தென் கொரியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் 18வது பிரவாசி பாரதிய திவாஸ் மற்றும் சுவாமி விவேகானந்தரின் 162வது பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. ஜனவரி 12, 2025 அன்று சுவாமி விவேகானந்தா கலாச்சார மையத்தில் நடைபெற்ற இந்த விழாவில் இந்திய தூதர் மாண்புமிகு திரு. அமித் குமார் மற்றும் அவரது துணைவியார் திருமதி சுரபி குமார் ஆகியோர் சுவாமி விவேகானந்தருக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
மாண்புமிகு தூதர் திரு. அமித் குமார் தமது உரையில், கொரியாவில் வாழும் இந்திய சமூகத்தினரின் பங்களிப்புகளையும், இந்தியா-கொரியா உறவுகளை வளர்ப்பதில் அவர்களின் முக்கிய பங்கையும் பாராட்டினார். மேலும், தூதரகத்தின் சமூக தொடர்பு நடவடிக்கைகள், திறந்த கலந்துரையாடல்கள், கான்சுலர் சேவைகள், இந்திய மாணவர்களுடனான கலந்துரையாடல்கள் போன்றவற்றையும் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் கொரியாவில் வசிக்கும் இந்தியர்களில், இந்தியா-கொரியா கலாச்சார பங்களிப்புகளில் சிறந்து விளங்கிய நான்கு பேருக்கு மதிப்பளிக்கப்பட்டதுடன், அவர்களின் அனுபவப் பகிர்வும் இடம்பெற்றது. உயிரியல் அறிவியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஹசன் பெய்க், தொழில்முனைவோர் டாக்டர் ஜெய்தீப் மேத்தா, கொரிய தொலைக்காட்சித் தொடரான 'ஸ்க்விட் கேம்' நடிகர் திரு. அனுபம் திரிபாதி ஆகியோருடன், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே பேச்சாளராக கவிஞர் திரு. சகாய டர்சியூஸ் பீ கலந்து கொண்டார்.
திருக்குறளை கொரிய மொழியில் மொழிபெயர்த்தமைக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞர் திரு. சகாய டர்சியூஸ் பீ அவர்களுக்கு இந்த மதிப்பளிப்பு வழங்கப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பு பணி செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் (CICT) நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில் திரு. சகாய டர்சியூஸ் பீ ஏற்புரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியது...
16 ஆண்டுகளாக கொரியாவில் வாழ்ந்து வருகிறேன். கொரிய ஒருங்கிணைப்பு திட்டத்தில் கொரிய மொழிப் புலமையில் ஐந்தாம் நிலை முடித்திருக்கிறேன். இது இரு இரு நாட்டுக் கலாச்சாரங்களையும் புரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது. திருக்குறளை கொரியா மொழியில் பெயர்த்ததற்கு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த மொழிபெயர்ப்பு 2025 மார்ச் மாதம் இந்தியப் பிரதமர் மாண்புமிகு திரு. நரேந்திர மோடி அவர்களால் வெளியிடப்படவுள்ளது.
தற்போது செஜாங் பல்கலைக்கழக பேராசிரியர் ஆரோக்கியராஜ் அவர்களுடன் இணைந்து தமிழ்-கொரிய இலக்கண ஒற்றுமைகள் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. இது தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் (SKTRA) மூலம் வெளியிடப்படவுள்ளது என்று தெரிவித்தார்.
விழாவில் கலந்து கொண்ட இந்திய சமூகத்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இந்தியா-கொரியா இடையிலான கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் இத்தகைய முயற்சிகளை பாராட்டினர். குறிப்பாக இந்திய தூதர் மாண்புமிகு திரு. அமித் குமார் இந்த மொழிபெயர்ப்புப் பணியினை மனதாரப் பாராட்டினார். இத்தகைய முயற்சி இந்தியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு இடையேயான கலாச்சார பண்பாட்டு உறவினை மேம்படுத்த உதவும் என்று உரைத்தார்.
மொழிபெயர்ப்பு பணியில் உதவிய கொரிய நண்பர்கள் திருமதி லீ சுக்-ஜே, செல்வி பார்க் யே-சோல், மற்றும் செல்வி லீ சே-யங் ஆகியோரின் பங்களிப்பும் பாராட்டப்பட்டது.