Description
1968ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி முதல், 1969ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி வரை 98 நாட்கள் அண்ணா தனது தம்பிகளுக்கு கடிதங்களே எழுதவில்லை.
இந்த நாட்களில் அவர் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்காவிலும், பிறகு சிகிச்சை முடிந்து ஓய்விலும் இருந்தார்.
அவர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த சமயத்தில்தான் சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற வேண்டியது அவசியமாகியது. அண்ணா இல்லாத அந்த தேர்தலில் தொண்டர்களுக்கு வழிகாட்ட அண்ணாவின் கடிதங்கள் இல்லை. அவருடைய பிரச்சாரமும் இல்லை. ஆனால், கலைஞரின் கடிதங்கள் தொண்டர்களுக்கு வழிகாட்டின.
அமெரிக்காவில் இருந்து அண்ணா திரும்பியபோது, சென்னை மாநகராட்சித் தேர்தல் வெற்றிக் கனியை அவருக்கு காணிக்கையாக கொடுத்தார் கலைஞர்.
அதன்பிறகுதான் தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தை பேரவையில் அண்ணா கொண்டு வந்தார். அந்த தீர்மானம் தொடர்பாக காங்கிரஸார் எழுப்பிய விதண்டாவாதங்களுக்கு கலைஞர்தான் மிக நீண்ட கடிதங்கள் மூலம் விளக்கம் அளித்தார்.
1969 ஜனவரி 28ஆம் தேதி அண்ணாவின் உடல்நிலை மோசமடைந்தது. அந்தத் தேதிவரை, மொத்தம் 32 கடிதங்களை கலைஞர் எழுதியிருந்தார்.
அந்தக் கடிதங்கள் அனைத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. அண்ணாவின் நிஜமான வாரிசு கலைஞர்தான் என்று நிரூபித்த கடிதங்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டதில் இருந்து இயக்கத்தை வழிநடத்த தம்பிகளுக்கு கடிதம் வாயிலாக அரசியல் பாடம் எடுத்தவர் பேரறிஞர் அண்ணா.
திராவிட நாடு வார இதழில் தம்பீ என்று அழைத்து, நாட்டு நடப்புகளையும், உலக வரலாறையும், தமிழ் இலக்கியம், உலக இலக்கியம், பகுத்தறிவுச் சிந்தனை ஆகியவற்றையும், அரசியல் எதிரிகளின் விமர்சனங்களுக்கு எப்படி பதில் அளிக்க வேண்டும் என்பதையும் தனது கடிதங்களில் கற்பித்தவர் அண்ணா.
அண்ணாவின் கடிதங்களும், இலக்கிய படைப்புகளும், பொதுக்கூட்ட உரைகளும் அவரை பின்பற்றிய தம்பிகளுக்கு வேதமாக இருந்தது. அவருடைய கருத்தை பின்பற்றும் லட்சக்கணக்கான இளைஞர்கள் அண்ணாவின் புகழ்பாடி அவரை பின்தொடர அண்ணாவின் அறிவாற்றல் வெளிச்சம் பாய்ச்சியது.
அண்ணாவுக்கு அடுத்தபடியாக எந்த விஷயத்தையும் சாமானிய தொண்டர்களுக்குப் புரியும் வகையிலும், உணர்ச்சி ஊட்டும் வகையிலும் எளிய தமிழில் எழுதவும் பேசவும் கூடியவராக கலைஞர் இருந்தார்.
திரைப்படங்கள், இலக்கியக் கட்டுரைகள், ஆதாரங்களுடன் எதிரிகளுக்கு பதில் அளிக்கும் அறிக்கைகள் என்று கலைஞரின் எழுத்துகள் பரவலாக திமுக தொண்டர்களை ஈர்த்தன.
அந்த வகையில் தனக்கு சீனியர்களாக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட தலைவர்களைக் காட்டிலும் இயக்கத்தில் பாப்புலர் மற்றும் பவர்ஃபுல் தலைவராக கலைஞர் உருவாகி வந்தார்.
1962ல் திமுகவின் பொதுச் செயலாளர் தேர்தலில் கலைஞர் தேர்ந்தெடுக்கப்படும் சூழல் உருவானது. அதை தடுக்க சம்பத்தின் அத்தனை முட்டுக் கட்டைகளையும் சமாளித்து, அண்ணா பொதுச்செயலாளர் ஆகவும், கலைஞர் பொருளாளர் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இயக்கத்தின் அத்தனை தலைவர்களைக் காட்டிலும், இயக்கத்தவரு டன் நெருக்கமாகவும், இயக்க வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதிலும் சுறுசுறுப்பாகவும் கற்பனை ஆற்றலோடும் இயங்கினார் கலைஞர்.
அண்ணாவுக்கு அடுத்தபடியாக இயக்கத்தவரின் ஆதரவை பெற்றவராகவும், மக்கள் மத்தியில் நன்றாக அறிமுகமானவராகவும் கலைஞர் இருந்தார் என்பதற்கு இந்த 32 கடிதங்களும் மிகப்பெரிய சாட்சியமாக இருக்கின்றன. இவற்றை தனியாக கொடுப்பதில் சிபி பதிப்பகம் பெருமை கொள்கிறது.
-ஆதனூர் சோழன்





Reviews
There are no reviews yet.