Description
தமிழர்கள் தலை நிமிர்ந்து நடக்க தனது தள்ளாத வயதிலும் தமிழகம் முழுவதும் சுற்றிவந்து போராடிய தலைவர் பெரியார்.
அவர் நடத்திய உரிமைப் போராட்டங்கள் பலவற்றுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்கியவர் அண்ணல் அம்பேத்கர்.
இன்று தமிழர்கள் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் உரிமை பெற்று வாழ்வதற்கு இவர்கள்தான் காரணம்.
மக்களை பல சாதிப் பிரிவுகளாக பிரித்து, ஒரு சாதிக்கு கீழ் மற்றொரு சாதியாக கணக்கில் அடங்காத சாதிகளை உருவாக்கினர். பார்ப்பனர்களின் இந்த மோசடியை பகிரங்கமாக எதிர்த்தவர் தந்தை பெரியார்.
அவருக்கு முன் சாதிகளை உருவாக்கிய பார்ப்பனர்களுக்கு எதிரான போராட்டத்தை யாரும் விடாப்பிடியாக முன்னெடுக்கவில்லை. பார்ப்பனர்களை விட்டு தனியாகப் போவோம் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.
தந்தை பெரியார்தான் முதன்முறையாக மனிதர்களுக்குள் பிரிவினை பார்க்கும் மோசடியை எதிர்க்கத் தொடங்கி, அந்த மோசடிக்கு காரணமாக சொல்லப்பட்ட மதம், கடவுள் என்று எல்லாவற்றையும் எதிர்த்து போராடினார்.
சாதிகளுக்கு எதிராக மட்டுமல்ல, கடவுளுக்கு எதிராக மட்டுமல்ல, மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட மூடப் பழக்க வழக்கங்களையும் எதிர்த்தார்.
சமுதாயத்தில் உள்ள இந்த ஏற்ற தாழ்வுகளை நீக்க வேண்டும் என்றால், பெண்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்று பெண்களுக்காக முதல் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார்.
பெண்களுக்கு சிறு வயதில் திருமணம் செய்யக்கூடாது. அதை பெண்களே எதிர்க்க வேண்டும். பெண்கள் வெறும் போகப் பொருள் அல்ல. பெண்கள் படித்து பெரிய பெரிய பதவிகளுக்கு வரவேண்டும். தொடக்கக் கல்விக் கூடங்களில் பெண்களே ஆசிரியைகளாக இருக்க வேண்டும். பெண்களுக்கு குடும்பச் சொத்தில் சம பங்கு கொடுக்க வேண்டும். பெண்கள் யாரையும் சார்ந்து வாழக் கூடாது. பெண்களும் ஆண்களைப் போலவே உடைகள் அணிய வேண்டும். குழந்தை பெறும் எந்திரமாக பெண்கள் இருக்கக் கூடாது என்று தனது போராட்டத்தில் பெரும்பகுதி கவனத்தை பெண்களுக்காகவே செலுத்தினார்.
இன்றைக்கு தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்புகளில் பெண்கள் அடைந்திருக்கிற முன்னேற்றத்துக்கு தந்தை பெரியார்தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.
தந்தை போராடியது மட்டுமல்ல, அவருடைய நோக்கம் அனைத்தும் திராவிட முன்னேற்றக்கழக அரசாங்கத்தால் அவர் வாழும் காலத்திலேயே பெரும்பகுதி நிறைவேற்றப்பட்டன.
அதற்கு அண்ணல் அம்பேத்கர் வகுத்தளித்த இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும் உதவியாக இருந்தது. பெண்களுக்குச் சொத்துரிமை என்ற விஷயத்தில் அம்பேத்கர்கூட தோற்றுவிட்டார். ஆனால், முதன்முறையாக தமிழ்நாட்டில் கலைஞர் அந்த சட்டத்தை உருவாக்கி, அந்தச் சட்டம் இந்தியா முழுமைக்கும் செல்லத்தக்கதாக மாற்றினார்.
எப்படி இருந்தாலும், அரசியல் அமைப்புச் சட்ட்தை உருவாக்கி, இந்திய மக்களின் பாதுகாப்பான வாழ்க்கைக்கு ஓரளவேனும் உத்தரவாதம் கொடுத்தவர் அண்ணல் அம்பேத்கர்.
காலங்காலமாக தீண்டவே தகாதவர்களாக ஆக்கப்பட்டிருந்த ஒரு சாதிப் பிரிவில் பிறந்த பீம்ராவ் என்ற சிறுவன், தான் பெற்ற கல்வியைக் கொண்டு, தான் பிறந்த பிரிவைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப் படுத்தினார்.
ஏராளமான பட்டங்களையும் பாராட்டுகளையும் வாரிக் குவித்து சொந்த நாட்டுக்கு திரும்பினாலும் அவருடைய மதிப்பு கூடவில்லை. கல்வியைக் காட்டிலும் சாதிப் பட்டம்தான் மதிப்பு மிக்கதாக இருந்தது.
இதை உணர்ந்த பிறகு சமூகத்தால் ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் போராட்டத்தை தொடங்கினார். பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் தனது மக்கள் சந்திக்கும் கொடுமைகளை எடுத்து வைத்து அவர்களுடைய வாழ்க்கை மேம்பாட்டுக்காக வாதாடினார். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் துன்பங்களை அரசாங்கம் போக்குவதற்கான வழிகளை எடுத்து வைத்தார்.
குரலற்றவர்களாக இருந்த தனது மக்களின் குரலாக ஒலித்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் அமைப்பாகத் திரண்டு போராட வேண்டும். அப்படிப் போராடாவிட்டால் அவர்கள் வாழ்க்கை மேம்பட வழியே இல்லை என்றார். தனது மக்களுக்கு அவர் விழிப்புணர்வை ஊட்டி ஒன்று திரட்டினார்.
அவருடைய போராட்டம் பலமுறை உயர்சாதியினரால் சிதைக்கப்பட்டது. ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, தாங்கள் ஒடுக்கப்பட்டு அடக்கப்படுகிறோம் என்பதை உணரவைப்பதில் வெற்றி பெற்றார். அந்த விழிப்புணர்வு ஆதிக்க சாதியினருக்கு எதிரான போராட்ட உணர்வை ஏற்படுத்தியது.
நாடு விடுதலை அடைந்த பிறகு, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுடைய வாழ்க்கைப் பாதுகாப்புக்கான அரசியல் சட்டத்தை வடிவமைக்கும் பொறுப்பு அவரிடம் வந்தது. எத்தனையோ தடைகளை மீறி, தான் நினைத்த அத்தனையையும் செய்ய முடியாவிட்டாலும், ஓரளவு அவர்களுக்கான பாதுகாப்பை ஏற்படுத்தினார்.
எதிர்கால தலைமுறை உன்னதமான சமூக அமைப்பை உருவாக்க வேண்டும். ஆரோக்கியமான, பகுத்தறிவு மிக்க நாட்டை கட்டமைக்க வேண்டும் என்றால் அண்ணல் அம்பேத்கர் ஏற்படுத்திக் கொடுத்துள்ள பாதுகாப்பை பயன்படுத்தி, அதை மேலும் வலுவாக்க வேண்டும். அதற்கு இந்த நூல் சிறிய அறிமுகமாக இருக்கும்.
சமுதாயத்தின் இருள்நீக்க வந்த இரு சுடர்களின் வாழ்க்கை வரலாறை ஒரே நூலில் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
-ஆதனூர் சோழன்





Reviews
There are no reviews yet.