Description
இ.எம்.எஸ்.
இந்த மூன்றெழுத்தின் மூச்சில் நிறைந்திருந்தது மார்க்சிஸம். கோடீஸ்வரக் குடும்பத்தில் பிறந்தவர் இவர். ராஜாக்கள் போல அதிகாரம் செலுத்திய குடும்பம் இவருடையது.
இவருடைய வீட்டுக்கு முன் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கூன்வளைத்து கும்பிட்டு காத்திருந்தன.
வீட்டுக்குள் இருண்டு கிடந்தது. அது பழமை இருட்டு. அந்த இருட்டுக்கு வெளிச்சம் என்று பெயரிட்டிருந்தனர். அர்த்தம் புரியாதவர்கள்.
இ.எம்.எஸ். ஸுக்குத்தான் அது இருட்டு என்று நிஜ அர்த்தம் புரிந்தது. அவர் சொன்னதை ஏற்க சிலர் மறுத்தனர். பலருக்கு அதுதான் உண்மை என்பது உடனே புரிந்தது.
இந்த உண்மை தெரிந்தும், சொல்லத் துணிவற்று கிடந்த வர்கள் இ.எம்.எஸ். ஸுடன் கைகோர்த்தனர்.
முதலில், தனது சொந்த சமூகத்தை சுத்தப்படுத்தும் வேலையில் தான் இறங்கினார். அப்போதுதான் நாடும் இருட்டுக்குள் கிடப்பது தெரிந்தது.
மிக இளைய வயதில் சமூகம், தேசம் என்று அவருடைய பார்வை விரிவடைந்தது.
தனது சமூகத்தைச் சீர்திருத்த என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரிந்திருந்தது. இருட்டுக்குள் கிடந்தவர்களை வெளிச்சத்துக்கு கூட்டிவந்து விட்டார்.
தேசத்துக்கு எது நல்லது என்று தலைவர்கள் சொன்னதை ஏற்று செயல்பட்டார். ஆனால், அது நல்லதில்லை என்பதை காலம் அவருக்கு கற்பித்தது. இந்த தேசத்துக்கு எது தேவை, தனது மலையாள மண்ணுக்கு எது தேவை என்பதை பரிசோதனைகள் மூலம் தேடினார்.
ஆம். காங்கிரஸில் காந்தி சொன்னதைக் கேட்டு சிறைக்குப்
போனார். காங்கிரஸுக்குள்ளேயே சோஷலிஸ்ட்டுகளுடன் கைகோர்த்தார்.
எதுவும் திருப்திப்படவில்லை.
கடைசியில் மார்க்சிஸத்தை இந்த மண்ணுக்கு ஏற்றபடி செயல்படுத்தினால் சரியாக இருக்கும் என்று அவர் முடிவு செய்தார்.
கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய முன்னோடிகளுடன் இணைந்தார். கேரளாவில் கம்யூனிஸ்ட் குழுவை ஏற்படுத்தினார். கேரளாவை கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாக மாற்றினார்.
சொத்துக்களை கட்சிக்கு எழுதிக் கொடுத்தார். சாதாரண தொண்டர் எந்தவிதமான வாழ்க்கையை மேற்கொண்டாரோ அதே வாழ்க்கையை அவரும் வாழ்ந்தார். தலைக்கு விலை வைத்தது அரசு. தலைமறைவாக இருந்து மக்கள் போராட்டங் களுக்கு தலைமைவகித்தார்.
வேட்டை நாய்கள் விரட்டிக்கொண்டே இருந்தன. கம்யூனிஸ்ட்டுகள் என்றால் கண்ட இடத்தில் சுட்டுக் கான்றனர். முதலாளிகளின் கைக்கூலிகள் அரசுப் பொறுப்பில் இருந்தனர். தொழிலாளி வர்க்கத்தின் அரசாங்கத்தை முதன்முதலில் இந்திய மண்ணில் அரியணை ஏற்றினார் இ.எம்.எஸ்.
அவருடைய நூற்றாண்டு நிறைவு விழா ஆண்டு இது. அவருடைய வாழ்க்கைக் கதையை அறிய விரும்பியபோது, தமிழில் அவரைப் பற்றிய நூல் கிடைக்காமல் அலைய நேர்ந்தது.
அந்த பெருமைக்குரிய தலைவரின் வாழ்க்கைக் கதையை இயன்ற அளவுக்கு எளிமையாக தொகுத்திருக்கிறேன்.
எனது நூல்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் வாசகர்களுக்கு நன்றி
அன்புடன்
ஆதனூர் சோழன்





Reviews
There are no reviews yet.