நெல்லையில் ஒரு சதி வரலாறு - அருண் பாலா

 

திருநெல்வேலியில் வெளியூர்க்காரர்களுக்கு அவ்வளவாகத் தெரியாத, ஐம்பது ஆண்டுகளுக்கு முன் காலத்தால் உறைந்து போனது போல் காட்சியளிக்கும், ஒரு பழைய கடைத்தெரு ஒன்றிருக்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி, மாவீரன் ஊமைத்துரை முதல், சமீபத்தில் மறைந்த அறிஞர் தொ.ப வரை பலப்பல மனிதர்களை, வரலாறுகளைக் கண்டதை, கடந்ததைக், காட்டிக் கொள்ளாத பகுதி அது. பாளையங்கோட்டை தெற்கு பஜார் என்பது அதன் பெயர்.


அதன் கிழக்கு முனையில், குளோரிந்தா ஆலயம் என்ற ஒரு சிறிய, பழைய கிறிஸ்துவ தேவாலயம் இருக்கிறது. நெல்லையில் பத்தோடு ஒன்று பதினொன்றாக இன்னுமொரு சர்ச் இருப்பதில் என்ன அதிசயம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதற்கான பதிலுக்கு நாம் நெல்லைச் சீமையிலிருந்து தஞ்சைச் சீமைக்குப் போக வேண்டும். 


தஞ்சாவூரில் அரண்மனைக்கு அருகிலேயே ஒரு வீடு. அங்கே கோகிலா என்கிற பதிமூன்றே வயதான ஒரு சிறுமி நிற்கிறாள். அவளைச் சுற்றி அவள் உறவினர்கள் கூட்டம். தமிழ், மராத்தி, சமஸ்கிருதம் என பல மொழி சத்தமும் கேட்கிறது. ஒரே பரபரப்பு. அவர்கள், அவளுக்கு மஞ்சள் பூசி, வாசனைத் தைலங்கள் விட்டுக் குளிப்பாட்டிப், புதுப் பட்டுத்  துணி உடுத்துகிறார்கள்; மை தொட்டுக், குங்குமம் இட்டு அலங்காரம் செய்கிறார்கள்; மாலை சூட்டுகிறார்கள். 


கல்யாணச் சடங்கு போல் தெரியாத ஏதோ ஒரு சடங்கிற்கு அவர்கள் தயாராவது தெரிகிறது. பெற்றோர் இல்லாத அவளை வளர்க்கும், தஞ்சை மன்னரிடம் பண்டிதராக இருக்கும் அவளது வயது முதிர்ந்த தாத்தாவும், பாட்டியும் ஒரு மூலையில் சுருண்டிக்கிறார்கள். ஆண் உறவினர்கள் வெளியில் நின்று அவரசப் படுத்த,  பெண்கள் வீட்டுக்குள்ளே மும்முரமாக வேலை பாரக்கிறார்கள்.


தன்னைச் சுற்றி நடக்கும் அத்தனை களேபரத்திற்கும் நடுவில் அவளுக்கு மட்டும் என்ன நடக்கிறது என்று சரியாகப் புரியவில்லை. யாரும் அவளிடம் எதுவும் சொல்லமாட்டேன் என்கிறார்கள். அந்த பிஞசு முகத்துக்குரிய அப்பாவித்தனமான அழகு வாடிப் போய், சிங்கக் கூட்டத்தில் சிக்கிய மான் குட்டி போல் மிரட்சி தெரிகிறது. கண்கள் கலங்கி, எந்த நொடியும் அழுதுவிடுவாள் போலிருக்கிறது.


கடைசியில் அலங்காரம் முடிந்து இவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்த பெண் உறவினர்கள், வெளியே ஒரு பாடையுடன் காத்துக் கொண்டிருந்த ஆண்கள் கூட்டத்திடம் ஒப்படைக்கிறார்கள்.


மராத்திய கொட்டு, நாயன ஒலியுடன் ஊர்வலம் நகரத் தொடங்குகிறது. பாடையில் கிடக்கும் பாலகன், கடந்த ஒரு வருடம் முன் இவளுக்குக் கணவனாக அறிமுகமானவன். விசேஷ நாட்களில்  அவனுடன் பேசி சிரித்து விளையாடியிருக்கிறாள். அவன் சடலம், அந்த மாலைகள், ஒப்பாரியாய் ஓலித்த நாயன ஓசை, விரல்கள் பதிந்துச், சிவக்கும் படி, இவளை இறுக்கமாகப் பிடித்து இழுத்துச் சென்ற கைகள்.. எல்லாம் சேர்ந்து பயத்தில் தலை சுற்றியது இவளுக்கு. அப்போது தான் இவளது உறவுக்கார அக்காள் ஒருத்தி ஓடி வந்து இவள் காதில் பகவானை வேண்டிக் கொண்டு குதித்து விடு. சுடாது. சில நொடிகளில் முடிந்து விடும் என்று சொல்லிக்,  கட்டிப்பிடித்து முத்தம் இட்டு, கண்ணீரோடு ஓடி மறைகிறாள். தன்னை எரித்துக் கொல்ல போகிறார்கள் அந்த குழந்தைக்கு அப்போது தான் தெரிகிறது.


ஓவென்று அழத் தொடங்குகிறாள். புழுதியில் விழுந்து, இழுத்துச் செல்கின்ற கால் பிடித்துக் கதறுகிறாள். அலங்காரம் அலங்கோலமாகி கண்ணீரும் கம்பலையுமாக, தொண்டை வற்றக் கதறி ஒரு குழந்தை உயிர்ப் பிச்சை கேட்டும், அங்கே யாரும் இரங்கவில்லை. யார் மனமும் இளகவில்லை. வீடுகளின் உள்ளே  நின்று பார்ததுக் கொண்டிருந்த பெண்கள சிலையாகி நிற்கிறார்கள். சிலர் சாமி ஊர்வலத்தைப் பார்ப்பது போல் பக்திப் பரவசமாகி நிற்கிறார்கள். எல்லாருக்கும் ஒன்று சொன்னாற் போல் ஏதோ ஒரு பேயோ மன நோயோ பிடித்துவிட்டதா என்று தோன்றியது.  இவளை இன்னும் மூர்க்கமாகத் தர தரவென தெருவில் இழுத்துச் செல்கின்றன அந்த பூனூல்களும் குடுமிகளும் உத்திராட்சங்களும் பஞ்ச கச்சங்களும். இவளைத் தவிர அங்கு வேறு மனிதர்களே இல்லை!


திடீரென்று குதிரைகள் வரும் சத்தம் கேட்க, மொத்த கூட்டமும் மவுனமாகிறது. கூட்டத்தினரை விட வெள்ளை வெளேர் என இருந்த ஒருவர், சீமை ராணுவ உடையுடன் குதிரையில் இருந்து இறங்கி வந்து சிறுமியை விட்டு விடுங்கள் என்கிறார். கணவனை இழந்தவள் அவனுடனேயே தீயில் எரிய வேண்டும் என்பது எங்கள் "சனாதன தர்மம்". அதில் தலையிட கும்பினியாருக்கு உரிமை இல்லை என கூட்டத்தில் மூத்தவர் துபாஷி மூலம் அந்த வெள்ளையரிடம் சொன்ன போது தான், அவர்கள் அத்தனை பேரையும் பிடித்திருந்த பேய் நோயின் பெயரைத் தெரிந்து கொண்டாள் அவள். பதில் எதுவும் பேசாத அந்த வெள்ளைக் கார இராணுவ அதிகாரி ஹென்றி லிட்டில்டன் துப்பாக்கியால் வானத்தைப் பார்த்து ஒரு முறை சுட்டதும், பாடையைப் போட்டு விட்டு, ஓடி மறைந்தது கூட்டமும் சனாதனமும்.அடுத்த நாள் காலை அக்கிரகாரத்துக்குக் கும்பினிப் படை வீரர்கள், அவளைப் பத்திரமாக அழைந்து வந்து விட்டுச் செல்ல வந்த போது, கதவுகள் அனைத்தும் மூடிக் கொண்டன. அவள் வீடும் கூட அவளுக்காகத் திறக்கவில்லை. பாதியில் நின்ற சடங்கால் தோஷம் ஏற்பட்டதால், அவள் ஜாதிப்பிரஷ்டம்  செய்யப்பட்டதாக துபாஷியிடம் சொல்லப் பட, அவள் கும்பினியாருடனேயே திரும்ப வேண்டி வந்தது.


லிட்டில்டன் பாதுகாப்பிலேயே இருந்து, அடுத்த ஆண்டு அவர் நெல்லைக்கு மாற்றலாகிய போது நெல்லைக்கு குடிபெயர்ந்து, பாளையங்கோட்டையில் கல்வி கற்று, யுவதியாக வளர்ந்து, கடைசியில் லிட்டில்டனுக்கே துணைவியாகி, "கிளாரா இந்தியா"  என்று பெயர் மாற்றி, அது சுருங்கி 'குளோரிந்தா'வாகி, தமிழ் நாட்டில் அப்போதிருந்த நான்கே நான்கு மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்துவராக முயன்று அது சுவார்ட்ஸ் பாதிரியாரால் மறுக்கப் பட்டு, பின்னர் சில ஆண்டுகளில் பக்தி மெச்ப் பட்டுக் கடைசியில் ஞானஸ்நானம் கொடுக்கப் பெற்றாள் கோகிலா.


அடுத்த சில ஆண்டுகளிலேயே இங்கிலாந்து பயணமான கர்னல் லிட்டில்டன் அங்கேயே இறந்து போக, அவரது உயில் படி அவரது இந்திய சொத்துக்கள் குளோரிந்தாவுக்கு வர அதை விற்று நெல்லைச் சீமையின் முதல் கிறிஸ்துவ தேவாலயத்தைக் கட்டுகிறாள் அந்த பார்ப்பன இனத்தில் பிறந்த பெண்!


தொடர்ந்து கிறிஸ்துவ மதப்பிரச்சாரம் செய்த குளோரிந்தா என்ற கோகிலா, மக்கள் தொகை குறைந்த அந்த காலத்திலேயே 5000 பேரைக் கிறிஸ்தவராக்குகிறார். அவர் தொடங்கிய பள்ளி இன்று ஜான்ஸ் கல்லூரியாக நிற்கிறது; அப்போது நிலவிய பஞ்சத்தைப் போக்க அவள் செலவில் தோண்டிய இரண்டு கிணறுகள் அதே பகுதியில் 'பாப்பாத்திக் கிணறு' என்ற பெயருடன் இன்றும் இருக்கின்றன. 


அன்று 1759ல் தஞ்சையில் கோகிலாவின் கணவனாகிய அந்த சிறுவனுக்கு அகால மரணம் நடக்காமல் இருந்திருந்தால், என்னவெல்லாம் மாறியிருக்கும்?


- திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் ஒரு வேளை கிறிஸ்துவர்கள் எண்ணிக்கை இவ்வளவு  வளர்ந்திருக்காது.


-ஜான்ஸ் கல்லூரியில் படித்த பலர் படிக்காத பாமரர்களாகவே இருந்திருக்கலாம். 


- அந்த ஐயாயிரத்தில் சில ஆயிரம் பேராவது, துண்டைக் கக்கத்திலோ, தலையில் சும்மாடாகவோ வைத்துக் காலத்தைக் கழித்திருக்கலாம். அதில் ஒரு சில பேருக்குக் கோகிலாவுக்கு நடக்கவிருந்த கொடுமை கூட நடந்திருக்கலாம்.


- அதே கோகிலாவின் பத்தாவது தலைமுறையில் ஒரு கஸ்தூரியோ ஷேஷாத்ரியோ இன்று வந்து டிவிட்டரில் 'நான் சனாதனி' என்று டிபி வைத்திருக்கலாம்.


- வாயைத் திறந்தாலே பொய், வன்மம், விசம் மட்டுமே கக்கும் மனிதக் கணக்கிலேயே வராத கேவலமான, கொடிய மிருகம் ஒன்று உடன் கட்டை ஏறுவது பெண்கள் தங்கள் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள தாமாகப் பின்பற்றிய உயர்ந்த சனாதனப் பண்பாடு என்று விசம் கக்கியிருக்கலாம். அதையும் சில பெண்களும், பிற்படுத்தப் பட்டவர்களும் கூட ரசித்திருக்கலாம்


- இன்றும் பதிமூன்று வயது கோகிலாக்களுக்குத் திருமணம் நடத்துபவர்களை ஒன்றிய அரசின் தமிழ் நாட்டு முகவரே கூட ஆதரித்துப் பேசியிருக்கலாம்.


மன்னிக்கவும்.. கடைசி இரண்டும் இப்போதும் நடந்தவை. இனியும் நடக்கப் போகிறவை.


பி.கு: நான் எந்த மதத்திற்கும் யாரையும் மாறச் சொல்லவில்லை. என் மதம் மனிதமே.

ஜான்ஸ் கல்லூரி வரலாறு

இத்துணை வரலாற்று நிகழ்வுகளை உள்ளடக்கியது

என்பதை அறிந்தபோது

இன்றுவரை  நாம் அறியாமையில்தான்

இருந்திருக்கிறோம் என்பது புரிந்தது . 


Arun Bala 

Via 

Ancy Wave FB shares

Previous Post Next Post

نموذج الاتصال