பெரியாரிஸ்ட்டுகளும் இஸ்லாமியர்களும் - ஜின்னா மாச்சு


பெரியாரின் திருமணத்தை கூறினால் மட்டும் அவதூறு கூறுவதாக மன்னிப்பு கேட்க வேண்டும் என நீங்கள் கூறும் பொழுது,

நபியை அவதூறாக பேசும் பொழுது நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாதா? எங்களுக்கு உரிமை இல்லையா?எனக் கேட்கும் பல இசுலாமியர்கள் உண்டு.

பெரியார் என்றும் விமர்சனத்திற்கு பயந்தவர் அல்ல. பெரியாரிஸ்ட்களும் விமர்சனங்களுக்கு அச்சப்பட்டவர்கள் அல்ல,

பெரியாரை விமர்சனம் செய்யும் பொழுது யாரும், யாரையும் வெட்டுவோம், குத்துவோம், கழுத்தை அறுப்போம் என கூறமாட்டார்கள். அப்படிச் செய்யவும் மாட்டார்கள்.

ஆனால், பதிலுக்கு பெரியாரிஸ்ட்கள் விமர்சனம் செய்தால், தாங்கிக்கொள்ள கூடியவர்களாக நீங்கள் உள்ளீர்களா? என்பதே கேள்வி? 

மற்றும் பெரியாருக்கு ஆண் குழந்தையோ,பெண் குழந்தை என எந்தக் குழந்தையும் இல்லை, எந்தக் குழந்தையையும் தத்து எடுத்து வளர்க்கவும் இல்லை எனும் பொழுது, தன் சொந்த மகளையே திருமணம் செய்ததாக கூறுவதே பெரும் பொய்.

அவரை கவனித்து கொண்ட பனியாளை திருமணம் செய்து கொண்டார் என்று வேண்டுமானால் கூறலாம்.

அது போலவே,அவர் வயதிற்கு வராத சிறு பெண்ணையும் திருமணம் செய்ய வில்லை. 20 வயதிற்கு மேற்பட்ட பெண்ணையே திருமணம் செய்தார். இருவருக்கும் வயது வித்தியாசம் மிகவும் கூடுதல் என குறை கூறலாம்.என்றாலும் அது அந்த இருவரின் தனிப்பட்ட விஷயம்.

ஒரு தலைவனாக உள்ளவர் இவ்வாறு செய்யலாமா? முன் உதாரணமாக இருக்க வேண்டியவர் இவ்வாறு செய்யலாமா? எனக் கேட்பவர்களும் உண்டு.

அவர் என்றும் தன்னை முன் மாதிரியாக கொண்டு வாழுங்கள் என யாரிடமும் கூறியதுமில்லை. நான் கூறுவதை தவறாமல் பின்பற்றி வாழுங்கள் என்றும் யாரையும் அவர் கட்டாயப்படுத்தவும் இல்லை..

பின் தலைவராக எதற்கு இருந்தார்? எதற்கு இயக்கத்தை உருவாக்கினார் என கேட்கலாம்.

இருக்கப்பட்டவர்களை வசீயம் செய்யும் தலைவராக அவர் இருக்கவில்லை. ஓட்டுக்காகவும் ஆட்சிக்காகவும் அவர் தலைவராக இருக்கவில்லை.பணக்காரர்களின் கூட்டாளியாக இருக்க அவர் தலைவராகவில்லை. மதவாதிகளின் கைப்பாவையாக கூஜா தூக்கும் தலைவராக அவர் இருக்கவில்லை,

மாறாக வஞ்சிக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், தண்டனை ஒன்றே தீர்வு என, தண்டனைகளை பெற்ற பெண்களுக்கு ஆதரவாக அவர் இருந்தார். யாரும் கேட்க நாதியில்லை என கூறப்பட்ட பெண்களுக்கு, ஏன் நாதியில்லை நான் இருக்கிறேன் என்று குரல் கொடுக்கிற தலைவராக அவர் இருந்தார்.

சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுக்கு, எந்த ஆதரவும் இல்லை, எந்தத் தலைவனும் இல்லை என்ற நிலையில், நான் இருக்கிறேன் என அவர்களுக்கு தலைவராக இருந்தார்.

கடவுள் இல்லை என்பவர்களை நாஸ்திகன் கேடு கெட்டவன் என இழி சொற்களைக் கொண்டு இழிவு செய்தார்கள். அப்படி இழிவுக்கு ஆளானவர்களை, கவலை வேண்டாம் உங்களுக்கு நான் இருக்கிறேன்.எனத் தேற்றி அவர்களுக்கு தலைவனாக அன்றும், இன்றும் இருக்கிறார் என்றால் எதற்காக?

பாதிக்கப்படுபவர்களுக்கு, அன்றும் இன்றும், அவர் பெயரும், கொள்கையும் அரணாக இருப்பதே சாட்சி.

Previous Post Next Post

نموذج الاتصال