பெரியார் பேசிய பெண்ணியம் என்ன சொல்கிறது தெரியுமா? - சுமதி விஜயகுமார்

பெண்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறையில் இருந்து தான் வெளி வந்ததின் விளைவாக எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறேன் என்று ஒரு பெண் காணொளி வெளியிடுகிறார். காணொளியின் துவக்கத்தில் 'நான் ஒரு பெரியாரிஸ்ட்' என்றே துவங்குகிறார். அதை இன்னொரு பெண் பகிர்ந்து 'இதனால் தான் பெரியார் ட்ரோல் செய்யப்படுகிறார்' என்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் அதற்கு ஆதரவாகவும் எதிர்த்தும் கருத்துக்கள் பகிரப்பட்டிருந்தது.


ஒருவருக்கு சரி என்று படும் ஒரு செயல் மற்றவருக்கு தவறாகவோ தேவை இல்லாததாகவோ தெரியலாம். அந்த விதத்தில் அந்த பெண் தோழரின் காணொளி எதிர்மறை விமர்சங்களை சந்தித்துள்ளது. அந்த பதிவில் கமெண்ட் செய்தவர்கள் அனைவரும் மிக கண்ணியமான முறையில் தங்கள் கருத்தினை பதிவு செய்தது பெரும் ஆறுதலாக இருந்தது.

அந்த தோழர் மாதவிடாய் வந்தால் உடனேயே குளிக்க மாட்டேன் என்று சொல்லி இருந்ததை, சுகாதாரமாக இருக்க குளிப்பது அவசியம் என்று ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். காலையில் எழுந்ததும் குளித்த பிறகு, சில மணி நேரத்தில் மாதவிடாய் வந்தால் உடனேயே எண்ணெய் வைத்து தலைக்கு குளிப்பது தான் சுகாதாரம் என்று நினைத்திருந்தால், அதன் பெயர் சுகாதாரம் இல்லை. அது OCD . அன்றைய பொழுதிற்கு குளித்த பிறகு மாதவிடாய் வந்தால், சுத்தம் செய்ய வேண்டிய இடத்தை மட்டும் சுத்தம் செய்தலே போதும். அதுவே சிறந்த சுகாதாரம்.

பெரியாரை படித்தவர்களுக்கு தெரியும், பெரியாரை பொறுத்தவரை தினமும் குளிப்பது கூட கார விரயம் என கருத்துபர் என்று.

இணையர்கள் இருவரும் காலையில் தாமாக எந்திருப்பது, விஷேஷ நாட்களில் மட்டும் என்று பொருள் படும் படி தான் பேசி இருந்தார். இதில் என்னமோ அவர்கள் தினமும் தாமகதமாக எழுந்து கொள்வதை போல பகடி செய்யப்பட்டிருந்தார். பணி நாட்களை விட விடுமுறை நாட்களில் அதிக நேரம் தூங்குவதென்பது மிக சாதாரண விஷயம். அப்படியே அவர்கள் தினமும் தாமதமாக எழுந்து கொள்வது என்பது அவர்களின் விருப்பம். அது தனி மனித விருப்பங்களில் வருவது.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க....

ஒரு ஹிந்துவாகவோ கிறிஸ்துவராகவோ இஸ்லாமியராகவோ இருந்தால் அந்தந்த மதங்களில் உள்ள விதிகளை பின்பற்றுவது என்பது சரி. பெரியாரிஸ்டாக இருப்பதால் பெரியார் சொன்னதை அப்படியே பின் பற்ற அது ஒரு நிறுவனம் இல்லை. அது ஒரு கோட்பாடு. அந்த கோட்பாட்டில் இருந்து விலகாமல் வாழ்ந்தாலே போதும்.

பெண் சுதந்திரம் பற்றி பெண்கள் பேசும் போது பெரியார் இதை தான் சொன்னாரா அதை தான் சொன்னாரா என்று கேட்பதே தற்குறித்தனம். பெரியாரின் பெண்ணிணயம் என்பது ஒரு benchmark . அவர் பேசிய பெண்ணியத்தை ஒரு அளவுகோளாக வைத்துக் கொள்ளலாமே தவிர, அதுவே சட்டமும் இல்லை வரையறையும் இல்லை. எனது எல்லை கோட்டை நான் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று தான் பெரியார் வலியுறுத்தி இருக்கிறாரே தவிர, நான் வரைந்த வட்டத்திற்குள் நில் என்று சொன்னதில்லை.

100 வருடங்களுக்கு முன்னர் பேசிய பெண்ணியத்தில் , பல இப்போது காலாவதி ஆகி இருக்கும். பெரியார் முடி வெட்டிக் கொள்ள சொன்னார், ஆண்களை போல உடை அனைத்து கொள்ள சொன்னார், பணிக்கு செல்ல சொன்னார். இன்றைய காலகட்டத்தில் இவை செய்தால் மட்டும் போதுமா?

நான் பள்ளி படித்து கொண்டிருக்கும் பொழுது உறவினர் அக்கா ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். சில நாட்கள் கழித்து திரும்ப அவர் கிராமத்திற்கு செல்லும் பொழுது அம்மா ஒரு சுடிதார் கொடுத்த பொழுது, அவர் கிராமத்தில் அதை அணிய விடமாட்டார்கள் என்றார். இன்றைய காலகட்டத்தில், சுடிதார் அணிந்தால் போதும், பெண் சுதந்திரம் கிடைத்து விட்டது, இனி ஜீன்ஸ் சட்டை எல்லாம் போடாதே என்று சொல்வது சரியாக இருக்குமா!

சமீபத்தில் வெளியான விடுதலை 2 திரைப்படத்தில், மஞ்சு வாரியார் தனது முன்னாள் கணவர் அவரை அடிக்கும் பொழுது முடியை பிடித்துக் கொள்வர் அதனால் தான் முடியை வெட்டிக் கொண்டேன் என்பார். அவர் வெட்டி இருக்கும் முடியை கூட மிக எளிதாக பிடித்து அடிக்கலாம். ஒரு கைக்குள் அடங்கும் அளவிற்கு தான் முடியை வெட்டி இருப்பார். முடி வெட்டி கொள்ள அது தான் காரணம் என்றால் என்னை பொறுத்தவரைக்கும் மொட்டை தான் அடித்துக் கொள்ள வேண்டும். இவை எல்லாம் ஒரு கண்ணோட்டம் தான். சரி தவறு என்று எதுவும் இல்லை.

அந்த தோழர் பேசியதில் எனக்கு ஒரே ஒரு கருத்து மாறுபாடு இருக்கிறது. எனக்கு பிடித்திருந்தால் வேளைக்கு போவேன் இல்லை என்றால் போக மாட்டேன் என்றார். பெண் சுதந்திரத்திற்கு பொருளாதார சுதந்திரம் தான் அடிப்படை. அதனால் பெண்கள் எப்போதும் வேலைக்கு செல்வது மிக முக்கியமானது. அது ஒன்றை தவிர அந்த தோழர் பேசியதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.

அதில் கருத்து மாறுபாடு இருப்பவர்கள் தாராளமாக தங்களின் கருத்தை பதிவு செய்யலாம். அதற்கு துணையாய் பெரியாரை அழைத்து வந்து பெண்கள் பேசும் பெண் விடுதலையை பெரியார் பேசியதுடன் ஒப்பிட்டு இது தான் பெரியார் சொன்னாரா என்று கேட்பதெல்லாம் தற்குறித்தனமானது.

பெரியார் பேசிய மொத்த பெண்ணியத்தையும் ஒற்றை வரியில் அடக்க வேண்டுமென்றால், அவரின் வார்த்தைகளிலேயே சொல்லலாம் 'ஒரு பெண் என்பதால் உனக்கு ஒரு உரிமை மறுக்கப்படுமானால், அதை எதிர்த்து போராடுவதே பெண்ணியம்'

அந்த வகையில் அந்த பெண் தோழர், பெண்கள் என்றால் என்னவெல்லாம் எதிர்பார்க்கப்படுமோ அதை உடைத்திருப்பதையே பதிவு செய்துள்ளார். ஆகவே, இதை தான் பெரியார் சொன்னாரா என்று பெரியாரையே முன்னிறுத்தி பெண்களை ஒரு வட்டத்திற்குள் அடைப்பதே பெரியரியத்திற்கு எதிரானது தான்.

சொன்னது தவறாக இருந்தால் பெரியரையே கேள்வி கேட்க வேண்டும் என்று தான் பெரியார் சொல்லி இருக்கிறார்.

#சுமதி_விஜயகுமார் #தந்தை_பெரியார் 
Previous Post Next Post

نموذج الاتصال