அறிவியல்

மழையைப் பற்றிய சில உண்மைகள்! – ஆதனூர் சோழன்

பூமியின் நீர் ஆதாரம் மழை என்று சொல்லலாமா?

மழை தானாகவே உற்பத்தி ஆகி பூமியில் கொட்டுகிறதா?

பூமியில் உள்ள தண்ணீர் ஆவியாகித்தான் மழையாக கொட்டுகிறது எனும்போது, பூமியில் ஏற்கெனவே தண்ணீர் எப்படி வந்திருக்கும்? நிலத்தடியில் நீரோடைகளும், ஏரிகளும், நன்னீர் கடல்களும் இருப்பதாக கூறப்படுகிறதே எப்படி?

எப்படியாக இருந்தாலும் மழை என்ற நீர் சுழற்சி பூமியின் உயிர்களையும், பயிர்களையும் வாழவைக்கும் மாமருந்து என்பது தவிர்க்க முடியாத உண்மை.

பூமியின் மீதும் அடியிலும் உள்ள நீர் ஆவியாக சுத்தமான தண்ணீராக வானிலிருந்து கொட்டும் மழை நீர் ஏரிகளையும், அணைகளையும் நன்னீரால் நிரப்புகிறது. மழையைப் பற்றிய சில உண்மைகளை அறிவோம்…

மண்வாசனை!

மழையின் வாசனைக்கு என்ன பெயர் தெரியுமா? மண்வாசனை என்போம் நாம். பெட்ரிகோர் என்று இரண்டு கிரேக்க வார்த்தைகள் இணைந்து ஒரு சொல் வழங்குகிறது. பெட்ரிகோர் எனப்படும் அந்த கிரேக்க வார்த்தையும் நமது மண்வாசனைக்கு இணையானதுதான்.

பெட்ரோஸ் என்றால் கிரேக்கத்தில் கல் என்று அர்த்தம். ரிகோர் என்றால் கிரேக்க கடவுள்களின் நரப்புகளில் ஓடும் ஒரு திரவத்தின் பெயர் ஆகும்.

பொதுவாக நீருக்கு வாசனை கிடையாது. ஆனால், வறட்சி முடிந்து பெய்யும் மழை நீர் மண் அல்லது பாறையின் மீது விழும்போது, ஆக்டினோபாக்டீரியா எனப்படும் நுண்ணுயிரிகள், ஜியோஸ்மின் என்ற ஒரு கரிமச் சேர்மத்தை காற்றில் வெளியிடுகின்றன.

நீரில் கலக்கும் ரத்தத்தின் வாசனையை சுறாக்கள் எவ்வளவு துல்லியமாக நுகர்கின்றனவோ, அதைவிட துல்லியமாக மழை உருவாக்கும் வாசனையை நுகர்வதில் மனிதர்கள் ஆற்றல் பெற்றவர்கள்.

இந்த உணர்திறன்தான் வேட்டையாடி உணவு சேகரித்த நமது முன்னோர் நீர் ஆதாரம் இருக்கும் இடங்களைத் தேடி கண்டுபிடிக்க மிகவும் உதவியாக இருந்ததாக அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

உறைபனியே மழையாகிறது!

நீராவிதான் மழையாகிறது என்கிறோம். பிறகு உறைபனியே மழையாகிறது என்கிறோம். இதில் எது உண்மை என்ற சந்தேகம் வருகிறது அல்லவா?

இரண்டுமே உண்மைதான். பூமியிலிருந்து சூரிய வெப்பத்தால் ஆவியாகும் நீர் மேலே எழும்புகிறது. மேலே செல்லச் செல்ல வெப்ப நிலை குறைகிறது. எனவே குறிப்பிட்ட தூரத்தில் நீராவி உறைந்து பனியாகிறது.

பின்னர் அதாவது தூசுப்படலத்தில் பனித்துளிகளாக மாறுகின்றன. அவை பூமியை நோக்கி பயணிக்கும்போது மழைப்பொழிவு உருவாகிறது. மேலிருந்து வரும்போது அவை பனிக்கட்டியாக மாறி பனியாகவே பொழிகின்றன. அந்தப் பனிக்கட்டிகள் பூமிக்கு அருகில் வரும்போது, வெப்பமான காற்றைச் சந்திக்கும்போது உடைந்து ஆலங்கட்டி மழையாகவோ, மழையாகவோ மாறுகின்றன.

அண்டார்டிகாவில் மழையே பெய்யாத இடம்

உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது என்றால் சஹாரா பாலைவனம் என்றோ அரேபியப் பாலைவனம் என்றோ கோபி பாலைவனம் என்றோ கூறுவது தவறு..

பிறகு எது என்கிறீர்களா? உண்மையில், அந்த மூன்று பாலைவனங்களும் சேர்ந்தால்கூட அண்டார்டிக் துருவப் பாலைவனத்தின் பரப்பளவை தொட முடியாது. அங்கே மணல் இல்லையே பிறகு எப்படி பாலைவனம் என்கிறீர்கள்? மணல் குன்றுகளோ, கற்றாழைகளோ இருந்தால்தான் பாலைவனம் என்று இல்லை.

பாலைவனம் என்றால் வறண்ட காலநிலை அடிப்படையில்தான் கணக்கிடப்படுகிறது. அண்டார்டிகா முழுவதும் மிகக்குறைவாகவே மழை பொழிகிறது. அதிலும் அங்குள்ள மெக்முர்டோ என்ற வறண்ட பள்ளத்தாக்குகளில் 20 லட்சம் ஆண்டுகளாக மழையே பெய்திருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். ஆனால், இந்த பள்ளத்தாக்கின் மேற்பரப்பு செவ்வாய்க் கோளின் மேற்பரப்புக்கு நிகராக இருப்பதாக கூறுகிறார்கள். செவ்வாய் கோளும் மழைப்பொழிவே காணாத ஒரு பாலைவனக் கோளாகும்.

வெள்ளியில் கந்தக அமில மழை!

செவ்வாய்க் கோள் வறண்ட கோளாக இருக்கலாம். ஆனால் வெள்ளிக் கோள் அப்படி அல்ல. வெள்ளியின் காற்று மண்டலத்தில் கந்தக டை ஆக்ஸைடு நிரம்பியிருக்கிறது. கந்தகம் அரிக்கும் தன்மை உடையது. கந்தக டை ஆக்ஸைடு கலந்த அமில மழை வெள்ளிக் கோளில் பொழிகிறது.  

வெள்ளிக் கோளில் பெய்யும் அமில மழையின் pH மதிப்பு 1 அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, உயிர்கள் வாழ முடியாத வெப்பம் வெள்ளி கோளில் நிலவும். எனவே வெள்ளிக் கோளுக்கு மனிதர்கள் பயணிக்கவே முடியாது.

மழைத்துளிகளும் கண்ணீர்த் துளிகளும்!

பொதுவாக மழைத்துளிகளை வரையும்போது, ​​ நீல நிறத்தில்  கண்ணீர்த் துளி வடிவில் இருப்பது போல வரைவதே வழக்கம்.

ஆனால், மேகங்களில் நீர்த்துளிகள் மிதக்கும்போது, கோள வடிவத்தில் இருக்கின்றன. துளியின் அளவு அதிகரிக்கும்போது, பூமியை நோக்கி விழுகின்றன. அப்படி பூமியை நோக்கி வரும்போது, வழியில் மற்ற துளிகளுடன் மோதுகின்றன.

அப்போது, நீர்த்துளியின் அடிப்பகுதி காற்றின் எதிர்ப்பை எதிர்கொள்கிறது, அதாவது நீர்த்துளியின் அடிப்பகுதியும் பக்கவாட்டுப் பகுதியும் காற்றால் உரசப்படுகின்றன. எனவே, அந்த நீர்த்துள் ஒரு ஜெல்லி பீன் வடிவத்திலோ, நாசா சொல்வதைப் போல ஹாம்பர்க் பன் வடிவத்திலோ மாறுகின்றன.

இதையடுத்து மழைத்துளி 4 மில்லிமீட்டர் அளவுக்கு வளரும்போது ஒரு மெல்லிய குடைய வடிவமாக மாறுகிறது என்கிறார்கள். இறுதியில் அது சிறிய கோளத் துளிகளாகப் பிரிவதாகவும் கூறுகிறார்கள்.

1 ஏக்கர் நிலத்தில் பெய்யும் 1 அங்குல மழையின் எடை எவ்வளவு தெரியுமா?

மழை பெய்யும் அளவை மில்லி மீட்டர், செண்டி மீட்டர், அங்கும் என்ற கணக்கில் சொல்வார்கள். நமக்கு பொதுவாக ஒரு அங்குல மழை என்பது சாதாரணமாக தெரியும்.

சில இடங்களில் ஆண்டுக்கு 460 அங்குலம் மழை பெய்வதாக செய்திகள் வரும். அப்படி இருக்கும்போது ஒரு அங்குலம் என்பது பெருசா தெரியாது. ஆனால், அமெரிக்க புவியியல் மையத்தின் ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா?

1 ஏக்கர் நிலத்தில் பெய்யும் 1 அங்குல மழை என்பது சுமார் 113 டன்கள் எடை இருக்கும் என்கிறது. இதை எளிமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமா?

அதாவது, 1 சதுர மைலில் 640 ஏக்கர் இடம் உள்ளது, அதாவது 1 சதுர மைலில் பெய்யும் 1 அங்குல மழையின் அளவு 1 கோடியே 70 லட்சம் கேலன்களுக்கும் அதிகமான தண்ணீர் ஆகும்.

உதாரணமாக, சில கணக்குகளின்படி, ஒவ்வொரு நிமிடமும் பூமியில் சராசரியாக 100 கோடி டன் எடை அளவுக்கு மழை பெய்கிறது.

காலநிலை மாற்றத்தால் இந்த நிலை மாறக்கூடும். புவி வெப்பமடைவதால் காற்று மண்டலத்தில் அதிக நீர் ஆவியாகும், மேலும் அந்த கூடுதல் ஈரப்பதம் அடிக்கடி “கனமழைக்கு” வழிவகுக்கும்.

இது மண் அரிப்பை ஏற்படுத்தி, வெள்ள அபாயத்தை அதிகரிக்கும் என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *