மதிப்பிற்குரிய த. உதயசந்திரன் இ.ஆ.ப., அவர்களுக்கு வணக்கம்.
புதுமையான, அறிவார்த்தமான உங்களது பணிகளைக் கண்டு வியந்து, குறிப்பாக மதுரை புத்தகக் கண்காட்சியைச் சிறப்பாக நீங்கள் ஒழுங்கு செய்திருந்த முறைகளை நேரடியாகக் கண்டு மகிழ்ச்சியடைந்து பாராட்டி நின்ற புத்தக ஆர்வலர்களில் நானும் ஒருவன்.
பாடநூல் குழுத் தலைவராக நீங்கள் பொறுப்பேற்றபின் பாட நூல்கள் அடைந்த மாற்றங்களை ஆசிரியப் பணியாற்றுகின்ற பல நண்பர்கள் பாராட்டிச் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.
குயிலியின் கற்பனைக் கதையால் சிவகங்கை வரலாற்றிற்கு ஏற்பட்டுள்ள விபரீத நிலைமை அறியத் தொடங்கி அதற்கு எதிர்வினையாற்ற முடிவு செய்து ‘’ஒப்பனைகளின் கூத்து’’ நூலை நாங்கள் வெளியிட்டபோது, பாட நூல்களில் குயிலி இடம் பெற்றிருப்பதை நாமறிவதற்கான வாய்ப்புகள் அப்போது கிடைக்கவில்லை.
நூல் வெளிவந்த பிறகுதான் அவற்றை அறிந்தோம்.
ஆனால் ஒரு கெடு வாய்ப்பாக, நீங்கள் தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டீர்கள்.
இருப்பினும் உங்களை பெருமாள் முருகன் எடுத்த காலச்சுவடு நேர்காணலில் மொழிப்பாடத்திலும் விஞ்ஞானப்பூர்வமான அணுகுமுறையினை நீங்கள் கையாண்டிருப்பதாகக் கூறியிருந்தபோது அதற்கு எதிர்வினையாக காலச்சுவடில் வெளிவந்த எனது கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிப்பீர்கள் என ஆவலுடன் எதிர்பார்த்தோம்.
தனிப்பட்ட முறையில்கூட நீங்கள் பதிலிறுப்பீர்கள் எனவும் நாங்கள் கருதியிருந்தோம். ஆனால் நீங்கள் எவ்வித சலனத்தையும் காட்டவில்லை.
இப்போது மீண்டும் மிக முக்கியமான இடமான தமிழக முதல்வரின் தனி ஆலோசகராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.
பாடநூலில் குயிலி இடம் பெறுவதற்கு நீங்களும் பொறுப்பேற்கும் இடத்தில் இருந்ததால் தற்போது உங்களிடம் இந்தக் கோரிக்கையை இவ்வழியாக வைக்க விரும்புகிறேன்.
பள்ளிக் கல்வித்துறை காட்டுகின்ற குயிலிக்கான ஆதார நூல்கள் எவற்றிலும் குயிலியின் கதைக்கான ஆதாரங்கள் காட்டப்படவில்லை.
எனது, ‘‘குயிலி : உண்மையாக்கப்படுகின்ற பொய்’’ என்கிற நூலில் குயிலியின் கதைக்கான வாய்ப்பில்லை என்பதற்கு ஆங்கிலேயரது ஆவணங்கள், பழைய நூல்கள், மற்றும் 1960களில் அரசுப் பள்ளிப் பாட நூல்களாக அங்கீகரிக்கப்பட்டிருந்த நூல்கள் என சுமார் 20 நூல்களை ஆதாரங்களாகக் காட்டியிருக்கிறேன். எனவே எனது நூலையும் ஆதாரமாகச் சேர்த்துக் கொண்டு குயிலியின் கதையைப் பரிசீலிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
குயிலியின் கதைக்கான ஆதார நூலாக ஜீவபாரதியின் நாவல்தான் பள்ளிக்கல்வித்துறையிடம் இருக்க முடியும். இருப்பினும், அது ஒரு நாவல் என்பதால் ஆதாரமாகக் காட்டமுடியாத தர்மசங்கடம் இருக்கும்.
அதனால், எனது ‘வேலுநாச்சியாரின் தீர்ப்பு` நாவலையும் பள்ளிக்கல்வித்துறைக்கு நீங்கள் பரிந்துரை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இராமநாதபுரம் சீமையின் மன்னர் ராஜரகுநாத செல்லமுத்து சேதுபதியின் நண்பரான வெற்றிவேல் தேவரைத் துரோகி எனக் கருதிய குயிலி, எந்தவிதமான விசாரணைக்கும் அவரை உட்படுத்தாமல் தன்னிச்சையாக அவரது தலையைசீவித் துண்டாக்குகிறாள் என்கிற ஜீவபாரதி அவர்களின் கதையை நம்புகிறவர்கள்,
தமது சீமையின் புகழ்பெற்ற சிலம்பு ஆசிரியர் தேசத் துரோகி எனக் கூறப்பட்டு தண்டிக்கப்பட்டதற்கான காரணம் உண்மைதானா என்பதை அறிவதற்காக விசாரணை வைக்க வேண்டும் எனும் கோரிக்கையை சிவகங்கைச் சீமையிடம் இராமநாதபுரம் சீமையானது வைத்தது என்கிற எனது கதையையும் நம்புவார்கள் என நம்புகிறேன்.
மேலும், மாணாக்கர்களுக்குப் பொய்யைச் சொல்லிக் கொடுக்கும் இக்கட்டான நிலைக்கு ஆசிரியப் பெருமக்கள் தள்ளப்பட்டிருப்பதையும் நீங்கள் கருத்தில் கொண்டு, நீங்களாகவோ அல்லது ஒரு வரலாற்றாய்வாளர் குழுவை வைத்தோ பாடநூல்களில் உள்ள குயிலியை முடித்து வைக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்.