Trending - அறிவியல்

உலகின் மிகப்பழமையான அமைதி உடன்பாடு – ஆதனூர் சோழன்

நமது காலத்தில் எத்தனையோ அமைதி உடன்படிக்கைகளை பார்த்திருக்கிறோம். ஆனால் உலகின் மிகப் பழமையான அமைதி உடன்படிக்கை எது தெரியுமா?

3,400 ஆண்டுகள் பழமையான உடன்படிக்கை அது. அந்த உடன்படிக்கை கல்வெட்டின் ஒரு துண்டு பகுதியை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருப்பதாக துருக்கி நாட்டின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது.

இநத் உடன்படிக்கை ‘காடேஷ் உடன்படிக்கை’ (Treaty of Kadesh) என்று அழைக்கப்படுகிறது. கி.மு. 1269-ஆம் ஆண்டு வாக்கில் எகிப்திய மன்னரான இரண்டாம் ராமேசெஸ் (Ramesses II) மற்றும் ஹிட்டைட் மன்னரான மூன்றாம் ஹட்டுசிலி (Hattusili III) ஆகியோருக்கு இடையே கையெழுத்தானது.

இந்த உடன்படிக்கை கல்வெட்டின் பிற துண்டுகள் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தாலும், இந்த புதிய துண்டுப் பகுதியானது துருக்கியின் வட-மத்தியப் பகுதியில் உள்ள ஹட்டுஷா (Hattusha) என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டது.

“அனடோலியாவின் மண்ணில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான அமைதிக்கான தடயங்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம்,” என்று துருக்கியின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரான மெஹ்மெட் நூரி எர்சோய் செப்டம்பர் 21 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புதிதாகக் கண்டறியப்பட்ட கியூனிஃபார்ம் (cuneiform) எழுத்துமுறை கொண்ட அந்தப் கல்வெட்டுத் துண்டுப் பகுதியில், அகதிகளை நடத்தவேண்டிய முறைகள் தொடர்பான உடன்படிக்கை வாசகங்கள் இடம்பெற்றுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“மனித உயிர்களையும் கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டிய நமது பொறுப்பை இது நமக்கு நினைவூட்டுகிறது,” என்று அமைச்சர் எர்சோய் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *