லெனின் எழுதிய முதல் புத்தகம் - ஆதனூர் சோழன்

24 வயதில் மார்க்சீயத் தோழர்களுடன் லெனின்

நேவ்ஸ்கயா ஜஸ்தாவாவில் ஆலைத் தொழிலாளி பாபுஷ்கினுடைய குழுவில் விளாதிமிர் பங்காற்றி வந்தார். அதேசமயத்தில் பீட்டர்ஸ்பர்க் நகரின் பல பகுதிகளிலும் நிறைய மார்க்ஸீயத் தொழிலாளர் குழுக்கள் இயங்கின. விளாதிமிர் பீட்டர்ஸ்பர்க் வந்ததும் முதலில் புரட்சிகர மார்க்ஸீயவாதிகளை தொடர்பு கொள்வதில்தான் அக்கறை காட்டினார்.

“தோழர்களே! நாம் எல்லோரும் தொழிலாளர்களிடம் மார்க்ஸின் கொள்கைகளை பரப்ப வேண்டும். தொழிலாளர்களுடன் ஒன்று சேர்ந்து புரட்சிக்கு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்” என்றார் விளாதிமிர்.

இப்படித்தான் புரட்சிச் சங்கம் உருவானது. பின்னர் அது “தொழிலாளி வர்க்க விடுதலைக்காகப் போராடும் சங்கம்” என்று அழைக்கப்பட்டது. தொடக்கத்தில் பீட்டர்ஸ்பர்கில் மட்டும் “போராட்டச் சங்கம்” இருந்தது. பிறகுதான் மற்ற நகரங்களிலும் நிறுவப்பட்டது.

விளாதிமிர் இந்தக் குழுக்களைத் தலைமை தாங்கி நடத்துவதோடு நின்றுவிடவில்லை. பகலிலும் முன் இரவிலும், சில வேளைகளில் நள்ளிரவில்கூட அவர் எழுதிக் கொண்டிருப்பார். அவர் எழுதிக் கொண்டிருந்த முதல் புத்தகம் அது. முதலாளி வர்க்கத்தினர்களுக்கு எதிரானது. மூலதன ஆட்சியை எதிர்த்துப் போராட சரியான வழி எது? இந்தப் போராட்டத்தை கட்டுப்பாடாக நடத்துவது எப்படி? என்று இந்த நூலில் அவர் தொழிலாளர்களுக்கு எளிதில் புரியும் வகையில் எழுதிக் கொண்டிருந்தார்.

விளாதிமிர் தனது புத்தகத்தை விரைவில் எழுதி முடித்துவிடுவார். மார்க்ஸீயத் தோழர்கள் அதை ரகசியமாக அச்சடித்துத் தொழிலாளர் குழுக்களில் வினியோகிப்பார்கள் என்பது திட்டம்.

நேரம் ஆகிவிட்டது. விளாதீமிரின் அறை ஜன்னலின்  திரைக்கு வெளியே இருள் சூழ்ந்தது. எதிர்வீட்டில்கூட விளக்குகள் அணைந்துவிட்டன.

அவர் தனது பேனாவை வைத்துவிட்டு எழுந்தார். மூன்று அடி நடந்தார். அந்த அறைசிறியது. ஆனாலும் அதில் நடைபோடுவதில் அவருக்கு விருப்பம்.

“வழி ஒன்றுதான். வெளிப்படையான அரசியல் போராட்டம் என்ற இந்த நேர் வழியில் வெற்றிகரமான கம்யூனிஸப் புரட்சியை நோக்கி ரஷ்யத் தொழிலாளர்கள் முன்னேறுவார்கள்.” விளாதிமிர் இப்படித்தான் சிந்திக்கவும் எழுதவும் செய்தார். வெற்றி வாகை சூடும் கம்யூனிஸப் புரட்சிக்கு, அதுவரை தொழிலாளர்கள் மத்தியில் இவ்வளவு துணிவுள்ள அறைகூவல்களை யாரும் விடுத்ததில்லை.

இத்தனைக்கும் அப்போது விளாதிமிருக்கு 24 வயதுதான். அவர் புதிய இளைஞர். ஆனால் நிறைய அறிந்திருந்தார். ரஷ்யத் தொழிலாளர்கள் புரட்சியை நிறைவேற்றுவார்கள் என்று அவர் உறுதியாக நம்பினார்.

#ஆதனூர்_சோழன் #மாமேதை_லெனின்

Previous Post Next Post

نموذج الاتصال