திமுகவுக்காக உழைப்பவர்கள் அதிலும் எதையும் எதிர்பாராமல் உழைப்பவர்களால் மட்டுமே திமுக உயிர்த்திருக்கிறது. அப்படிப்பட்டவர்களை மதிக்கிற நிர்வாகிகள்தான் குறைந்துகொண்டே போகிறார்கள். கட்சிக்காகவும் தலைவருக்காகவும் உயிரைத் தருகிற ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட உடன்பிறப்பு ஒருவரின் கஷ்டமான காலகட்டத்தில் கட்சிக்காரர்கள் கவனிக்கவில்லை என்று வெளிநாட்டில் வாழும் அவருடைய மகன் Joel Jeyasekharan வருந்தி பதிவு இட்டிருந்தார்.
அந்தப் பதிவு முகநூலில் வைரல் ஆகியது. நாமும்கூட அதை உதயமுகம் இணையதளத்தில் பதிவு செய்தோம். இதையடுத்து அந்தப்பதிவு தலைமைக் கழகத்துக்கு எட்டி, உதயநிதியின் பார்வைக்கு சென்றுள்ளது. அதைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருக்கும் அந்த கழகத் தோழருக்கு திமுகவினர் ஆறுதலாக உடன்நிற்கத் தொடங்கினர்… உதயநிதி நேரில் சந்திப்பதாக தொலைபேசியில் உறுதி அளித்திருக்கிறார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து பதிவிட்ட உடன்பிறப்பு கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவித்ததுடன் ஒரு வேண்டுகோளையும் விடுத்திருக்கிறார். அவருடைய அந்தப் பதிவும் கழகம் கவனித்து செயல்படுத்த வேண்டிய பதிவாக இருப்பதால் அதையும் உதயமுகம் பதிவு செய்கிறது…
“நன்றியும்… ஒரு வேண்டுகோளும்…
என் முந்தைய பதிவைத் தொடர்ந்து, அண்ணன் ராஜலிங்கம் அவர்கள் பகிர்ந்த பதிவையும், அதற்குப் பிறகு நடந்த நிகழ்வுகளையும் பார்க்கும்போது, முதலில் என் தந்தைக்காக பிரார்த்தனை செய்தும், நலம் விசாரித்தும், எங்களுக்கு ஆதரவாக நின்றும் கொண்டிருக்கும் அனைத்து கழகத் தோழர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று என் தந்தை கண் திறந்து பேசினார், அவருக்கு இன்னொரு intervention தேவைப்படலாம் ஆனால் இப்போது அவர் நலமாக இருக்கிறார்.. ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்ட மிக நீண்ட மனச்சோர்வுக் காலத்திற்குப் பின் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். 2011 தேர்தல் முடிவுகளின் போது, திமுகவால் எதிர்க்கட்சி இடத்த தக்கவைக்க முடியாததால் என் நண்பரின் தாத்தா இறந்துவிட்டார்.அந்த வயதில் என்னால் அதை நம்ப முடியவில்லை, ஆனால் இந்த வயதில் அந்த வலியின் தீவிரத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
என் தந்தையின் நிலைமையைப் பற்றி உதயநிதி ஸ்டாலின் அண்ணன் அவர்களின் அலுவலகத்திலிருந்து தொலைபேசி வந்தது என்று சொன்னபோது, என் தந்தை மிகவும் உணர்ச்சிவசப்பட்டார், உண்மையில் அது அவருக்கு வலிமையையும் மகிழ்ச்சியையும் அளித்தது.
அத்துடன், உதயநிதி ஸ்டாலின் Udhayanidhi Stalin அண்ணன் அவர்கள் என் அம்மாவிடம் தொலைபேசியில் பேசி, சட்டமன்ற கூட்டம் முடிந்த பிறகு எங்கள் வீட்டிற்கு நேரில் வந்து என் தந்தையைப் பார்ப்பதாக உறுதியளித்திருக்கிறார்.
இன்று அவருடைய அலுவலகத்திலிருந்தும், கழகத்தைச் சேர்ந்த அன்புள்ளவர்களும் வந்து என் தந்தையை சந்தித்துச் சென்றார்கள்.
என் அவசரகால சேமிப்பாக வைத்திருந்த ரூ.4 லட்சத்தை ஏற்கனவே என் தந்தையின் மருத்துவச் செலவுக்காக அனுப்பியுள்ளேன்.
மேலும், என் தந்தை பல தசாப்தங்களாக இணைந்து பணியாற்றிய முன்னாள் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் இ. கருணாநிதி அவர்கள் நேரில் வந்து, மருத்துவச் செலவிற்காக உதவிக்கரம் நீட்டியிருக்கிறார்.
அவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் முந்தைய பதிவு கோபத்தில் எழுதப்பட்டதாக சிலர் நினைத்திருக்கலாம்.
ஆனால் அது ஒரு மகனின் வலி.
இன்று அந்த வலிக்கு மத்தியில், கழகத்திலிருந்து வந்த அக்கறையையும் ஆதரவையும் என் தந்தை உணர்ந்திருக்கிறார்.
அதற்காக நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
எனக்கு தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என் தந்தையின் உடல்நிலை குறித்து விசாரித்த ஒவ்வொருவருக்கும் நன்றி.
குறிப்பாக, உதயநிதி ஸ்டாலின் அண்ணன் அவர்களுக்கும், அவரது அலுவலகத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றி.
அதே நேரத்தில், நான் முன்வைத்த கோரிக்கையை மீண்டும் ஒருமுறை பணிவுடன் வைக்கிறேன்.
இந்த சம்பவம் ஒரு குடும்பத்தோடு முடிந்து விடக்கூடாது.
ஒவ்வொரு கழகத் தொண்டருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கும் ஒரு பிரத்யேக திட்டத்தை கழகம் உருவாக்க வேண்டும்.இலவசமாக அல்ல, மாறாக ஆண்டு அல்லது மாதச் சந்தாக் கட்டணங்கள் மூலம்.
மேலும், ஒவ்வொரு தொகுதியிலும் மருத்துவ அவசரநிலைகளில் கழகத் தொண்டர்களுக்கு உடனடி உதவி கிடைக்கும் வகையில் ஒரு பிரத்யேக உதவி எண் (Helpline) அமைக்க வேண்டும்.
இன்று என்னால் முடிந்தது.
நான் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்ப முடிந்தது.
ஆனால் ஒரு சாதாரண ஏழைத் தொண்டன் இதே சூழ்நிலையில் சிக்கும்போது?
அவருக்கு கழகம் துணையாக இருக்க வேண்டும்.
“நான் கழகத்திற்காக இருக்கிறேன்; கஷ்டத்தில் கழகம் எனக்காக இருக்கிறது” என்ற நம்பிக்கை ஒவ்வொரு தொண்டனுக்கும் இருக்க வேண்டும்.
அதுதான் உண்மையான “உடன்பிறப்பு”.
என் தந்தை இன்னும் சிகிச்சையில் இருக்கிறார்.
அவர் முழுமையாக குணமடைந்து வீட்டிற்கு திரும்ப வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறோம்.
உங்கள் அனைவரின் பிரார்த்தனையும், அன்பும், ஆதரவும் எங்களுக்கு மிகப்பெரிய பலம்.
என் தந்தைக்காக பிரார்த்தனை செய்த ஒவ்வொரு கழக உடன்பிறப்புக்கும் என் குடும்பத்தின் சார்பில் நன்றி.
குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் அண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
நன்றி.”
– உடன்பிறப்பு.



