அடுப்பில் தோசைக்கல்லை வைத்து முட்டையை உடைத்து ஊற்றுகிறாள் தலைவி…. அடுத்து மிளகுப்பொடி டப்பாவை எடுத்து மழைச்சாரல் மாதிரி ஆஃப்பாயில் மேலே தூவுகிறாள்…
அடுத்து உப்பு டப்பாவை எடுத்து தூவ முற்படும்போது, மூடி கழன்று அதிகப்படி உப்பு சிந்திவிட, கடுப்பாகி தலையிலடித்துக் கொள்ளும் தலைவி, சட்டென யோசித்து, டிவியில் தேமேயென “சிறகடிக்க ஆசை” பார்த்துக்கொண்டிருக்கும் தலைவனை அழைக்கிறாள்..
“மணாளா… அவசரமாக பாத்ரூம் செல்கிறேன்.. இந்த ஆஃப்பாயிலில் மிளகுத்தூளெல்லாம் போட்டுவிட்டேன்… கொஞ்சூண்டு உப்பு மட்டும் போட்டு, எடுத்துவிடுவீர்களோ…?!”
“அப்படியே ஆகட்டும் தேவி..!” என பொறுப்பெடுத்துக்கொள்கிற தலைவன் சிட்டிகை அளவு உப்பு எடுத்து, அதிலும் பாதியை மட்டும் தூவிவிட்டு, ஆஃப்பாயிலை இறக்குகிறான்..
பாத்ரூம்லிருந்து வெளியே வந்த தலைவி, மேற்படி ஆஃப்பாயிலை தலைவனிடம் நீட்டி ” நீங்கள் பசியாறவே இதைச் செய்தேன்… உண்டு மகிழுங்கள்..!” என தட்டை நீட்டுகிறாள்.
இன்புறு முகத்தோடு ஒரு விள்ளல் எடுத்து வாயில் வைத்த தலைவன் அதே வேகத்தில், முகம் சுளித்து துப்புகிறான்.. “அடச்சே.. இவ்ளோ உப்பு கரிக்குது… வாயில வைக்க முடியலயே..?! என்று..
“என்ன… உப்பு கரிக்குதா.. தோ.. நானும் செக் பண்றேன்” னு இன்னொரு விள்ளலை எடுத்து வாயில் போட்டு “ச்சைய்..” என துப்புகிறாள் தலைவி..
“உங்களை கொஞ்சூண்டு தானே உப்பு போடச் சொன்னேன்… எதுக்கு இவ்ளோ கொட்டி வச்சுருக்கீங்க…?! பாத்ரூம் போயிட்டு வர்றதுக்குள்ள இந்த வேலை பண்ணி வச்சுருக்கீங்க… வாயில வைக்க முடியுதா..?! ஒரு ஆஃப்பாயிலுக்கு அளவா பார்த்து உப்பு போடக்கூட துப்பில்லாத ஒருத்தரோடதான் நான் குடும்பம் நடத்தனும்னு தலையெழுத்து…!” என்று இரைந்தபடியே நகர்கிறாள் தலைவி…
“கொஞ்சம்தானே போட்டோம்.. அதுக்கே இவ்ளோ உப்பு கரிக்குமா..?! அப்போ நம்ப வீட்டு உப்பு ரொம்பவும் ஸ்ட்ராங்கா இருக்குமோ..?!.” என்று தலையை சொறிந்து கொள்ளும் தலைவன், “ஒருவேளை நாமதான் நிறைய உப்பு போட்டுட்டோம் போல..?!” என்று நினைக்கத் தொடங்குகிறான்…!
மேற்படி “இனா-வானா தலைவன்” மாதிரியான நிலைமைக்குத்தான் தமிழ்நாட்டு மக்களை வெகு திறமையாக தள்ளிவிட்டிருக்கிறது தவெக கட்சியும் அதன் தலைவர் ஜோசப் விஜயும்..
அதிமுக திமுக இணைந்த ஆட்சி முயற்சியை, தலைவன் போட்ட சிட்டிகை உப்பு அளவு தவறு என வைத்துக்கொண்டால்,
எடப்பாடியாரை ஒதுக்கிவிட்டு விஜய் சி.வி.சண்முகத்தைப் பார்த்தது, 26 அதிமுக எம்எல்ஏக்களை ஆட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்தது, எண்ணிக்கை பலத்தைக் குறைக்க ஆறு அதிமுக எம்எல்ஏக்கள் பதவி விலகியது, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட இரு தொகுதிகளிலும் அதே வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்கியது என தவெக தலைவி அள்ளிக்கொட்டிய உப்பின் அளவு எக்கச்சக்கம் இல்லையா…!?
அந்த தவறை மடைமாற்றி, அதிமுக மேலேயே அந்தப் பழியை சுமத்தும் வித்தையைத்தான் தவெக நேர்த்தியாக செய்துகொண்டிருக்கிறது..
நேற்றைய உதாரணத்தைப் பேசுவோம்…
“அதிமுகவும் திமுகவும் கூட்டணி அமைச்சு ஆட்சியைப் புடிக்க நினைச்சாங்க… அதனால அந்தக்கட்சி எம்எல்ஏக்கள் பதவி விலகி நம்பகிட்ட வந்துட்டாங்க… அவங்களுக்கு எவ்ளோ வலிச்சுருக்கும்…?! மனசு எவ்ளோ வேதனைப்பட்ருக்கும்..?!” இது விஜய்.
“ஒரு பெண் என்றும் பாராமல், என்னை மோசமாக விமர்சனம் செய்கிறார்கள்… எனக்கு மனது வலிக்கிறது…!” இது கண்ணை கசக்கிய தவெக வேட்பாளர் சத்யபாமா…
முதலில் அதிமுக-திமுக இணைந்து ஆட்சி என்றால் அதைகுறித்து கவலைப்பட வேண்டியது இரு கட்சித் தொண்டர்கள்…. நிர்வாகிகள்..!
அது உண்மையென்றால் கட்சிக்குள்ளே இருந்தபடியே எம்எல்ஏக்கள் எதிர்த்து குரல் கொடுத்திருக்கலாம்… ஆதாரம் இருந்தால் பொதுவெளியில் பேசியிருக்கலாம்.. பொதுக்குழுவில் எடப்பாடியார் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானத்தைக் கூட முன்மொழியலாம்.. இறுதி முயற்சியாக அம்மையார் ஜெயலலிதா சமாதியில் போய் தியானம் கூட பண்ணியிருக்கலாம்…!
அதைவிடுத்து மக்கள் கொடுத்த பொறுப்பை தேர்தல் மை காய்வதற்குள் உதறித்தள்ளினால் மக்களுக்கும், களத்தில் இறங்கி வேலைசெய்த அதிமுகவினருக்கும் கோபம் வராதா…?! விமர்சனம் செய்ய மாட்டார்களா..?!
அந்த விமர்சனம் வலிக்கிறது என்றால் அது யார் தேடிக்கொண்ட வினை…?! விமர்சனம் செய்யும் சிட்டிகை உப்பு உங்களுக்கு கரிக்கிறது என்றால், கழுதை பேரம் நடத்தி கட்சித்தாவிய அதிகப்படி உப்பு கரிக்காதோ..?!
இந்த பிரச்சனை மட்டுமல்ல.. தவெக தொடக்கத்திலிருந்தே இதே உத்தியைத்தான் பின்பற்றுகிறது…
யார் மீதும் பழி சுமத்தாமல், கூட்ட நெரிசல் விபத்து என்ற அளவில் உலகமே கருத்து சொன்ன கரூர் சம்பவத்தில் “என் மேல பழியைத் தூக்கிப் போட்டாங்க..!” என்று வீடியோ வெளியிட்டு திமுக மீது பழியைத் தூக்கிப்போட்டதிலிருந்து……
யோசித்துப் பார்த்தால்…. இன்று வரை அதே கேவல உத்திதான்….!


