Description
எந்த ஒரு வேலையைச் செய்தாலும் ஆத்ம திருப்தி இருக்க வேண்டும்.
அந்த வகையில்தான் நான் எனது வேலைமுறையை அமைத்துக் கொள்ள முயற்சி செய்கிறேன்.
கல்லூரி நாள்களில் நான் விரும்பிய பாடம் எடுத்துப் படிக்க வாய்ப்பு மறுக்கப்பட்ட போதும், எழுத்துத் துறையை நான் விரும்பி ஏற்று அதில் சிறப்புற முயற்சி மேற்கொண்டேன்.
எனது விருப்பத்தை அறிந்த மாமா, மதுரை தினமலரில் சேர்த்துவிட்ட போதும் அதில் சிறப்புற பணிபுரிந்தேன். பல்வேறு காரணங்களால் எனது பத்திரிகை பணி தடைப்பட்டாலும், எனது திருமண நாளின் போது கவிதை நூல் வெளியிட்ட போதும் ஆத்ம திருப்தியுடன்தான் இருந்தேன்.
மீண்டும் வேலைக்குச் சென்றே ஆக வேண்டும் என்ற நிலை வந்தபோது, முரசொலியில் சேர்ந்து பணியாற்றினேன். அப்போதும் நான் சரியான பாதையில்தான் பயணம் செய்தேன்.
பின்னர், தினபூமி, சென்னை மாலைமுரசு, தீக்கதிர், தினமணி, ஜனசக்தி, மக்கள் தொலைக்காட்சி ஆகிய நிறுவனங்கள் எனது அறிவை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தின.
ஆனால், முரசொலி, தீக்கதிர் மற்றும் ஜனசக்தியில் பணிபுரியும் போது அரசியல், அறிவியல் மற்றும் சர்வதேச அரசியல் குறித்து எழுதும வாய்ப்பு கிடைத்தபோது, எனக்குள் நான் புதிதாக உணர்ந்தேன். அந்த அனுபவம், ஐந்து அறிவியல் நூல்களை எழுத வாய்ப்பளித்தது. எழுத்தாளர் சுஜாதாவின் பாராட்டுக்களைப் பெற்றுத்தந்தது.
இருந்தபோதும், எனக்குள் ஊறிக்கிடக்கும் இடதுசாரி சிந்தனைகளை புதிய கோணத்தில் வெளிக் கொண்டுவரும் வகையில் எழுதப்பட்ட இந்த நூல், இதுவரை இல்லாத அளவுக்கு லத்தீன் அமெரிக்கா குறித்து,, இடதுசாரிகளுக்கு புதிய விஷயங்களைத் தரும் என்று நம்புகிறேன்.
மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் தீவுகள் என மொத்தம் 41 நாடுகள் லத்தீன் அமெரிக்கா என்று அழைக்கப்படுகின்றன.
படிப்பதற்கு அயர்ச்சியை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டதால் முதல் பாகத்தில் 11 நாடுகளைப் பற்றிய விவரங்களை மட்டும் கொடுத்துள்ளேன்.
மக்களுக்கான ஆட்சியை ஏற்படுத்த விரும்புகிற வர்களுக்கும் நாட்டை தங்கள் எஸ்டேட் ஆக கருதி மக்களை வாட்டி வதைத்ததுடன், மக்களுக்கான அரசு அமைக்க முயற்சிப்பவர்களையும் கொன்று குவித்த கொடூரமான சம்பவங்கள் இதயத்தில் ரணத்தை ஏற்படுத்தின.
ஆனால், முன்பு வேட்டுச் சத்தம் கேட்ட நாடுகள் அனைத்தும், இப்போது ஓட்டுச் சீட்டுகளைப் பயன்படுத்தி மக்களுக்கான அரசுகளை அமைக்கும் நோக்கத்தை நிறைவேற்றி வருகின்றன.
ஆண்டாண்டுகாலமாய் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் வளங்களைக் கொள்ளையடித்த கும்பலுக்கு எதிராக குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். நாடுகளின் வளங்கள் அனைத்தும் மக்களுக்கே உரிமையாகும் வகையில் புதிய சோஷலிஸ வெளிச்சம் பரவத் தொடங்கியுள்ளது.
இந்த நூலைத் தொடர்ந்து மீதமுள்ள நாடுகளைப் பற்றியும் அடுத்தடுத்து தொகுக்க முடிவு செய்துள்ளேன். இடதுசாரி பார்வையுடன் லத்தீன் அமெரிக்க நாடுகளின் வரலாற்றைச் சொல்லும் இந்த முயற்சி எனக்கு திருப்தி அளிக்கிறது.
உங்களுக்குத் திருப்தி அளிக்கிறதா என்பதை அறிய விரும்புகிறேன்.
அன்புடன்,
ஆதனூர் சோழன்





Reviews
There are no reviews yet.