Description
1970களின் மத்தியில் கல்லூரியில் சேர்ந்த புதிதில் சோவியத் புத்தகங்கள் எனக்கு அறிமுகமாகின. அந்தப் புத்தகங்களின் தயாரிப்பும், குறைந்த விலையும் அவற்றை வாங்கிப் படிக்க வசதியாக இருந்தன.
அப்படி வாசித்த நூல்களில் ஒன்றுதான் வீரம் விளைந்தது நாவல். அதை எழுதியவர் நிகோலாய் ஓஸ்ட்ரோவ்ஸ்கி. அந்த நாவலின் கதாநாயகன் சோவியத் புரட்சியின் வெற்றிக்குப் பிறகு, புதிய உலகத்தை கட்டமைக்கும் பணியில் அவருடைய பங்களிப்பு வியக்க வைத்தது. ஆனால், அந்தக் கதாநாயகனே அவர்தான் என்று அறியும்போது நெஞ்சத்தில் ஒரு ஏக்கம் பிறந்தது. அதுபோல ஒரு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டது.
சோவியத் யூனியனில், உக்ரேனில் உள்ள விலியா என்ற ஊரில் 1904ஆம் ஆண்டு நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி பிறந்தார். தந்தை ஒரு கூலித் தொழிலாளி. தாய் சமையல்காரர். புரட்சிக்கு முந்தைய ஜார் ரஷ்யாவில் அந்தக் குடும்பம் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருக்கும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
சோவியத் கம்யூனிஸ்ட் இளைஞர் சங்கத்தில் உறுப்பினராகி, சோவியத் செஞ்சேனையில் இணைந்தவர் நிகோலாய். புரட்சியின் வெற்றிக்குப் பிறகு அந்த தேசம் சந்தித்த மிகப்பெரிய சவால்களை எதிர்த்து, இளைஞர்களை அணிதிரட்டி போராடினார்.
புரட்சிக்குப் பின் சோவியத் ரஷ்யாவின் மக்கள், ஒரு புதிய உலகத்தைக் கட்டமைக்கும் மாபெரும் பணியை செய்து கொண்டிருந்தனர். இந்தப் பணியில் ஓஸ்ட்ரோவ்ஸ்கி போன்ற இளைஞர்கள் பெரும்பங்கை ஆற்றினர்.
அந்தப் பணிகளைச் சீர்குலைக்க முதலாளித்துவ ஆதரவு குழுக்கள் சதிகளை செய்தன. போலந்து அரசின் படைகள் 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யா மீது தாக்கி கொள்ள்ளையடித்தது.
அந்தப் போரில் தீரமாகப் போராடிய ஓஸ்ட்ரோவ்ஸ்கி படுகாயம் அடைந்தார். 1928ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகள் படுத்த படுக்கையானார். கண்பார்வையையும் இழந்தார். உடல்ரீதியாக முடங்கினாலும் பேனாவை ஆயுதமாக மாற்றினார்.
How the Steel Was Tempered என்ற நூலை எழுத சோவியத் யூனியனின் அனுமதி கிடைத்தது. அதற்கான உதவிகளை அரசு செய்தது. படுக்கையில் இருந்தபடியே பெரும்பகுதியை எழுதினார். எழுதும்போதே பார்வையை இழந்தார். பின்னர் அவர் சொல்லச் சொல்ல எழுத உதவியாளர் நியமிக்கப்பட்டார்.
இரண்டு பாகங்களாக எழுதப்பட்ட நூலின் முதல் பாகம் நிகோலாயின் இளமைப்பருவம், அவனது காதல் வாழ்க்கை, தாயுடனான அன்பு, சகோதரன் ஆர்த்தியோமுடனான உறவு, தாய்நாட்டுப் பற்று, புரட்சியில் ஈடுபாடு என நம்மை உள்ளுக்குள் இழுக்கும்.
1915-ம் ஆண்டு முதல் 1931-ம் ஆண்டு வரை ஒஸ்ட்ரோவ்ஸ்க்கியும் அவரது தோழர்களும் நடத்திய வீரம் செறிந்த போராட்டங்களை அடுத்த தலைமுறைக்கு சொல்ல முனைந்ததுதான் இந்த நூலின் மைய நோக்கம்.
இந்த நாவலின் சிறப்பு என்னவென்றால், முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியான மாக்சிம் கார்கிதான் இந்த நாவலை வாசித்து ஒப்புதல் அளித்தவர். நாவலின் கதாநாயகனான பாவல் கச்சாக்கின் வழியாக தனது சுயவரலாற்று படைப்பாக இந்த நூலை ஓஸ்ட்ரோவ்ஸ்கி எழுதி வழங்கினார்.
48 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. ”இந்நாவலை எழுதி முடித்ததும், என்னைச் சுற்றி வளைத்திருந்த இரும்பு வளையமொன்றிலிருந்து விடுபட்ட உணர்வு பெற்றேன். அசைய முடியாமை என்ற துன்பத்தை வென்றேன். மறுபடியும் போர்வீரர்களில் ஒருவனாக மாறிவிட்டேன்.” என்றார் ஓஸ்ட்ரோவ்ஸ்கி.
புயலில் பிறந்தவன் என்ற இரண்டாவது நாவலை எழுதி முடிக்கும் முன் 1936ஆம் ஆண்டு இறந்துவிட்டார். முதல் நாவல் எழுதும்போது அவர் எழுதிய கட்டுரைகள், உரைகள், கடிதங்கள் ஆகியவை தொகுக்கப்பட்டு ‘வாழ்க்கையைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் 1955-ம் ஆண்டு வெளியிடப் பட்டது. அந்த நூலின் மொழிபெயர்ப்பு இது. தோழர் நல்லகண்ணு அவர்களின் வேண்டுகோளை ஏற்று மொழிபெயர்த்த நூல் இது. ஓஸ்ட்ரோவ்ஸ்கியின் அர்ப்பணிப்பு வாழ்க்கை நம்மை வியக்க வைக்கும்.
ஆதனூர் சோழன்





Reviews
There are no reviews yet.