கொரியா தமிழ்ச் சங்கத்தின் உள்கட்டமைப்புச் செயலாளர் திரு சகாய டர்சியூஸ் பீ சங்கத்தின் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், இனி, கொரியா தமிழ்ச் சங்கத்தின் எந்தவொரு விஷயத்திற்கும் தன்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.
2018ஆம் ஆண்டு முதல் கொரியா தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து பயணித்தவர் சகாய டர்சியூஸ் பீ. அந்த ஆண்டு சங்கம் அரசு சாரா அமைப்பாக பதிவு செய்யப்பட்டது. அதன் முதல் தகவல் தொடர்பு செயலாளராக பொறுப்பேற்றார். சங்கத்தின் முக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வெளியுலகத் தொடர்பைப் பலப்படுத்த உதவியாக இருந்தார்.
மொழிபெயர்ப்பு பணிகள் இணையத் தொடர்புப் பணிகள் என்று அவருடைய பங்களிப்புகள் கொரியா தமிழ்ச்சங்கத்தின் செயல்பாடுகள் உலக நாடுகளுடன் குறிப்பாக தமிழ்நாட்டில் பரவக் காரணமாக அமைந்தன.
இதையடுத்து, அவர் சங்கத்தின் உள்கட்டமைப்புச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் கொரியா மொழியில் மாற்றம் செய்த திருக்குறள் பணிகள் நிறைவடைந்தன. அவருடைய பணிகளை அங்கீகரித்து கொரியாவுக்கான இந்தியத் தூதரகம் பாராட்டுத் தெரிவித்தது.
இந்தச் சூழலில் அவர் தனது பதவி விலகலை அறிவித்திருக்கிறார். தனது தனிப்பட்ட தொழில்முறை பணிகளான தமிழ்-கொரிய மொழிபெயர்ப்பு, மொழி ஆராய்ச்சி, எழுத்துப்பணி மற்றும் அலுவலக வேலைப்பளு காரணமாக விலகுவதாக அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான அவருடைய அறிக்கையின் விவரம்...
அனைவருக்கும் வணக்கம்,
கொரிய தமிழ்ச் சங்கத்தின் உள்கட்டமைப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து என் விலகலை அறிவித்துக் கொள்கிறேன்.
2018-ஆம் ஆண்டு முதல், கொரிய தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து பயணித்து வருகிறேன். சங்கம் அரசு சாரா அமைப்பாக பதிவு செய்யப்பட்ட பின்னர், முதலில் தகவல் தொடர்பு செயலாளராகவும், அதனைத் தொடர்ந்து உள்கட்டமைப்பு செயலாளராகவும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இக்காலகட்டத்தில் எனக்கு வழங்கப்பட்ட அனைத்து பொறுப்புகளையும் திறம்பட நிறைவேற்றியதில் பெருமிதம் கொள்கிறேன்.
தற்போது, என் தனிப்பட்ட தொழில்முறை பணிகளான தமிழ்-கொரிய மொழிபெயர்ப்பு, மொழி ஆராய்ச்சி, எழுத்துப்பணி மற்றும் அலுவலக வேலைப்பளு காரணமாக, சங்கத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விலகல் குறித்து கடந்த அக்டோபர் மாதமே சங்கத்தின் தலைமைக்கு அறிவித்து, என் பொறுப்புகளை முறையாக ஒப்படைத்துவிட்டேன்.
கொரிய தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சிக்கு பணியாற்றும் இந்த அரிய வாய்ப்பினை வழங்கிய கொரிய தமிழ்ச் சங்கத்திற்கு என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி கொரிய தமிழ்ச் சங்கம் தொடர்பான எந்தவொரு விடயங்களுக்கும் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாமென தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தொடர் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துகள்.
நன்றி,
சகாய டர்சியூஸ் பீ