நாம் ஒன்றுமே இல்லையென்று நினைக்கிற சின்ன விஷயம் சிலருக்கு முக்கியத்துவமானதாக இருக்கும். சிலர் நிதானமாக நின்று இரசிக்கிற விஷயங்கள் நமக்கு சில்லறைத்தனமாகத் தோன்றும். காரணம், எல்லாவற்றிலும் நமக்கு ஏதோ ஒரு அவசரம். ஈடுபாடின்மை. அப்படி அவசரப்படாதீர்கள் என்று உட்கார வைக்கிற படம் இந்த மெய்யழகன்.
அருள்மொழியுடைய(அரவிந்த்சாமி) ஜீவன், அவன் பிறந்து வளர்ந்த அந்த ஊரிலும் அந்த வீட்டிலும் இருக்கிறது. அதை அவனிடமிருந்து இளவயதிலேயே பிரித்துவிட்டார்கள். ஒருகாலத்தில் எல்லோரிடமும் அன்பாக இருந்தவன் தன்னை எங்கோ தொலைத்துவிட்டான். தொலைத்த இடத்தில்தானே தேடவேண்டும்?
அருள்மொழி தன்னைத் தொலைத்த இடத்துக்கே மீண்டும் வந்து தன் உறவுகளைச் சந்திக்கிறான். அந்த உறவுகளில் ஒருவனைச் சந்திக்கிறான். அவனுடைய பெயரோ அடையாளமோ என்னவென்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் அந்தப் பெயர் தெரியாதவன் மூலம்தான் தன்னை யாரென்றே கண்டுபிடிக்கிறான்.
அருள்மொழிக்கு யாரென்றே தெரியாதவன், அருள்மொழி பின்னாலே மெச்சுகிற குணங்களைக் கொண்டவன், "இந்த குணங்களை உங்ககிட்ட இருந்துதான் பாத்து கத்துக்கிட்டேன்" என்று சொல்கிறான். ஒருவனின் தன்னுணர்வு நிலையின் ஆழத்தில் போய் தாக்குகின்ற நொடிகளை, Goosebumps moments ஐ எல்லாம் இந்த மாதிரி ஆர்ப்பாட்டமில்லாமலும் காட்டலாம்.
அருள்மொழியைச் சின்னவயதிலிருந்தே பார்த்து வளர்ந்தவன் மெய்யழகன். ஒவ்வொரு தடவையும் அவனைப் பார்க்கிற விதத்திலேயே சொல்லிவிடலாம். மரியாதை, பிரமிப்பு, அன்பு எல்லாமும் இருக்கும். "உங்களை அவருக்கு ரொம்ப பிடிக்கும்"னு மெய்யழகனின் மனைவி அருள்மொழியிடம் சொல்லும்போதே அவ்வளவு அன்பு இருக்கும்.
இந்தப் படத்தில் அருள்மொழியும் மெய்யழகனும் பல இடங்களில் உரையாடிக்கொள்வார்கள். இரண்டு பேருக்குமிடையில் பெரிய வித்தியாசம் இருக்காது. இதில் அருள்மொழி தன்னைத் தொலைத்திருப்பான். மெய்யழகன், அருள்மொழியின் இளவயதுக் குணங்களோடு இருப்பான். அருள்மொழியின் soul மெய்யழகனிடம் இருக்கும்.
இரண்டு பேரும் ஆண் என்பதற்கு அழகான வரையறை. அதீதமான உணர்வுகள் உள்ளவர்கள். குடும்பப் பொறுப்புள்ளவர்கள். தங்கள் பார்வையில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறவர்கள். அன்பானவர்கள். இரசனையுள்ளவர்கள். சின்னைச் சின்ன விடயங்களோடும் தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்கிறவர்கள். அதற்காகக் கலங்குகிறவர்கள்.
இறுதியில் அருள்மொழி தன்னை யாரென்று மெய்யழகன் ஊடாகக் கண்டுபிடிக்கிறான். முடிவை விட, அவர்கள் ஒருவரையொருவர் தொலைத்து, பின் தேடிக் கண்டுபிடித்து எப்படி அன்பு பாராட்டத் தொடங்குகிறார்கள் என்பதே அழகான பயணம்.
எப்பொழுதும் ஆக்ரோஷமும் அதிரடியுமல்ல சினிமா. சின்னச் சின்ன நினைவுகளால், சின்னச் சின்ன சந்தோஷங்களால் ஆனதுதான் மனித உணர்வுகள் என்பதை அடிக்கடி மறந்துவிடுகிறோம். இதில் கொண்டாட நிறையவே சின்னச் சின்ன விஷயங்கள் இருக்கிறது.
சைக்கிள் எவ்வளவு முக்கியம் என்பது அது இலகுவில் கிடைக்காதவர்களுத்தான் தெரியும். மெய்யழகனுக்குத் தான் தெரியும். நாம் நாமாக இருந்து சினிமாவைப் பார்ப்பதைவிட மெய்யழகனாகவும் அருள்மொழியாகவும் இருந்து பார்க்கவேண்டும். அப்படிப் பார்த்து இரசிப்பதற்குரிய அத்தனை தகுதியும் இந்தப் படத்திற்கும் உண்டு.
#Meiyazhagan #மெய்யழகன்