Description
அறிவியல் விஷயங்களை எழுதியவன் திடீரென்று ஹாலிவுட் சினிமா நடிகைகளைப் பற்றி எழுதுகிறானே என்று வியப்படையாதீர்கள்.
கவிஞனாக, கதாசிரியனாக உருவாக வேண்டும் என்று, இளவயதில் கனவு கண்டவன் நான். கவிஞனாக என்னை நிரூபித்தேன்.
பிறகு, பத்திரிகையாளனாக மாறியவுடன் எனக்குக் கிடைத்த பரந்துபட்ட வாய்ப்புகள், நான் மேலும் மெருகேற துணையாக இருந்தன.
தீக்கதிரில் பணிபுரியும்போது, அறிவியல் கட்டுரைகளை எழுதி அதை புத்தகமாக வெளியிட்டேன். எனது முதல் நூலுக்கே எழுத்தாளர் திரு. சுஜாதாவின் பாராட்டு கிடைத்தது.
கவிதை எழுதுவதை விட்டு, அறிவியலில் கவனம் செலுத்தும்படி அறிவுரை கூறினார்.
வசிஷ்டர் வாயால் பாராட்டுக் கிடைத்தால் பெருமையாகத்தானே இருக்கும். அறிவியல் எழுதுவதற்கு பெரிய அளவில் யாரும் ஆர்வம் காட்டவில்லை என்பதை உணர்ந்ததும் அந்தத் துறையில் கவனம் செலுத்தினேன்.
அடுத்து நான் வெளியிட்ட இன்னொரு வானம் என்ற நூலை 2006 ஆம் ஆண்டின் சிறந்த நூலாக தேர்வு செய்தார் சுஜாதா.
இந்நிலையில்தான், சென்னை தினமணி ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தபோது, தினமணி கதிரின் பொறுப்பாசிரியர் திரு. சிவக்குமாரிடம் பேசினேன். அப்போது, ஹாலிவுட்டை இப்போது கலக்கிவரும், முன்னர் கலக்கி ஓய்ந்த நடிகைகளைப் பற்றி எழுதும்படி யோசனை தெரிவித்தார்.
ஞாயிறு கொண்டாட்டம் பகுதிக்காக, ஜனரஞ்சகமாக எழுதத் தொடங்கியவைதான் இந்த கட்டுரைகள். ஆனால், சில வாரங்கள் மட்டுமே எழுதினேன்.
ஆனால், வெறுமனே கவர்ச்சியை மட்டும் மையமாக கொண்டு கலக்கிய நடிகைகளை விட்டுவிட்டு, ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த நடிகைகளின் சாதனை, அவர்களின் பின்னணியை எழுதினால் சினிமாத் துறையினருக்கும், சினிமா ஆர்வலர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்று கருதினேன்.
அதைத்தொடர்ந்து, இதுவரை அதிகமாக ஆஸ்கர் விருதுகளை பெற்ற நடிகைகள், அதிகமுறை ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக் கப்பட்ட நடிகைகள், தங்களுடைய தனித்தன்மை காரணமாக ஹாலிவுட் திரையுலகில் முத்திரை பதித்தவர்கள் எனப் பிரித்து கட்டுரைகளைத் தொகுத்தேன்.
முழுமையாக தொகுத்தால் மிகப்பெரிய புத்தகமாகிவிடும் என்பதால் இரண்டுமுறையும் அதற்கு மேலும் விருதுகளை வாரிக் குவித்த நடிகைகள் சிலரைப் பற்றியும், விருது பெறாவிட் டாலும் உலகின் கவனத்தைக் கவர்ந்த மர்லின் மன்றோ, சிறந்த துணைநடிகைக்கான விருதை மட்டும் பெற்றாலும் ஐ.நா. மனிதாபிமானக் குழு தூதராக நியமிக்கப்பட்ட ஏஞ்சலினா ஜோலி ஆகியோரைப் பற்றி மட்டும் தொகுத்துள்ளேன்.
வெறுமனே சுவாரசியத்துக்காக மட்டும் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. எழுதப்படும் விஷயம், வாசகர்களுக்கு ஏதேனும் ஒருவகையில் உபயோகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
அந்த வகையில் ஆஸ்கர் விருது பெறும் நடிகர்களோ, அல்லது நடிகைகளோ அந்த விருதைப் பெறுவதற்கு எப்படியெல்லாம் உழைக்கிறார்கள் என்பதை இந்த நூல் தெளிவு படுத்தும்.
ஆங்கிலப் படங்களுக்கு மட்டுமே ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று நம்மில் சிலர் எளிதாகக் கூறிவிடுவோம். ஆனால், ஏழ்மையில் உழன்று முன்னேறிய சோபியா லாரென், இத்தாலி மொழிப் படத்தில் நடித்துத்தான் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார் என்று அறியும்போது, ஆஸ்கர் விருதுக்கான் விதிமுறைகளின்படி நடித்திருந்தால் யார் வேண்டுமானாலும் விருது பெற முடியும் என்பது புரியும்.
ஹாலிவுட் திரைப்பட நிறுவனங்கள் திறமையைத் தேடி எங்கெல்லாம் அலைந்து நடிகர், நடிகைகளைக் கண்டுபிடித்து பயன்படுத்தி இருக்கின்றன என்பதையும், இந்தக் கட்டுரை களைப் படிக்கும்போது தெரிந்து கொள்ளலாம்.
திரைத்துறையினருக்கு இந்த நூல் எனது சிறிய காணிக்கை.
அன்புடன்
ஆதனூர் சோழன்





Reviews
There are no reviews yet.