Description
இனம் என்ற பேரில் மனிதர்களை வகைபிரித்தல் தேவையில்லை என்று அறிவியல் அறிஞர்கள் இப்போது வாதிடுகின்றனர். ஏனெனில் அனைத்து மனிதர்களும் ஹோமோ சேபியன்ஸ் சேபியன்ஸ் என்ற ஒரே மனிதப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்கிறார்கள்.
இனம் என்கிற கருத்து 16 முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய குடியேற்ற நிறுவனங்களால் தோற்றுவிக்கப் பட்டன., தோல் நிறம் மற்றும் உடல் அமைப்புகளின் அடிப்படையில் இனம் பிரிக்கப்பட்டது.
அனைத்து மனிதர்களும் ஹோமோ சேபியன்ஸ் இனத்தில் இருந்து வந்தவர்களாக கூறுகிறார்கள். ஆனால், இது முதல் இனம் அல்ல. ஹோமோ ஹாபிலிஸ் தான் முதல் இனம். இது, சுமார் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றியது. அதிலிருந்து ஹோமோ எரெக்டஸ் என்ற பிரிவினர் 18 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றினர். இந்த பிரிவினர் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் பரவினார்கள்.
தேசிய இனம் என்றால் அதற்கு பொதுவான மொழி இருக்க வேண்டும் என்று இப்போது வாதாடுகிறார்கள். உலகில் ஒரே மொழி பேசும் மக்கள் எல்லோரும் ஒரே தேசிய இனம் என்று வாதாடுவது தவறான கோட்பாடு.
“தமிழ் தேசியம் என்றால் என்னவென்று தெரியுமா?” என்று பேசும் அறிவுஜீவிகள், தேசிய இனம் பற்றி தவறான நிலைப்பாடுகளை கொண்டுள்ளனர். முதலில், “இனம்“ என்ற சொல்லே தவறான அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகின்றது. தனது அடையாளத்தை முதன்மைப் படுத்துவது “இனங்கள்” மட்டுமல்ல. மதங்களும் தான்.
சில நேரம், மனிதர்கள் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே மரபினத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்குள்ளே வேறுபட்ட தேசிய இனங்கள் இருக்கலாம். இருந்து வருகின்றது என்பது தான் உலக யதார்த்தம்.“உலகம் முழுவதும் வாழும் ஆங்கிலேயர்கள் ஒரே தேசிய இனம்“ என்று கூறினால், எத்தனை அமெரிக்கர்கள் ஒப்புக் கொள்வார்கள்? என்று நினைக்கிறீர்கள்?
ஆங்கிலம் பேசும் அமெரிக்கர்கள் நிச்சயமாக இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அப்படி ஏற்க முடியாமல்தானே பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராகப் போராடி ரத்தம் சிந்தி விடுதலை பெற்றாரார்கள். ஆங்கில தேசிய இனமாக இருக்க விரும்பியிருந்தால் இன்றைக்கும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக இருந்திருக்கலாமே?
“அமெரிக்கர்கள் ஒரு தேசிய இனமா?” என்பதற்கு பதிலைக் கூறினால், தமிழ் தேசியம் பற்றிப் பேசுவது எளிதாக இருக்கும். ஏனென்றால், அமெரிக்க சுதந்திரப் போராட்டம் நடந்து, முன்னூறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் தமிழ் தேசியம் உருவானது. “தமிழர்கள் ஒரே இனம்“ எனும் தேசியவாதக் கருத்து அடிப்படையிலேயே தவறானது என்பது எனது கருத்து.
ஒரு தேசிய இனம் உருவாக ஒரு பொதுவான மொழி மட்டுமே அடிப்படை இல்லை. மதம் கூட தேசிய இனத்தை அடையாளப்படுத்தலாம். ஒரே மதத்திற்கு உள்ளேயும், மதப் பிரிவுகளை அடிப்படையாக வைத்து தேசியம் உருவாகலாம். ஐரோப்பாக் கண்டத்தில் அது நிகழ்ந்தது.
பெல்ஜியத்தை தனி தேசியமாக உலகம் ஏற்றுள்ளது. பெல்ஜிய தேசியத்தை தீர்மானித்தது கத்தோலிக்க கிறிஸ்தவ பிரிவுதான்.
ஒரு காலத்தில், பெல்ஜியம் நெதர்லாந்தின் பகுதியாக இருந்தது. ப்ராட்டஸ்டண்ட் மற்றும் கத்தோலிக்க பிரிவுகளின் முரண்பாடு பெல்ஜியத்தை பிரித்தது. கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்த பெல்ஜியர்கள் மிகப்பெரிய போரை நடத்தி தனிநாடாக பிரிந்தனர்.
நெதர்லாந்து மக்கள் பேசும் டச்சு மொழியுடன், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளைப் பேசும் மக்களும் பெல்ஜியத்தில் வாழ்கிறார்கள். மூன்று வேறுபட்ட மொழிகளை பேசும் மக்கள், பெல்ஜிய தேசிய இனமாக மாற கத்தோலிக்க மதப் பிரிவுதான் காரணமாகியது.
தேசிய இனம் என்றால் அதற்கு பொதுவான மொழி இருக்க வேண்டும் என்பதும், உலகில் ஒரே மொழி பேசும் மக்கள் எல்லோரும் ஒரே தேசிய இனம் என்பதும் தவறாகும்.
“இனம் என்ற சொல்லே தவறான அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகின்றது. “இனங்கள்” மட்டுமின்றி மதங்களும் தமது அர்த்தத்தை தவறாக பயன்படுத்துகின்றன. சில நேரம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே மரபினத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், மனிதர்களுக்குள் வேறுபட்ட தேசிய இனங்கள் இருக்கலாம். இருந்து வருகிறது என்பதுதான் உலக எதார்த்தம்.
இஸ்ரேலியர் என்றொரு இனம் கிடையாது. யூத மதத்தினர் தம்மை யூத தேசிய இனமாகக் கருதுகிறார்கள். யூதர்கள் ஒரே மொழி பேசுபவர்கள் அல்ல. ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, ரஷ்ய, அரபு மொழிகளை பேசிய அவர்கள், தாமாக விரும்பி ஹீபுரு என்ற மொழியைக் கற்றுக் கொண்டார்கள். அங்கே மொழி பின்னர்தான் வந்தது. அப்படியானால், “இஸ்ரேலியர்கள் ஒரு தேசிய இனம் இல்லையா?”
முஸ்லிம் என்ற மத அடையாளத்தின் அடிப்படையில் தான் பாகிஸ்தானிய தேசிய இனம் உருவானது. அங்கே நான்கு வேறுபட்ட மொழிகள் பேசும், நான்கு வேறுபட்ட தேசிய இனங்கள் உள்ளன. பஞ்சாபி, சிந்தி, பலுசிஸ்தானி, பஷ்டூன், பிற்காலத்தில் பிரிந்து சென்ற வங்காளியுடன், வேறு சில பழங்குடியினர் மொழிகளும் பேசப் படுகின்றன. அதனால்தான், இந்தியாவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் பேசிய உருது மொழியை, பொது மொழியாக கற்றுக் கொண்டார்கள்.
கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும், ஆங்கிலம் பேசும் பெரும்பான்மை மக்களுக்கு தேசியம் கிடையாதா? அவர்களை ஒரே ஆங்கில தேசிய இனம் என்று கூறமுடியுமா? நிஜத்தில் அவர்களது மரபினத்தை ஆய்வு செய்தால், அவர்கள் பூர்வீகத்தில் “ஜெர்மனியர்களாக” இருந்திருப்பார்கள்!
அன்புடன்
ஆதனூர் சோழன்





Reviews
There are no reviews yet.