பெரியார் வழியே சமூக காயங்களுக்கு மருந்து - AD Bala


ஒருவர் வாழ்க்கையில் முன்பு ஒன்றை ஏற்பதும், பிறகு அதையே விமர்சித்து நேரெதிர் நிலையை எடுப்பதும் ஏற்படுவதுதான். அதில் ஒன்றும் பிழையில்லை. 

பெரியாரே, சாமியாராக காசிக்குச் சென்று அங்கே துறவைத் துறந்தவர். காந்தியத்தை ஏற்றுத் துறந்தவர். 

வள்ளலார், கந்தக் கோட்டத்து சண்முகத் தெய்வமணியைப் பாடிவிட்டு, சிற்றம்பலத்தைப் பாடிவிட்டு பிறகுதான் தெய்வங்கள் பல பல சிந்தை செய்வாரை விமர்சிக்கிற பக்குவத்தைப் பெறுகிறார். 

பெரியார் திருக்குறளை விமர்சித்தார். எல்லோரும் புகழ்வதால் அதை அவர் ஏற்கவில்லை. ஆனால், தமது கருத்து தவறு என்று உணர்ந்து ஏற்றுக் கொண்டு பிறகு திருக்குறள் மாநாடு நடத்தினார். 

திருக்குறளை தமிழர்களின் நீதி நூலாக பட்டித் தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது பெரியாரும் அவருடைய இயக்கமும் அல்லாமல் வேறு யார்? 

திருவள்ளுவர் என்பது அவரது பெயருமல்ல. திருக்குறள் என்பது அந்த நூலின் பெயருமல்ல. இரண்டுமே கற்பனைதான். பெயர் தெரியாத புலவர் எழுதிய பெயர் தெரியாத நூல்தான் அது. ஆனால், அது தமிழ் சிந்தனை மரபின் தொடர்ச்சி. 

ஒரு வீட்டில் அழுவதும், ஒரு வீட்டில் சிரிப்பதுமாக இருக்கும் நிலையைப் பார்த்து, படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன் என்று சபிக்கிறது பக்குடுக்கை நன்கணியார் எழுதிய புறநானூற்றுப் பாடல். அதற்குப் பிறகு வந்த திருக்குறள் அந்த மரபின் தொடர்ச்சியாக நின்று 'பிச்சை எடுத்து உயிர் வாழும்  நிலையும் இருக்குமானால்... 'பரந்து கெடுக' உலகை இயற்றியவன் என்று சபிக்கிறது. 

எப்பொருள், யார் யார் வாய் கேட்பினும், எப்பொருள் எத்தன்மைத்தாயினும் மெய்ப்பொருள் காண்பதறிவு என்கிறது திருக்குறள். 

அறிவுடையோன் ஆறு அரசு செல்லும் என்கிறது புறநானூறு. அதற்குப் பிறகு வந்த திருக்குறளோ அறிவு அற்றம் காக்கும் கருவி என்கிறது. 

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிறது புறநானூறு. அது அன்பின் சர்வதேசியம். அறிவு உலகு தழுவியது என்கிறது திருக்குறள். அது அறிவின் சர்வதேசியம். 

ஊழ், பெண்ணுரிமை, புலால் மறுப்பு இங்கெல்லாம் வள்ளுவர் சறுக்குகிறார். 

அவரது மரபின் தொடர்ச்சியாக பல பெரியோர்கள் வந்தார்கள். சித்தர்கள் வந்தார்கள். வள்ளலார் வந்தார். கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக என்றார். சாதியிலே மதங்களில் சமய நெறிகளிலே சாத்திரச் சண்டையிலே கோத்திரச் சந்தடிகளிலே ஆதியிலே நின்று அபிமானித்து அலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே என்று எடுத்துச் சொன்னார். 

ஆனால், புலால் உண்போர்  புறவினத்தார் என்று சறுக்கினார். மரணமிலாப் பெருவாழ்வு என்று மருண்டார். எல்லோரும் பாராட்டும் 6-ம் திருமுறையை புரட்டிப் பாருங்கள். எவ்வளவு குழம்பியிருக்கிறார் என்று தெரியும். அவரது நோக்கத்தைப் பாராட்டி, அவர் பங்களிப்பை எடுத்துக் கொண்டு நகரத்தான் முடியுமே தவிர, வைதீக எதிர்ப்புத் தீயை அணைந்து போகாமல் காப்பாற்றிய பெருமைக்குரியவர் என்று சொல்லலாமே தவிர, தமிழர்களின் சமூக அரசியல் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவரும் அளவுக்கு அவரது பார்வையும், வழிமுறையும் வீச்சாக இருந்ததா என்றால் இல்லை என்பதுதான் பதில். 

அவரது தத்துவத்தில் - அதன் உயரிய நோக்கங்களைக் கடந்தும் - இருந்த குழப்பங்களும், அவர் செயல்பட்ட விதத்தில் இருந்த குழப்பங்களும் குறைகளுமே இதற்குக் காரணம். 

எலும்பு தோல் இறைச்சியில் இலக்கமிட்டிருக்குதோ என்று கேட்ட சித்தர்களும், வள்ளலாரும் பெண்களை சித்தரித்த விதம் சொல்லக் கூசும். 

இந்தக் குறைகளையெல்லாம் களைந்து எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், எத்தன்மைத்தாயினும் மெய்ப்பொருள் காணும் பிழம்பாக, மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு என்னும் கறாரான அளவுகோலோடு, பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்னும் பெரு நெறியோடு - தேசாபிமானம் பாஷாபிமானம் மதாபிமானம் என்ற பற்றுகளை அறுக்கும் அருமருந்தாக, வாய்த்தவர்தானே பெரியார். 

அவர் தமிழ் மரபின் நீட்சி இல்லை என்றால் வேறெவர்? பக்குடுக்கையாரின், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின், திருவள்ளுவரின், திருமூலரின், சிவவாக்கியரின், வள்ளலாரின் தொடர்ச்சியும் மேம்பட்ட வடிவமும்தான் பெரியார். 

அவரது சமகாலத்திலும், முன்பும் பின்பும் பல பெரியோர்கள் அவரது நோக்கத்துடன் உழைத்திருக்கிறார்கள். அவர்களின் நோக்கத்துக்கு பெரியார் செம்மையான அரசியல் சமூக வடிவமும் ஊக்கமும் தந்தார். அவரது கூரறிவு எதையும் தயவு பாராமல் விமர்சித்தது. அதில் தவறுகளும் நிகழ்ந்தன. அவற்றை அவர் மறுபரிசீலனையும் செய்தார். அந்த தீயில் போலிப் புனிதங்களும் பொசுங்கின. சில நேரம் மேம்பட்டவையும் கொஞ்சம் சுட்டுக்கொண்டன. 

விமர்சித்தும், கற்றுக் கொண்டும், கற்றதை மாற்றிக் கொண்டும் - அதாவது கசடறக் கற்றும் அதற்குத் தக நின்றும் வாழ்ந்தார் பெரியார். 

தன் கருத்தைப் பரப்ப உழைத்தார். கடுமையாக உழைத்தார். அவரது கருத்துழைப்பும், அதனைப் பரப்ப அவர் மேற்கொண்ட உழைப்பும் சேர்ந்தே தமிழ்ச் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்தன. அதனால், மற்ற பெரியார்களைவிட ஈ.வெ.ரா. பெரியார் பெரிதும் போற்றப்படுகிறார். 

ஒரே ஒன்று. அவரது கால்கள் முன்னோக்கி நடந்தன. அவரது சக்கரம் முன்னோக்கி உருண்டது. முதலில் திருக்குறளை மறுத்தவர். பிறகு ஏற்றார். 

சீழ்மான்களுக்கு சக்கரம் பின்னோக்கி நகர்கிறது. முதலில் பெரியாரைப் போற்றியவர், பிறகு பெரியாரைப் பழிக்கிறார். கண்களில் குறள் நெறி மறைந்தபோது, குறளைப் போற்றிய பெரியாரும் மறைந்து குறளைப் பழித்த முந்தைய பெரியார் மட்டுமே தெரிகிறார். 

சக்கரம் எப்போது பின்னோக்கி நகருமெனில், மலைச்சரிவில் இருந்து உருளும்போது நடக்கும். அதன் குறுக்கே போவது நல்லதல்ல.

நிறைய பெரியாரியம் பேச வேண்டும். சமூகக் காயங்களுக்குப் பெரியாரிய வழி நின்று மருந்திடுவது ஊக்கமாகத் தொடர வேண்டும். பெரியாரியம் என்பது சொன்னதைச் செய்வதன்று, சிந்தித்துச் செய்வது. அதன் வெளிப்பாடுதான் அண்ணாவியமாகக் கிளைத்தது. ஒரு மரத்துக்கு பல கிளைகள் வேண்டும். எல்லாக் கிளைகளும் சடைத்து வளர வேண்டும். அதுவே சீழுக்கு மருந்து.

Previous Post Next Post

نموذج الاتصال