சியோல், ஏப்ரல் 25, 2025- தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு (SKTRA) நடத்திய "தொல்காப்பியத்தில் அறிவியல் கோட்பாடுகள்" என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கு நேற்று ஜூம் இணையதள வழியாக மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த கருத்தரங்கில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து, குறிப்பாக, கனடா, ஹாங்காங், கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த தமிழ் ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தமிழ் பல்கலைக்கழகத்தின் முனைவர் ஆய்வு மாணவரான திரு. S. வாசுதேவன் அவர்கள் வழங்கிய ஆய்வுரை நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக அமைந்தது. தொல்காப்பியத்தில் காணப்படும் அறிவியல் கோட்பாடுகள் குறித்து விரிவாக விளக்கிய அவர், பண்டைய தமிழ் இலக்கண நூலில் உள்ள, தற்கால அறிவியலுக்கு முந்தைய பல அறிவியல் கருத்துக்களை எடுத்துக்காட்டினார்.
"தொல்காப்பியம் வெறும் இலக்கண நூல் மட்டுமல்ல, அது அக்காலத்திய அறிவியல் சிந்தனைகளின் களஞ்சியமாகவும் திகழ்கிறது," என திரு. வாசுதேவன் தெரிவித்தார். ஒலியியல், உயிரியல், வானியல் மற்றும் சூழலியல் தொடர்பான பல முன்னோடி கருத்துக்கள் தொல்காப்பியத்தில் காணப்படுவதை அவர் விளக்கினார்.
கருத்தரங்கில் SKTRA-வின் செயலாளரான முனைவர் ஞானராஜ், "உலகளாவிய தமிழ் ஆய்வாளர்களை ஒருங்கிணைத்து, தமிழ் மற்றும் கொரிய கலாச்சாரங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது," என்று கூறினார்.
SKTRA அமைப்பின் தலைவர் பேராசிரியர் ஆரோக்கியராஜ் அவர்கள், "தமிழ் பாரம்பரியத்தை உலக அளவில் பரப்பும் நோக்கத்துடன் எங்கள் அமைப்பு தொடர்ந்து செயல்படும். வரும் காலங்களில் பல்வேறு கலாச்சார மற்றும் அறிவியல் தொடர்பான நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்," என்று அறிவித்தார்.
கருத்தரங்கின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரபல சிந்தனையாளர், திரு. சூரிய நாராயணன் தமது வாழ்த்துரையில், "தமிழ் மற்றும் கொரிய கலாச்சாரங்களுக்கு இடையிலான இந்த அறிவுப் பரிமாற்றம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும்," என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹாங்காங்கை சேர்ந்த முனைவர் மெய்சித்திரா அவர்கள், "பண்டைய தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகளைத் தேடி கண்டறிவது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தொல்காப்பியம் போன்ற பழைய நூல்களை நவீன கண்ணோட்டத்துடன் ஆராய்வது, நமது பாரம்பரியத்தின் மதிப்பை மேலும் உயர்த்துகிறது," என்று கருத்து தெரிவித்தார்.
முன்னதாக நிகழ்ச்சியை, SKTRA அமைப்பின் துணைத்தலைவர் கவிஞர் சகாய டர்சியூஸ் பீ சிறப்பாக வழிநடத்தி நன்றியுரையும் வழங்கினார்.