Description
இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் பிரிட்டிஷாருக்கு எதிராக தீவிரவாத போராட்டத்தை நடத்த வேண்டும் என்ற குழுவில் பாலகங்காதர திலகரும் லாலா லஜபதிராயும் முக்கியமானவர்கள். இந்தக் குழுவினர் பிரிட்டிஷாரை உடனடியாக நாட்டைவிட்டு துரத்த வன்முறைப் போராட்டங்களில் மக்களை ஈடுபடுத்த விரும்பினார்கள்.
பால் கங்காதர திலகரும் கோபால கிருஷ்ண கோகலேவும் நண்பர்கள். இருவரும் கிறிஸ்தவ பள்ளிகளுக்கு போட்டியாக இந்து பள்ளிகளையும் கல்லூரிகளையும் உருவாக்க திட்டமிட்டனர். ஆனால், ஒரு கட்டத்தில் அவற்றில் இந்து மதத்தினருக்கு மட்டுமே இடம் அளிக்க வேண்டும் என்று திலகர் கூறினார்.
கோகலேவும் மற்றவர்களும் திலகர் கருத்தை ஏற்கவில்லை. திலகர் பழமைவாத இந்து மூடநம்பிக்கைகளில் உறுதியாக இருந்தார். வர்ணாசிரமக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டிருந்தார். பிரிட்டிஷார் வர்ணாசிரமக் கோட்பாடுகளைத் தகர்க்கிறார்கள். அவர்களை நாட்டைவிட்டு விரட்டி, இந்து சனாதன தர்மத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் விரும்பினார்.
பிரிட்டிஷார், சாதி வேறுபாடுகளை களைய நடவடிக்கை எடுத்ததை அவர் எதிர்த்தார். அன்றைய காலகட்டத்தில் பழைய நடைமுறைகள் அப்படியே நீடிக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் திலகரைப் பின்பற்றினார்கள்.
தமிழ்நாட்டில் வ.உ.சி.யை உசுப்பேத்தி அவர் வெள்ளையரை எதிர்த்து தீவிரமாக போராட திலகர்தான் காரணம் என்பார்கள். தூத்துக்குடியில் கப்பல் கம்பெனி தொடங்கியது, வெள்ளையருக்கு எதிராக மக்களைத் தூண்டி கலகம் செய்தது என்று வ.உ.சி. கடுமையாக போராடினார். அதன்காரணமாக அவருக்கு கடுங்காவல் தண்டனை வழங்கி, வாழ்க்கையை தொலைத்தார்.
அவரைப் போல, இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தீவிரவாதக் குழுக்களுக்கு தலைமை ஏற்ற பலர் இருந்தார்கள். அவர்களில் பஞ்சாபில் லாலா லஜபதி ராயும், மேற்கு வங்கத்தில் விபின் பால், ராஸ் பிகாரி கோஷ், அரவிந்த் கோஷும் முக்கியமானவர்கள்.
பஞ்சாபில் பிறந்த லாலா லஜபதிராய் வழக்கறிஞர் பட்டம் பெற்றவர். நன்றாக சம்பாதித்தார். தனது வீட்டுக்கும் பிள்ளைகளுக்கும் போதுமான அளவு சம்பாதித்தார். ஒருகட்டத்தில் வழக்கறிஞர் தொழிலை விட்டு ஆரிய சமாஜத்தில் இணைந்து பணியாற்றினார். கல்வி நிலையங்களை உருவாக்குவதில் தனது கவனத்தை செலுத்தினார்.
பஞ்சாப் மக்கள் மத்தியில் உணர்ச்சிகரமாக பேசி எழுச்சியை ஊட்டுகிற தலைவராக உருவெடுத்தார். புதிதாக தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சியில் சேருமாறு அவருக்கு அழைப்பு வந்தது.
அதில் இணைந்தபோது, ஆரிய சமாஜம் அதை எதிர்த்தது. காங்கிரஸ் கட்சி கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களையும் ஆதரிப்பதால் எதிர்த்தது. ஆனால், லாலா தனது முடிவை மாற்றவில்லை. இருந்தாலும் பிரிட்டிஷாரை உடனே விரட்ட வேண்டும் என்ற தீவிரவாத சிந்தனை கொண்டிருந்தார்.
அவருடைய இந்தத் தீவிரவாத சிந்தனை அவருக்கு அடிக்கடி ஆபத்தை ஏற்படுத்தியது. பிரிட்டிஷ் போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒருமுறை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடிய இவருடைய ஆதரவாளர்களுக்கு வாதாட முடிவெடுத்தார். அதற்காக இவர் கைதுசெய்யப்பட்டு பர்மாவில் உள்ள மண்டாலே சிறையில் அடைக்கப்பட்டார்.
சைமன் கமிஷனை எதிர்த்து இவர் தலைமையில் பகத்சிங் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்தான் கடுமையாக தாக்கப்பட்டார். அதில் ஏற்பட்ட உள்காயம் இவரை வாட்டி, விரைவிலேயே உயிரைப் பறித்தது.
விடுதலைப் போராட்டம் காந்தியின் அகிம்சை முறையால் மட்டும் வெற்றிபெறவில்லை. இவர்களைப் போன்ற தீவிரவாதிகளின் போராட்டமும் ஒருபக்கத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு நெருக்குதலைக் கொடுத்ததால்தான் வெற்றிபெற்றது என்பதை நாம் தெரிந்துகொள்ள இந்த நூல் உதவும்.
ஆதனூர் சோழன்





Reviews
There are no reviews yet.