்
பரிவாரங்களும் சேர்ந்து நடத்திய இந்த கொலைவெறித் தாண்டவத்தில் சொந்த மாநிலத்திலேயே
லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டனர்.
இந்த
கலவரத்தை ஒடுக்க வாஜ்பாய் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கடுமையான விமர்சனம்
எழுந்தது. அன்றைய குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன் வெளிப்படையாகவே தனது அதிருப்தியை
தெரிவித்தார். பின்னர், இந்தக் கலவரம் குறித்து கருத்துத் தெரிவித்த வாஜ்பாய் உலக அளவில்
இந்தியா மீது படிந்த கறை என்றார். 2004 ஆம் ஆண்டு பாஜகவை மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு
வரவிடாமல் தடுக்க காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் எதிர்க்கட்சிகள் புதிய கூட்டணியை
அமைத்தன. அதைத்தொடர்ந்து பாஜக படுதோல்வி அடைந்தது.
2009
ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். அதே ஆண்டு அவருக்கு
மார்புப் பகுதியில் ஏற்பட்ட தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார்
10 ஆண்டுகளுக்கு மேலாக நோய்வாய்ப்பட்டிருந்த வாஜ்பாய் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
17 ஆம் தேதி மாலை மரணம் அடைந்தார்.
ஈழத்தமிழருக்காக
1980களில் திமுக தலைமையிலான டெஸோ அமைப்பு சார்பில் மதுரையில் மிகப்பெரிய மாநாடு நடைபெற்றது.
அந்த மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய வாஜ்பாய்தான் முதன்முதலில் இலங்கையில் நடைபெறுவது
இனப்படுகொலை என்று பகிரங்கமாக அறிவித்தார். இந்த வார்த்தையை பயன்படுத்திய முதல் வட
இந்திய தலைவர் இவர்தான்.
(17-08-2018ல் நக்கீரனுக்காக எழுதியது)