Description
இயற்கை அன்னையின் எழில் தோட்டம் நேபாளம்.
இமயமலையின் உச்சியிலும் இடுக்கிலுமாக பரவிக் கிடக்கிறது இதன் நிலப்பரப்பு.
இந்தப் பிரதேசத்திற்குள் மனிதன் எபபோது நுழைந்தான். இதைத் தனது இருப்பிடமாக எப்படித தேர்ந்தெடுத்தான் என்பதற்கான ஆதாரங்கள் கூட கிடைக்கவில்லை.
வனமும், உறைபனியுமாக பரவிக் கிடந்த நிலப்பரப்பை தனது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பூர்வ குடியினர் அழகானவர்கள்.
வனத்தில் வசிக்கும் அழகிய மக்கள் என்று மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் மனிதர்கள் நேபாளிகள்தான் என்று வரலாற்று ஆசிரியர்கள் நம்புகின்றனர்.
மற்றபடி படிமங்கள் வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
கிராத வம்சத்தினர், லிச்சவி வம்சத்தினர், மல்லா வம்சத்தினர் என்று அடுத்தடுத்து நேபாளத்தின் பகுதிகளை ஆக்கிரமித்து இருந்துள்ளனர் என்பது மட்டும் புரிகிறது.
சிறு சிறு துண்டுகளாக சிதறிக் கிடந்த நேபாளத்தை ஒருங்கிணைக்கவே ஆயிரக் கணக்கான ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.
அப்படி இணைத்த பிறகு நேபாளத்தை ஆண்டவர்கள் அனைவரும் அதை வெளியுலகத் தொடர்பே இல்லாமல் துண்டித்து விட்டனர்.
தனித்துக் கிடந்த நேபாளம் அடுத்தடுத்து ஆளும் வர்க்கத்தினராலும் வெளியிலிருந்து குடியேறியவர் களாலும் சுரண்டப்பட்டு வந்திருக்கிறது.
மண்ணின் மைந்தர்கள் தீண்டத் தகாதவர்களாக, புறக்கணிக்கப்பட்டவர்களாக வாழ வேண்டிய நிலை. மன்னரைத் தெய்வமாக தொழும் நிலையை ஊக்குவித்து, புராதன கால நடைமுறைகளிலேயே ஊறித் திளைத்தது நேபாளம்.
பல நூற்றாண்டுகள் பின்தங்கிக் கிடந்த நேபாளத்தை, மன்னர்களிடம் இருந்தும் மேட்டுக் குடியினரிடம் இருந்தும் மீட்க நடந்த போராட்டம், முடிவே இல்லாமல் நீடித்தது.
எத்தனையோ வழிமுறைகளில் போராட்டங்கள். எத்தனையோ கோட்பாடுகளைப் பின்பற்றி நடந்த போராட்டங்கள்.
கம்யூனிஸமும் கூட அங்கு தடுமாறியது. ஆனால், நேபாளத்துக்கு மன்னர் ஆட்சி தேவையில்லை. பூர்வ குடியினருக்கு சொந்தமான நிலத்தை அபகரித்த மன்னரை விரட்ட வேண்டும். மன்னரை கையில் போட்டுக் கொண்டு ஆதிக்கம் செலுத்தும் மேட்டுக் குடியினரிடம் இருந்து அரசியல் அதிகாரத்தைப் பறிக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தை மக்கள் கைக்கு மாற்ற வேண்டும். இதுதான், நேபாளத்தின் முன்னேற்றத்துக்கு உத்தரவாதமான வழி என்று மாவோயிஸ்ட்டுகள் முழங்கினர்.
தங்களுடைய குரலை எதிரொலித்த மாவோயிஸ்ட்டுகளின் பின்னால் மக்கள் அணிவகுத்தனர். முதலில் ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்ட்டுகள், இறுதியில் தேர்தல் அரசியல் மூலம் மன்னரை விரட்டுவதில் வெற்றி பெற்றுள்ளனர்.
21 ஆம் நூற்றாண்டின் இணையற்ற புரட்சி இது. மக்கள் சக்தியை அடக்கி வைக்க முடியாது என்பதற்கு மிகச் சமீபத்திய சாட்சியாக கண்ணெதிரே விரிந்து கிடக்கிறது நேபாளம். சனாதன இந்து சாஸ்திரங்களின் சரிவுக்கும் இதுதான் சாட்சி.
வழக்கம்போலவே, அரிய படங்களுடன் வெளியிடப்படும் நேபாளத்தின் புரட்சி வரலாறும், உங்களை பரவசப்படுத்தும் என்று நம்புகிறேன்.
நன்றி
அன்புடன்
ஆதனூர் சோழன்





Reviews
There are no reviews yet.