"எந்த இயக்கத்திலும் இயங்கியிராத எனக்குள் சில கருத்துக்களும், கேள்விகளும் எழுந்தன. "
“காலங்காலமாக இலங்கை ஆட்சியாளர்களுக்கு புலிகள்தான் நன்மைகளையே செய்தும் வந்திருக்கிறார்கள்.”
உயிரோடு இருந்தபோதுதான் சிதறிக்கிடந்த எமது போராளிகளை எம்மால் ஒன்று சேர்க்க முடியவில்லை. மரணத்தின் பின்னாவது ஒன்று சேர்த்து அவர்களுக்கு அகவணக்கம் செலுத்த முடியாத அளவுக்கு எமது இனம் ஈனத்தனமாகிவிட்டதே என்று எண்ணியபோது எந்த இயக்கத்திலும் இயங்கியிராத எனக்குள் சில கருத்துக்களும், கேள்விகளும் எழுந்தன.
அதாவது; ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் ஈழ விடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட பெரும்பாலான இளைஞர்கள் இயக்கங்களின் கொள்கைகளைப் பார்த்தோ அல்லது அரசியல் சித்தார்த்தங்களை அறிந்துகொண்டோ புரிந்துகொண்டோ இயக்கங்களைத் தேர்ந்தெடுத்து இணைந்துகொள்ளவில்லை. அப்போதிருந்த சூழ்நிலையில் சிங்கள அரசின் இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற உணர்ச்சிபூர்வமான உந்துதல் மட்டுமே அவர்களிடத்தில் இருந்தது. அச் சந்தர்ப்பத்தில் எந்த இயக்கத்தின் தெடர்பு அவர்களுக்கு எளிதாகக் கிடைத்ததோ அதில் தங்களை இணைத்துக்கொண்டார்கள். அப்படி இணைந்தவர்களில் பலர் இராணுவத்தினருடனான மோதல்களிலும் கொல்லப்பட்டார்கள். இயக்கங்களுக்கிடையிலான மோதல்களிலும் கொல்லப்பட்டார்கள். ஒரே இயக்கத்திற்குள் நடந்த கருத்து முரண்பாட்டு மோதல்களிலும் கொல்லப்பட்டார்கள். ஆனால், இவர்கள் அனைவருமே தமிழீழத்திற்காகப் போராட முன்வந்த தமிழ்த் தாயின் பிள்ளைகளாகவே இருந்தார்கள்.
அந்தக் காலங்களில் தமிழர் பிரதேசங்களில் பல இயக்கங்கள் இருந்தன. எமது விடுதலைப் போராட்டமானது பல நாடுகளின் ஆதரவினைப் பெற்றிருந்ததோடு மிகவும் பலமானதாகவே அப்போதிருந்தது. ஒவ்வொரு பிரதேசத்தையும் ஒவ்வொரு இயக்கத்தினர் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். எல்லா இராணுவ முகாம்களுக்குள்ளும் படையினரைப் போராளிகள் முடக்கியே வைத்திருந்தார்கள். இலங்கை அரசும் அதன் இராணுவ இயந்திரமும் பதறிப்போன காலமது. இனித் தமிழ் இளைஞர்களின் எழுச்சியை அடக்கிவிட முடியாது என்றே எண்ணினார்கள்.
ஆனால், காலப்போக்கில் நிகழ்ந்தது என்ன ?
நான் அறிய ஒரே வீட்டிலிருந்து சென்ற மூன்று போராளிகள் வெவ்வேறு இயக்கங்களில் இருந்திருக்கிறார்கள். அண்ணனைச் சுடுவதற்குத் தம்பியும் தம்பியைச் சுடுவதற்கு அண்ணனும் துவக்குகளோடு அலைந்த கதைகளும் ஏராளம் உண்டு. அப்படியிருக்க ஒரு கதைக்காகக் கேட்கின்றேன். ஒரே தாயின் மூன்று பிள்ளைகளில் புளட் இயக்கத்திலிருந்த ஒருவர் இராணுவத்தினராலும், ரெலோ இயக்கத்திலிருந்த இன்னொருவர் புலிகள் இயக்கத்தினராலும், புலிகள் இயக்கத்திலிருந்த மற்றையவர் இன்னொரு இயக்கத்தினராலும் கொல்லப்பட்டிருந்தால் இவர்களில் துரோகி யார் ? தியாகி யார் ? புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் மட்டுந்தான் தியாகிகள், மாவீரர்கள் என்றால் இவற்றைத் தீர்மானிப்பவர்கள் யார் ?
தமிழ்த் தாயின் வயிற்றில் பிறந்த எந்தவொரு போராளியும் ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கும்போது அதனை தழிழீழ விடுதலைக்கு எதிரான இயக்கமாக ஆரம்பிக்கவில்லை என்பதுவே வரலாற்று உண்மை.
அப்படியிருக்க துரோகி, தியாகி என்ற இந்தக் கறுப்பு வெள்ளைக் கண்ணோட்டம் எப்படி ? எந்தப் புள்ளியிலிருந்து உருவானது ? என்றவொரு கேள்வியை முன் வைப்போமானால், ‘அது புலித் தலைமையின் ஏக பிரதிநிதித்துவக் கொள்கையின் அடிப்படையிலிருந்தே உருவானது.’ என்பதே பதிலாகவிருக்கும்.
புலிகள் இயக்கமானது ஏக பிரதிநிதித்துவக் கொள்கையின் அடிப்படையில் மற்றைய எல்லா இயக்கங்களையும் அழித்தொழித்துத் தடை செய்ததன் மூலமாக இலங்கை அரசையும் அதன் இராணுவ இயந்திரத்தையும் ‘அப்பாடா தப்பித்து விட்டோம்.’ என நிம்மதிப் பெருமூச்சு விடவே வைத்தது.
புலிகள் இயக்கமானது தமிழீழத்திற்காக போராட வந்த மற்றைய இயக்கத்தினரை கொலை செய்யத் துரத்தியபோது பொருளாதார வசதி படைத்தவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடினார்கள். வெளிநாடுகளுக்கு ஓட வசதியற்றவர்களுக்கு இரண்டே இரண்டு வழிகள் தான் இருந்தன. ஒன்று; புலிகளின் இந்தப் பாசிச வெறிக்குப் பலியாவது. மற்றையது; பொது எதிரியான இராணுவத்தினரிடம் சரணடைந்து சேர்ந்து இயங்குவது.
இதில் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிகொள்ளும் பொருட்டு சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப இராணுவத்துடன் சேர்ந்து இயங்கியவர்களைத் துரோகிகள் என்றால், அவர்களை இந்த நிலைக்குத் தள்ளிவிட்டவர்கள் யார்? தியாகிகளா ? இதற்கான காரணிகள் என்ன ? இந்த நிலை ஏன் ? எப்படி உருவானது ? இதன் பின்னனி என்ன ? என்ற அடிப்படையை ஆராயாமல் தியாகி, துரோகி என்ற வெறும் கறுப்பு வெள்ளைக் கண்ணோட்டத்துடன் தான் இதனை அணுகப்போகின்றீர்களா ? இந்த நிலையை உருவாக்கியவர்களுக்கும், ஆதரித்தவர்களுக்கும், கள்ள மெளனம் காத்த கல்விமான்களுக்கும், அரசியற் தலைவர்களுக்கும் இதில் பொறுப்புக்கூறல் இல்லையா ?
தேச விடுதலைக்காகப் பிள்ளையைக் கொடுத்த ஒரு தாய் மாவீரனின் தாயெனப் புகழப்படுகின்றார். அதே தேச விடுதலைக்காகப் பிள்ளையைக் கொடுத்த இன்னொரு தாய் அதே சமூகத்தில் துரோகியின் தாயென இகழப்படுகின்றார். இதுதான் சமூக நீதியா ? இது எத்தகைய மன நிலையிலிருந்து உருவானது ? இது பாசிச மனநிலை இல்லையா ?
சில மாதங்களுக்கு முன்னர் புலிகளால் தடை செய்யப்பட்ட இயக்கத்தவர் ஒருவருடன் உரையாடக் கிடைத்தது. அவர் அப்போது கூறினார், “ஈழ அரசியலில் தமிழ் மக்களுக்குக் கிடைத்திருக்கவேண்டிய நல்ல தீர்வுகளைக் கிடைக்கவிடாமல் பண்ணியதன் மூலமாக தமிழீழத்திற்கும், தமிழீழ மக்களுக்கும் உண்மையாகவே துரோகம் செய்தது புலித் தலைமை தான்” என்று.
அது மட்டுமல்லாமல், “காலங்காலமாக இலங்கை ஆட்சியாளர்களுக்கு புலிகள்தான் நன்மைகளையே செய்தும் வந்திருக்கிறார்கள்.” என்றும் கூறினார்.
கண்களில் கேள்விக்குறிகள் தெறிக்க நான் அவரை உற்று நோக்கியபோது மீண்டும் தொடர்ந்தவர், “எண்பதுகளின் ஆரம்பத்தில் இயக்கங்களின் வளர்ச்சிகளைக் கண்டு ‘இனி வடக்குக் கிழக்கு இலங்கையிலிருந்து பிரிந்து தனி நாடு ஆகிவிடும்’ என்று சிங்கள ஆட்சியாளர்கள் பயந்தபோது, எல்லா இயக்கங்களையும் அழித்தொழித்ததன் மூலமாக புலிகள் தான் அவர்களுக்கு நன்மை செய்தார்கள்.
பின்பு எண்பதுகளின் இறுதியில் இந்தியா வந்து தமிழர்களுக்கு நல்ல தீர்வைப் பெற்றுக் கொடுத்துவிடப்போகிறது என்று சிங்கள ஆட்சியாளர்கள் பயந்தபோது, வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணசபையைக் குழப்பியடித்ததன் மூலமாக புலிகள் தான் அவர்களுக்கு நன்மை செய்தார்கள்.
அதன் பின்னர் தொண்ணூறுகளில் தமிழரான நீலன் திருச்செல்வத்துடன் இணைந்து சந்திரிகா தயாரித்த தீர்வுப் பொதியைப் பார்த்துப் பெளத்த பேரினவாதிகள் பயந்தபோதும், அதனையும் குண்டு வைத்துத் தகர்த்ததன் மூலமாக புலிகள் தான் அவர்களுக்கு நன்மையே செய்தார்கள்.
இறுதியாக நோர்வே மூலமாக தமிழர்களுக்கு நல்ல தீர்வு கிடைத்துவிடுமோ! என்று சிங்கள ஆட்சியாளர்கள் பயந்தபோதும், கால மாற்றத்திற்கு ஏற்ப ஏதாவதொரு தீர்வை வாங்கிக்கொண்டு முன்னேறாமல் வரட்டுக் கெளரவத்துடன் முரட்டுப் பிடிவாதம் பிடித்துக்கொண்டு நின்று மக்களையும் அழிவுக்கு உட்படுத்தி தாங்களும் அழிந்துபோனதன் மூலமும் புலிகள் தான் அவர்களுக்கு நன்மையைச் செய்தார்கள்.
ஆகவேதான் சொல்கிறேன் புலிகள் தான் தமிழ் மக்களின் துரோகிகள்” என்று அவர் மூச்சு விடாமற் கூறி முடித்துக்கொண்டார்.
அவரவர் கருத்து நிலைகள் இப்படியிருக்க, துரோகிகள் யார் ? தியாகிகள் யார்? இவற்றைத் தீர்மானிப்பவர்கள் யார் ? என்ற கேள்விக்குறிகளே இப்போது எனக்குள் தொக்கி நிற்கின்றன.
ஒரு இனம் என்று மனிதநேயப் பண்புகளுடன் அக விடுதலையையும், சமூக விடுதலையையும் அடைகிறதோ, அன்றுதான் அது தேசிய விடுதலையை நோக்கிப் பயணிக்கத் தகுதி உடையதாகிறது.
#Navamagan_Kethees