Description
மனித உடல் அற்புதமான இயந்திரம்.
இயற்கையின் இணையில்லா படைப்பு.
பிறக்கிற மனிதன் இறக்கிறான். இறப்பதற்குள் தனது இனத்தை விருத்தி செய்கிறான்.
தாயின் கருவறையில் உருவாகி மழலையாக மளமளவென்று வளர்ந்து பூமியில் ஜனிக்கிறான்.
குறிப்பிட்ட வயதுவரை வியப்பூட்டும் விதத்தில் ஆளாகிறான்.
அதன்பிறகு எவ்வளவு மாற்றங்கள். எத்தனை அனுபவங்கள்.
எல்லாமே இயற்கை நமக்கு அளித்த கொடைகள். மனித உடலின் ஒவ்வொரு அணுவையும் விஞ்ஞானிகள் நுணுக்கமாக ஆராய்ச்சி செய்கின்றனர்.
பிறக்கும் மனிதன் இறக்கும் வரை உடலில் ஏற்படும் எல்லா மாற்றங்களுக்கும் காரணம் அறிந்து வெளிப்படுத்துகின்றனர்.
மனித உறுப்புகளின் செயல்பாடுகள். அவற்றில் ஏற்படும் குறைபாடுகள். அதன் காரணமாக ஏற்படும் நோய்கள் என விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் வியப்பை அதிகரிக்கின்றன.
நோய்களை தவிர்த்து மனிதனின் வாழ்நாளை அதிகரிக்கும் வழிகளை அவர்கள் கண்டறிந்து சொல்கிறார்கள்.
ஆனால், மரணத்தை வெல்லும் வழியை இன்னும் அவர்கள் கண்டறியவில்லை.
மரணத்தை தவிர்ப்பது எப்படி? மரணத்துக்குப் பிறகு மனிதன் என்னவாகிறான்? என்பதெல்லாம் புரியாத புதிராகவே இருக்கிறது.
இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைத்துவிட்டால் இயற்கையின் மூலவேர் நமக்கு புலப்பட்டுவிடும்.
அப்படி புலப்பட்டுவிட்டால் வாழ்க்கையின் சுவாரஸ்யம் மறைந்து போகும்.
மனிதனின் முக்கியமான வேதனை முதுமை. முதுமை காரணமாக பழுதடையும் உடலுறுப்புகளை மாற்றும் வித்தையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆண் பெண் சேர்க்கை இல்லாமல் மனித உயிரை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
அச்சில் பொம்மைகளை வார்ப்பது போல, மனிதர்களை உற்பத்தி செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை.
இப்படியான சூழ்நிலையில், மனிதன் தனது முதுமையை நினைத்தும், உடலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்கள் குறித்தும் கவலைப்படுவது வீண் என்பதை வலியுறுத்தவே இந்த நூல் முயற்சி செய்கிறது.
முதுமை இனிமையானதா என்றால் முற்றிலும் ஆம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், முதுமையை இனிமையானதாக மாற்றிக் கொள்வதற்கான வழிகள் ஏராளமாக இருக்கின்றன என்பதை இந்த நூல் அடுக்குகிறது.
முதுமையிலும் இளமையை அனுபவிக்க முடியும் என்பதை வாசகர்களுக்கு இந்த நூல் உத்தரவாதப்படுத்துகிறது.
திறந்த மனதுடன் இருந்தால் நோய்களில் இருந்து தப்ப முடியும். மாதவிடாய் நின்றபிறகு பெண்கள் மனமொடியத் தேவையில்லை. தூக்கத்தின் அவசியம். தூக்கமின்மை நோயால் ஏற்படும் அவதிகளை தவிர்ப்பது எப்படி? முதுகுவலி என்றால் என்ன? கீழ் முதுகுவலி என்றால் என்ன? என்பதையெல்லாம் இந்த நூலில் உள்ள கட்டுரைகள் விரிவாக அலசுகின்றன.
அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக மனிதர்கள் படும்பாடுகளை இந்த நூல் எதிர்கொள்கிறது. அவர்களுக்கு எளிமையான உடற்பயிற்சிகளை இந்த நூல் பரிந்துரைக்கிறது.
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்தும் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டவை. இவை வாசகர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
நன்றி
அன்புடன்
ஆதனூர் சோழன்





Reviews
There are no reviews yet.