துயரம் சூழ்ந்த இந்நாளில்,
இந்தியா கண்ணீர் கடலில் மிதக்கிறது,
தொழில் துறையின் அரசர்,
ரத்தன் டாட்டா மறைந்துவிட்டார்.
உலகம் வணங்கும் மகாதலைவன்,
தொலைநோக்குப் பார்வையின் ஞானி
அமைதி கொண்டான் என்ற செய்தி
உள்ளத்தை உலுக்கி உறைய வைக்கிறது.
எஃகைப் போல் உறுதியான தொழில்நெறி,
ஏழை எளியோர் நலனுக்காய்
உயிர்த்துடிப்பாய் உழைத்த பெருந்தகை,
டாட்டா என்ற பெயரை உலகமெங்கும் பரப்பியவர்,
இந்தியாவின் பெருமைமிகு முகமானவர்.
நாட்டின் முன்னேற்றத்திற்காய்
நாள்தோறும் கனவு கண்டு உழைத்தவர்,
நம்பிக்கையின் சுடரொளியாய் நிமிர்ந்து நின்றவர்,
கோடிக்கணக்கானோரின் வாழ்வை வண்ணமாக்கியவர்,
நானோ எனும் மக்கள் கனவை நனவாக்கிய கற்பனைச் சிற்பி.
பத்ம பூஷண், பத்ம விபூஷண் என பல விருதுகள் குவிந்தவர்,
பல்கலைக்கழகங்களின் மகுடம், உலகளாவிய அங்கீகாரம் கொண்டவர்
வணிகத்துறையின் முடிசூடா மன்னன்,
தொழிலதிபராய் தொண்டின் வள்ளலாய்,
எளிமையின் சிகரமாய் நேசிக்கப்பட்டவர்,
இன்று நம்மை விட்டுப் பிரிந்தார்
வழிகாட்டும் சுடர் அணைந்தது!
ஆனால்
அவரின் கொள்கைகள் என்றுமே ஒளிவீசும்,
அவர் விதைத்த விதைகள் விருட்சமாய் வளரும்,
நினைவுகள் என்றென்றும் நெஞ்சில் நிலைத்திருக்கும்.
ஓய்வெடுங்கள் மாமனிதரே,
உங்கள் அரும்பணி நிறைவுற்றது,
ஒளிமயமான எதிர்காலத்திற்கு வித்திட்டு மறைந்துள்ளீர்,
இந்தியாவின் பொற்கால வரலாற்றில்
உங்கள் பெயர் என்றும் ஒளிரும் நட்சத்திரமாய்!
இறுதி வணக்கம் செலுத்துகிறோம்,
இறவாப் புகழ் கொண்ட
ரத்தன் டாட்டாவே!
உங்கள் புகழ் என்றும் வாழ்க!
- சகாய டர்சியூஸ் பீ