வரலாறுகளைப் வாசிக்கும் வழக்கம் கிட்டத்தட்ட ஒழிந்துவிடும்
நிலை உருவாகிவிட்டது.
வரலாறுகளை வாசிப்பது என்று இல்லாமல், பொதுவாக புத்தகம் வாசிக்கும்
பழக்கமே இல்லாமல் போய்விட்டது.
வாட்ஸாப்பிலும், சமூக ஊடகங்களிலும் பரவும் இட்டுக்கட்டப்படும்
தகவல்களே வரலாறுகளாக மாறும் கொடுமை அதிகரிக்கிறது.
இந்நிலையில், நிஜமான வரலாறுகளை எளிமையாக பதிவு செய்ய வேண்டியது
அவசியம்.
அப்படி ஒரு முயற்சிதான் எழுத்தாளரும் ஓவியருமான ஸ்ரீரசாவின்
மானுடம் கண்ட மகத்தான புரட்சி என்ற நூல்.
மாபெரும் ரஷ்யப் புரட்சியை சிறுவர்களும் பெரியவர்களும் வாசிக்கும்
வகையில் சித்திரங்களுடன் உருவாக்கி இருக்கிறார்.
ரஷ்யாவின் வரலாறை மகா பீட்டர் காலத்தில் இருந்து படிப்படியாக
காட்சிப் படுத்தி இருக்கிறார்.
முடியாட்சியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் அனுபவித்த
கஷ்டங்களை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். விவசாயிகளாக இருந்து அனுபவித்த கஷ்டங்களையும்,
தொழில் வளர்ச்சி அடைந்தபிறகு தொழிற்சாலைகளில் அனுபவித்த கஷ்டங்களையும் தெளிவாக மனதில்
பதியும்படி இந்த நூலை தயாரித்திருக்கிறார்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் முடியாட்சியில் விவசாயிகளும், தொழிலாளர்களும்
அனுபவிக்கும் கஷ்டங்களை மட்டும் பதிவு செய்யவில்லை. அந்த கஷ்டங்களில் இருந்து அவர்களை
மீட்க நடைபெற்ற போராட்டங்களையும் வரிசையாக அறிமுகம் செய்கிறார்.
ரஷ்யாவில் மார்க்சியம் தலையெடுத்தது எப்படி என்பதை இன்றைய
இளம் கம்யூனிஸ்ட்டுகள் எளிதில் புரிந்துகொள்ள இந்த ஓவிய வடிவிலான நூல் பெரிய அளவில்
உதவும்.
ரஷ்யப் புரட்சியை லெனின் எவ்வாறு சாத்தியப்படுத்தினார் என்பதை
சுருக்கமாகவும், எளிமையாகவும் வரிசைப் படுத்தி இருக்கிறார் ஸ்ரீரசா.
இந்த நூலை வாசிப்பவர்களுக்கு, புரட்சிகர நிகழ்வுகளை விரிவாக
படிக்கும் ஆர்வம் நிச்சயம் ஏற்படும்.
பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்தான் சோஷலிஸப் புரட்சியைச்
சாத்தியமாக்கும் என்று லெனின் நம்பினார். அந்த நம்பிக்கையே இறுதியில் சோவியத் சோஷலிஸ
குடியரசை நிறுவியது.
உலகைப் புரட்டிப் போட்ட புரட்சி என்றும், உலகின் வரலாறையே
மாற்றி எழுதிய புரட்சி என்றும் ரஷ்யப் புரட்சியை ஏன் சொல்கிறார்கள் என்பது இந்த நூலை
படித்தால் புரியும்.
இன்று உலகில் முழு அதிகாரம் பெற்ற மன்னராட்சி என்பது எங்கும்
கிடையாது. அத்தகைய ஒரு நிலையை உருவாக்கியது ரஷ்யப் புரட்சி.