இயற்கையின் கோரப்பசி - சகாய டர்சியூஸ் பீ


 கேரளத்தின் மரகத மலைகளில்

மழையின் தாண்டவம் 

மண் சரிந்து உயிர் புதைந்து 

கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுக்குது வயநாட்டில்! 


மலையே! நீ ஏன் சரிந்தாய்?

மண்ணே! நீ ஏன் நகர்ந்தாய்?

காடே! நீ ஏன் அமைதியானாய்?

கதறும் உயிர்களின் குரல்கள் காதில் விழவில்லையா?


உங்கள் சீற்றத்தின் விளைவை

உணர்ந்தீர்களா? இல்லை உணர்த்தினீர்களா?

கனவுகள் கலைந்து, குடும்பங்கள் சிதைந்து 

ஏனிந்த கொடூரம்? 

கருணை கொஞ்சம் காட்டியிருக்கக் கூடாதா?


இயற்கையின் சக்தியே! இரக்கம் வேண்டும்

இனி இத்தகைய இழப்புகள் வேண்டாம்

உன்னோடு இணைந்து வாழவே 

ஏங்கும் உயிர்கள் இதை உணருங்கள்  மனிதர்களுமே!


மனிதனும் இயற்கையும் ஒன்றே

மறந்து விடாதீர்கள், சிதைத்து விடாதீர் இயற்கையை 

வயநாட்டின் வலி வானளாவியது

வாழ்வின் நிலையாமை சொல்லிநிக்குது 


மீண்டும் எழுவோம், மீண்டும் கட்டுவோம்

மனிதநேயம் மலரட்டும் மலைச்சாரலில்!

மறைந்த உயிர்கள் இளைப்பாறட்டும் 

இறைவனின் திருவடி நிழலில் !

         - சகாய டர்சியூஸ் பீ

Previous Post Next Post

نموذج الاتصال