Trending - Uncategorized - அறிவியல்

தொடக்க கால ஒலிம்பிக் வரலாறு – ஆதனூர் சோழன்

மத்திய தரைக்கடலில் பால்கன் நாடுகளுக்கு கீழே அமைந்திருக்கிறது கிரீஸ் தீவு. 

ஒரு காலத்தில் கிரேக்கம் என்று அழைக்கப்பட்ட இந்தத் தீவு உலகின் மிகப்பெரிய பேரரசாக திகழ்ந்தது.

ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா என பல்வேறு பகுதிகளிலும் இந்தப் பேரரசின் எல்லை பரவிக்கிடந்தது.

கிரீஸ் தீவின் நில அமைப்பு பசுமையானது அல்ல. 

ஆனால் கிரீஸ் தீவின் தன்மைக்கு மாறாக ஒலிம்பஸ் என்ற மலைக்குன்று பசுமை நிறைந்ததாக இருந்தது.  அந்த மலையில் இருந்துதான் கிரேக்க கடவுளர்கள் உலகை ஆட்சி செய்வதாக கிரேக்கர்கள் நம்பினர்.  எனவே அந்த மலையில் அடிவாரத்தில் ஒலிம்பியா என்ற கிராமத்தை அமைத்தனர்.  கிரேக்கர்களின் தலைமைக் கடவுள் ஜீயெஸ் என்று அழைக்கப்பட்டார்.

 டைட்டன் குரோனஸ் ஜீயெசின் தந்தை ஆவார்.  புனிதமான மலை என்று கருதப்பட்ட ஒலிம்பஸ் மலையின் அடிவாரத்தில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் எப்போது தொடங்கின என்று சரியான பதிவு இல்லை.

ஒலிம்பியா கிராமம் மரங்களும், பசுமையான சமவெளிகளும் நிறைந்து செழிப்பான பிரதேசமாக இருந்தது.  இந்தக் கிராமத்தில் ஒலிம்பிக் போட்டியை யார் தொடங்கி வைத்தது என்பதற்கு புராண கதைகள் மட்டுமே வழக்கத்தில் உள்ளன.

ஜீயெஸ் கடவுள் குழந்தையாக இருந்தபோது அவருடைய பாதுகாவலர்கள் ஓட்டப் பந்தயங்களை நடத்தியதாக ஒரு கதை இருக்கிறது.

தனது தந்தை குரோனஸை வெற்றி கொண்ட அடையாளமாக கடவுள் ஜீயெஸ் முதன் முதலில் ஒலிம்பிக் போட்டியை தொடங்கி வைத்ததாக இன்னொரு கதை இருக்கிறது.

உலகை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக தந்தையுடன் ஜீயெஸ் கடவுள் போரிட்டார் என்று கூறப்படுகிறது. 

ஆசியா மைனரில் உள்ள லிடியா தேசத்து இளவரசன் பெலோப்ஸ். இவர், பைஸா நகர மன்னரான ஒனோமஸின் மகள் ஹிப்போடாமியாவை திருமணம் செய்ய விரும்பினார். பெலோப்ஸ் மட்டுமின்றி, ஹிப்போடாமியாவை மேலும் பல மன்னர்களும் வீரர்களும் விரும்பினர். அவர்களுக்கு ஒனோமஸ் ஒரு சவால் விடுத்தார்.

சாரட் பந்தயத்தில் தன்னை ஜெயிப்பவருக்கே தனது மகளைத் திருமணம் செய்து தரமுடியும் என்று ஒனோமஸ் அறிவித்தார்.

இந்தப் பந்தயத்தில் அவரிடம் பலர் தோற்றனர். தோற்றவர்களின் தலை சீவப்பட்டது. அந்தத் தலைகளை தனது அரண்மனையில் அலங்காரப்  பொருட்களாக அடுக்கி வைத்தார் ஒனோமஸ்.

இந்நிலையில்தான் பெலோப்ஸ் ஒனோமஸை பந்தயத்தில் சந்திக்க தயாரானார். ஆனால், தோற்றுவிட்டால் உயிரை இழக்க நேரும் என்பதால் தனது சாரட்டை ஓட்டும் மிர்ட்டிலோஸுடன் சேர்ந்து ஒரு தந்திரம் செய்தார் பெலோப்ஸ்.

ஒனோமஸின் சாரட்டில் இருந்த வெண்கல அச்சாணியை கழற்றிவிட்டு, அதற்குப் பதிலாக மெழுகால் செய்த அச்சாணியை மாட்டினர். பந்தயம் தொடங்கியது. சாரட்டுகள் இரண்டும் சீறிப் புறப்பட்டன. ஆனால், வண்டி ஓடும் வேகத்தில் ஒனோமஸின் சாரட்டில் இருந்த மெழுகு அச்சாணி உருகியது. சக்கரம் கழன்று ஓடியது. மன்னர் ஒனோமஸ் உயிரிழந்தார். அவரது மகளை பெலோப்ஸ் திருமணம் செய்தார்.

இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடங்கிவைத்தார் என்றும், ஒனோமஸின் இறுதி நிகழ்ச்சிக்காக ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடங்கிவைத்தார் என்றும் இருவிதமான கதைகள் இருக்கின்றன. 

கிரேக்க கலாச்சாரத்தில் மத நிகழ்ச்சிகளின்போது, தடகள விளையாட்டுக்கள் இடம் பெறுவது தொடக்க காலத்திலிருந்தே வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. 

கிரேக்கத்தின் புகழ்பெற்ற போர் வீரர் அச்சிலஸ்.  இவரது நண்பர் பாட்ரோக்ளஸ். இவர் இறந்தவுடன் இறுதி நிகழ்ச்சியின் போது விளையாட்டுக்களை நடத்தும்படி அச்சிலஸ் உத்தரவிட்டார் என்று ஒரு கதை இருக்கிறது.

சாராட் பந்தயம், ஓட்டப் பந்தயம், தட்டு எறிதல், மல்யுத்தம், குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுக்கள் பட்ரோக்ளஸ்சின் இறுதி நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்டன. 

முதல் ஒலிம்பிக் போட்டி கி.மு.776ஆம் ஆண்டு தொடங்கி இருக்கலாம் என்று குறிப்புகள் அடிப்படையில் நம்பப்படுகிறது. 

மேலே சொன்ன கதைகள் தவிர வேறு சில நம்பக்கூடிய கதைகளும் உலவுகின்றன.  கிரீஸ் தீவில் எலிஸ் என்ற பகுதி உள்ளது.  இதன் அரசராக இபிடோஸ் என்பவர் பதவி வகித்தார்.  இவர் கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.  போர்களில் இருந்து தனது மக்களை பாதுகாக்க விரும்பிய இபிடோஸ், டெல்பி மன்னரான பிதியாவுடன் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டார். 

கிரேக்க கடவுளர்களின் முன்னிலையில் விளையாட்டுக் களை நடத்தி அதன் மூலம் சமாதானத்தை நிலவச் செய்வது என்று இருவரும் ஒப்புக்கொண்டனர். 

அப்போது இருந்து ஸ்பார்ட்டா தேசத்தைச் சேர்ந்த ஆலோசகர்கள் யுத்தத்தை நிறுத்தினர்.  ஆக,  முதல் ஒலிம்பிக் கி.மு. 919ஆம் ஆண்டு தொடங்கியதாக இந்தக் கதை தெரிவிக்கிறது.  அப்போது நடைபெற்ற ஒரே போட்டி ஓட்டப்பந்தயம் மட்டுமே.  அதற்கு ஸ்டேடியன் என்று பெயரிட்டு இருந்தனர். 190 மீட்டர்கள் ஓடும் இந்த போட்டியின் பெயராலேயே ஸ்டேடியம் என்ற வார்த்தை உருவானதாக கூறப்படுகிறது. 

அது என்ன 190 மீட்டர்கள்?

மாவீரன் கெர்குலிசின் காலடி அளவில் இந்த தூரம் நிர்ணயிக்கப்பட்டதாக தனி கதை வழக்கில் உள்ளது. 

ஜீயெஸ் கடவுளின் மகனாக கருதப்படுகிறவர் ஹெர்குலிஸ். இவர், எலிஸ் மன்னரான ஆஜியெஸுக்கு சொந்தமான குதிரைத் தொழுவங்களையும், மாட்டுத் தொழுவங்களையும் சுத்தம் செய்து தர ஒப்புக் கொண்டார்.

இதற்காக, ஆஜியெஸுக்கு சொந்தமான கால்நடைகளில் 10ல் ஒரு பங்கை கூலியாகத் தரவேண்டும் என்று கேட்டார். அதற்கு ஆஜியெஸ் சம்மதித்தார்.

இதையடுத்து, ஆஜியெஸின் தொழுவங்கள் அனைத்தையும் கழுவுவதற்காக, கிளாடியோஸ் மற்றும் அல்பியோஸ் நதிகளை திருப்பிவிட்டார் ஹெர்குலிஸ். தொழுவங்கள் சுத்தமடைந்தன. ஆனால், ஆஜியெஸ் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

ஆத்திரமடைந்த ஹெர்குலிஸ் ஏலிஸ் திரும்பி, ஆஜியெஸுடன் சண்டையிட்டார். அவரைத் தோற்கடித்து, தனது தந்தை ஜீயெஸுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை தொடங்கிவைத்தார் என்று கிரேக்க கவிஞர் பிந்தர் எழுதியுள்ளார்.

மல்யுத்தம் செய்வது எப்படி என்று கிரேக்கர்களுக்கு ஹெர்குலிஸ்தான் சொல்லிக் கொடுத்தாராம். அதுமட்டுமின்றி, ஓட்டப்பந்தயத்துக்கான தூரத்தை தனது காலடிகளால் அளந்து நிர்ணயித்ததும் ஹெர்குலிஸ்தான் என்று கிரேக்க கதைகள் கூறுகின்றன.

அப்படி வந்ததுதான் 192 மீட்டர் என்ற அளவு. ஆனால் இப்போது அந்த வழக்கம் மாறிவிட்டது. 

ஒலிம்பியா கிராமத்தில் ஜீயெஸ் கடவுளுக்கு ஒரு சரணாலயம் அமைக்கப்பட்டிருந்தது.  மிக அழகான அந்தச் சரணாலயத்தில் 12 மீட்டர் உயரத்தில் ஜீயெஸ் கடவுளின் சிலை நிறுவப்பட்டிருந்தது.  புராதன 7 உலக அதிசயங்களில் இந்தச் சிலையும் ஒன்றாக இடம் பெற்றிருந்தது. 

ஜீயெஸ் கடவுளுக்குச் சொந்தமான சரணாலயத்திற்கு அட்லிஸ் என்று பெயரிடப்பட்டிருந்தது.  இந்தச் சரணாலயத்தை கைப்பற்றுவதில்  பல்வேறு குழுக்கள் சண்டையிட்டுக் கொண்டனர்.  சரணாலயத்தை கைப்பற்றி விட்டால் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் அதிகாரம் தங்களுக்கு கிடைக்கும் என்று ஒவ்வொரு குழுவினரும் நினைத்தனர்.  இதை கவுரமாகவும் அரசியல் அதிகாரமாகவும் கருதினர்.

கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர் பவுசானியா.  இவர் ஏதேன்ஸ் உள்ளிட்ட எல்லா பகுதிகளுக்கும் பயணம் செய்து ஏராளமான குறிப்புக்களை எழுதி வைத்துள்ளார்.  கி.மு.668ஆம் ஆண்டு பைசா நகரத்தைச் சேர்ந்தவர்கள் எலிஸ் பிரதேசத்தையும் ஜீயெஸ் கடவுளின் சரணாலயத்தையும் கைப்பற்றியதாக பவுசானியா எழுதி வைத்துள்ளார். 

ஒரு ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை பைசா நகர வாசிகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் நடத்தியதாக பவுசானியா கூறியுள்ளார்.  ஆனால் அடுத்தாண்டு எலிஸ் நகர வாசிகள் போட்டிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏதென்ஸ் எழுத்தாளர் ஜெனோபான்.  இவர் கி.மு.364ஆம் ஆண்டு நடைபெற்றதாக ஒரு சம்பவத்தை பதிவு செய்துள்ளார்.  பெண்டத்லான் விளையாட்டின் இறுதிப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த போது எலிஸ் நகரவாசிகள் மீது பைசா நகரவாசிகள் திடீர் தாக்குல் நடத்தியதாக அவர் கூறியுள்ளார்.  அதன்பிறகு மறுபடியும் இந்தப் போட்டிகள் பைசா நகரவாசிகளின் கட்டுப்பாட்டிற்கு வந்ததாக கூறியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளைப் பற்றி விதவிதமான, சுவாரஸ்யமான எத்தனையோ கதைகள் நிலவினாலும், போட்டிகள் நடந்தது என்னவோ நிஜம்தான் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.  இப்போதும் ஒலிம்பியா கிராமத்தில் தொல்லியல் துறையினர் பல்வேறு சிதிலங்களை கண்டுபிடித்துள்ளனர். 

முதல் 13 ஒலிம்பிக் போட்டிகளில் ஓட்டப்பந்தயம் மட்டுமே இடம்பெற்றிருந்தது.  காலப்போக்கில் நீண்டதூர ஓட்டப்பந்தயங்களும் தனித்தனி தடகள போட்டிகளையும் படிப்படியாக இணைத்துக் கொண்டனர்.  பெண்டத்லானும், மல்யுத்தமும் 18ஆவது ஒலிம்பிக்கில்தான் இணைக்கப்பட்டன. 

இந்தப் போட்டிகளை ஒலிம்பியா கிராமத்தில் நடத்தியதற்கு என்ன காரணம் என்று ஒரு கேள்வி எழும்.  கிரேக்க சாம்ராஜ்யத்தில் மையமாக ஒலிம்பியா கிராமம் திகழ்ந்தது.  அதே சமயம் கடலோரத்திற்கு அருகே இது அமைந்திருந்தது. 

ஒலிம்பஸ் மலையிலிருந்து ஆட்சி செய்யும் கிரேக்கர்களுக்கு மரியாதை செலுத்துவது முக்கிய நோக்ககாக கூறப்படுகிறது.  ஆனால் கிரேக்க பேரரசின் ஆட்சிக்கு உட்பட்ட பல்வேறு நாடுகளில் இருந்து விளையாட்டு வீரர்கள் எளிதில் கலந்து கொள்வதற்கு வசதியாக இந்த நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 

கிரேக்க குடியேற்ற நாடுகளான ஸ்பெயின், கருங்கடல் ஓர நாடுகள், எகிப்து போன்றவற்றிலிருந்து தடகள வீரர்களும் பார்வையாளர்களும் கப்பல்களில் ஒலிம்பியா கிராமத்திற்கு எளிதில் வந்து சேர முடிந்தது. 

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் போது சுற்றி உள்ள நாடுகள் சண்டை நிறுத்தம் அறிவிக்க வேண்டும்.   ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன் கிரேக்கர்கள் தாங்களாகவே முன்வந்து சண்டை நிறுத்தத்தை பிரகடனம் செய்வார்கள்.  ஒலிம்பிக் போட்டிகளுக்கு தடகள வீரர்கள் பாதுகாப்பாக வந்து சேருவதற்கு இந்த பிரகடனம் உதவியாக இருந்தது.

இந்த சண்டை நிறுத்தத்தை யாரும் மீறக்கூடாது என்று போட்டிகளின் நடுவர்கள் கண்டிப்பான முறையில் உத்தரவிடுவார்கள்.  சண்டை நிறுத்தத்தை மீறுகிறவர்கள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும். 

ஒலிம்பிக் போட்டிகள் நடந்து கொண்டிருந்த போது ஸ்பார்ட்டா தேசத்தவர் எலிஸ் பிரதேசத்திற்குள் படையெடுத்தனர்.  இதற்காக அந்த படையிலிருந்த வீரர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி அபராதம் விதிக்கக்கோரி எலிஸ் நகரைச் சேர்ந்தவர்கள் வற்புறுத்தினார்கள்.  போட்டிகளில் ஸ்பார்ட்டா தேசத்தவரை பங்கேற்க அனுமதிக்கக்கூடாது என்றும் வற்புறுத்தினார்கள். 

ஒலிம்பிக் போட்டிகள் மட்டுமே மிகமுக்கியமானது என்று கருதக்கூடாது.  இந்தப் போட்டிகள் தொடங்கி நடைபெற்றுக்  கொண்டிருந்த சமயத்தில் வேறு மூன்று முக்கியமான போட்டிகளும் நடைபெற்றன. 

கோரிந்த்தில் இஸ்த்மியான் விளையாட்டு போட்டி, டெல்பியில் பிதியான் விளையாட்டுப் போட்டி, நேமியாவில் நேமியன் விளையாட்டுப்போட்டி என்று மூன்று போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

இவை இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை அல்லது நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். 

ஆனாலும் இந்தப் போட்டிகள் தொடங்கப்படுவதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியதால் அது மிக பிரபலமான போட்டியாக கருதப்பட்டது. 

ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெரும் வீரர்களுக்கு சிலைகள் எழுப்பப்படுவது வழக்ககாக இருந்தது.  அந்தச் சிலைகளின் அடியில் அவர்களைப் பற்றி குறிப்புகள் எழுதி வைக்கப்பட்டுள்ளன.  ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெரும் ஒரு வீரர் மற்ற மூன்று போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி பெற்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

பாலிக்கிள்ஸ் என்ற வீரர் ஒலிம்பிக் போட்டிகளில் நான்கு குதிரைகள் பூட்டிய சாரட் பந்தயத்தில் வெற்றி பெற்றார்.  அவருக்கு ஒலிம்பியா கிராமத்தில் சிலை எழுப்பப்பட்டது.  இவர் பிதியா, இஸ்த்மஸ், நேமியா ஆகிய போட்டிகளிலும் சாரட் பந்தயத்தில் வெற்றி பெற்றவர் என்று சிலையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஒலிம்பிக் போட்டிகள் மிகப் பிரபலமாக இருந்தாலும் தொடக்க காலத்தில் கிரேக்கர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும்.  கிரேக்கராகப் பிறந்த ஆண்களில் சிறுவர்களுக்கு என்று தனிப்பிரிவும் ஒதுக்கப்பட்டிருந்தது. 

ஆண்கள் பிரிவு, சிறுவர் பிரிவு என்று இரண்டு பிரிவுகளை ஏற்படுத்தி ஒருவரின் உடல் அளவு வயதிற்கு தகுந்த பலம் ஆகியவை அடிப்படையில் இந்தப் பிரிவுகளில் நடுவர்கள் சேர்ப்பார்கள். 

பெண்கள் போட்டிகளில் பங்கேற்க முடியாது.  பார்வையாளராகவும் அனுமதியில்லை.  அதே சமயம் சாரட் உரிமையாளராகவோ, குதிரை உரிமையாளராகவோ இருந்தால் அந்தப் பெண்கள் பந்தயத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.  அவர்கள் நேரடியாக பந்தயத்தில் பங்கேற்க முடியாது. 

பொதுவாகவே சாரட் உரிமையாளர்கள் யாரேனும் ஒருவரைக் கொண்டு சாரட் பந்தயத்தில் பங்கேற்பார்கள்.  சாரட் ஓட்டுகிறவர் வெற்றி பெற்றவராக கருதப்படமாட்டார்.  சாரட் உரிமையாளருக்கு ஆலிவ் இலை கிரீடம் சூட்டப்படும். 

இந்த வகையில் சிலப்போட்டிகளில் பெண்களும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.   ஒலிம்பிக் சாரட் போட்டியில் வெற்றி பெற்ற முதல் பெண்மணி மாசிடோனியாவைச் சேர்ந்த பெலிஸ்டிச் என்று பவுசானியா குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் ஒலிம்பிக் போட்டிகளில் தனிப்பட்ட முறையில் பங்கேற்க அனுமதியில்லை.  அதிலும் திருமணமான பெண்கள் ஒலிம்பிக் போட்டி வளாகத்திற்குள் நுழையவே கூடாது.  அப்படி நுழைந்தால் மரண தண்டனை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  பெண்களிலும் கன்னிப் பெண்கள் மட்டுமே போட்டிகளை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். 

இதையெல்லாம் மீறி கல்லிப்பெட்டெய்ரா என்ற பெண் தனது மகனின் விளையாட்டை கண்டு ரசிப்பதற்காக மாறுவேடத்தில் விளையாட்டு அரங்கிற்குள் நுழைந்த கதையை பவுசானியா எழுதியுள்ளார்.

“அவள் ஒரு விதவைப் பெண்.  ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளரைப் போல தன்னை உருமாற்றிக் கொண்டவர்.  சிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாகவும் இருந்தார். பெய்சிரோடஸ் என்ற தனது மகனை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க செய்வதற்காக அழைத்து வந்தார்.  அவனும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றான்.  பயிற்சியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து தனது மகன் வெற்றி பெற்ற மகிழ்ச்சியை துள்ளி குதித்து கொண்டாடினாள் கல்லிப்பெட்டெய்ரா.  இந்தச் சமயத்தில் அவள் ஒரு பெண் என்பதை சுற்றியிருந்தவர்கள் அறிந்து கொண்டனர்.  ஆனாலும் அவளுக்கு தண்டனை வழங்கப்படவில்லை.  அவளுடைய அப்பா, சகோதரர்கள் மற்றும் இப்போது அவளுடைய மகன் ஆகியோர் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றியாளர்களாக வந்திருந்தனர்.  எனவே அவளுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.  எனினும் அப்போதிருந்து அரங்கிற்குள் வரும் பயிற்சியாளர்கள் தங்கள் உடைகளை கலைந்த பிறகே பயிற்சியாளர்கள் பகுதிக்கு செல்ல முடியும் என்று சட்டம் இயற்றப்பட்டது.”

பவுசானியாவின் இந்த பதிவு ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் நடத்தப்பட்ட விதத்திற்கு சான்றாக  அமைந்துள்ளது.  புராதன கிரேக்க நாட்டில் பெண்களுக்கென்று தனியாக தடகளப் போட்டிகள் நடைபெற்றிருந்தன.  கிரேக்க பெண் தெய்வமான ஹீராவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கன்னிப் பெண்கள் பங்கேற்கும் ஓட்டப் பந்தயங்கள் நடத்தப்பட்டன.  இந்தப் பந்தயங்கள் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடத்திலேயே நடத்தப்பட்டன.  சிறுமிகள், டீன்ஏஜ் பெண்கள், இளம்பெண்கள் என்று மூன்று பிரிவுகளாக இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன.  இவர்கள் ஓடும் தூரம் ஆண்களுக்கு ஒதுக்கப்பட்ட 192 மீட்டர் என்பதற்கு பதிலாக 160 மீட்டர்கள் என்று குறைக்கப்பட்டிருந்தது.  இதில் வெற்றி பெரும் பெண்களுக்கும் ஒலிம்பிக் போட்டிகளைப் போலவே ஆலிவ் இலை கிரீடம் சூட்டப்படும். 

தடகளப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதம் மிகவும் முக்கியமானது.  புராதன கிரேக்கத்தில் கல்வி கற்பிக்கும் போதே தடகள விளையாட்டுகளிலும் பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம்.  மனதையும், உடல் ஆரோக்கியத்தையும் பேணி பாதுகாப்பதற்கு உடலை உறுதி செய்வது மிகவும் முக்கியமானது என்று கிரேக்கர்கள் நம்பினர். 

கிரேக்க சமுதாயத்தில் ஆண்கள் அனைவரும் கட்டாய ராணுவ சேவையில் ஈடுபடவேண்டும்.  இதற்கு உடல் பயிற்சிகள் அவசியம்.  கிரேக்க அறிஞரான பிளாட்டோ தனது கல்வித் திட்டத்தில் இது குறித்து இளைஞர்களுக்கு தெளிவான வரைமுறைகளை வகுத்துள்ளார்.  ராணுவ ஆற்றலை தடகள விளையாட்டுகள் மேம்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  எனவே கிரேக்க இளைஞர்கள் மல்யுத்த பயிற்சிப் பள்ளியில் கட்டாயமாக பயிற்சி பெற விரும்பினர்.  இவர்களில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க விரும்பாதவர்களும் இருந்தனர்.  பலேஸ்த்ரா என்று அழைக்கப்பட்ட இந்த மல்யுத்தப் பயிற்சிப் பள்ளிகள் கிரேக்க நாட்டைச் சேர்ந்த அனைத்து வயது ஆண்களும் சந்திக்கும் மையமாக திகழ்ந்தனர்.  பிளாட்டோவின் தத்துவ வார்த்தைகளை இவர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டனர். 

தடகள பயிற்சியாளர்கள் தங்கள் கைகளில் நீண்ட குச்சிகளை வைத்திருந்தனர்.  பயிற்சிகளின் போது தடகள வீரரின் தவறான உடல் அமைப்பை குச்சிகளைக் கொண்டு சரி செய்தனர்.  பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீரர்களை உணவு முறை மற்றும் உடற்பயிற்சி வகைகளை பயிற்சியாளர்கள் மிக உன்னிப்பாக கண்காணித்தனர்.  மனதை அமைதியான நிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்பதை கிரேக்கர்கள் உணர்ந்திருந்தனர்.  தடகளப் பயிற்சியில் ஈடுபடும் வீரர்கள் புல்லாங்குழல் இசைத்து தங்கள் மனநிலையை சமப்படுத்திக் கொண்டனர். 

பயிற்சிகள் முடிந்தவுடன் தங்கள் உடலில் எண்ணெய் தடவி குளிப்பதை வீரர்கள் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.  ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ஒலிம்பியா கிராமத்திற்கு வீரர்கள் வந்துவிடவேண்டும்.  அங்கு அவர்கள் தொடர்ச்சியான பயிற்சிகளில் ஈடுபடவேண்டும் என்று கண்டிப்பான நடைமுறை பின்பற்றப்பட்டது.  

இப்போது ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றால் கூட அந்த வீரரை சம்பந்தப்பட்ட நாட்டினர் ஏராளமான பரிசுகளை அறிவித்து உற்சாகப்படுத்துகின்றனர்.  தொடக்க காலத்தில் இதெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத விசயங்களாக இருந்தன.  போட்டியில் வெற்றிபெறும் வெற்றியாளருக்கு ஆலிவ் இலையால் செய்யப்பட்ட கிரீடம் மட்டுமே சூட்டப்படும்.  அவருடைய கையில் ஆலிவ் மரக்குச்சி ஒன்று வழங்கப்படும்.  இதைத்தவிர வெற்றிபெறும் வீரருக்கு ஒலிம்பியா கிராமத்தில் சிலை எழுப்பப்படும்.

பணப் பரிசுகள் எதுவும் கிடைக்காது.  ஆனால் வெற்றி பெற்ற வீரருக்கு அவருடைய சொந்த ஊரில் மிகப்பெரிய கவுரவம் வழங்கப்படும்.  கிரேக்க பேரரசில் வெற்றி பெற்ற வீரர் சார்ந்த சமுதாயத்திற்கு புகழும், மரியாதையும் கிடைக்கும்.  அவருடைய ஊரில் வாழ்நாள் முழுவதும் அவருக்கு பொதுச் செலவில் இலவச உணவு வழங்கப்படும்.  நாடக அரங்கங்கள் மற்றும் திருவிழாக்களில் முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்படும். 

மல்யுத்தத்தில் வெற்றி பெற்ற தனது நகரைச் சேர்ந்த வீரருக்கு உடற்பயிற்சிகூடம் ஒன்றை கட்டிக் கொடுத்தனர். 

மாறாக, இன்னொரு வித்தியாசமான வீரரைப் பற்றிய கதையும் இருக்கிறது.  குரோடோனாவைச் சேர்ந்த ஒரு வீரர் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்றார்.  இவர் சிராக்கியூஸ் என்ற நகரின் மன்னரின் கவனத்தை கவருவதற்காக  அந்த நகருக்குச் சென்றார்.  அந்த நகரைச் சேர்ந்தவராக தன்னை மாற்றிக்கொண்டார்.  பிறகு இரண்டு போட்டிகளில் அந்த நகரின் சார்பில் பங்கேற்று இரண்டிலுமே வெற்றி பெற்றார்.  இதையடுத்து குரோடோனா நகர வாசிகள் ஆத்திரம் அடைந்தனர்.  அந்த வீரர் பெற்ற வெற்றிகள் தங்களுடைய நகருக்கானது என்பதை ஏற்க மறுத்தனர்.  அந்த வீரருக்கு எழுப்பப்பட்ட சிலையை உடைத்தனர்.  அவருடைய வீட்டை சிறையாக மாற்றினர்.

ஒலிம்பிக் போட்டிகளுக்கு இப்போது பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த நடுவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.  ஆனால், தொடக்கத்தில் கிரேக்கப் பேரரசைச் சேர்ந்த நாடுகளில் இருந்துகூட நடுவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.  அனைவருமே ஒலிம்பியா கிராமத்திற்கு அருகே உள்ள எலிஸ் பிரதேசத்திலிருந்து மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  முதலில் ஓரிருவர் மட்டுமே நடுவர்களாக நியமிக்கப்பட்டனர்.  ஆனால், போட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்த பின்னர் நடுவர்களின் எண்ணிக்கை பத்தாக உயர்த்தப்பட்டது.  எலிஸ் பிரதேச நடுவர்கள் மிகவும் நேர்மையானவர்கள்.  லஞ்சம் கொடுத்து வெற்றியை விலைக்கு வாங்க முடியாது.  யாரேனும் லஞ்சம் கொடுக்க முயன்றால் அவர்கள் போட்டியிலிருந்து விலக்கப்படுவார்கள். 

ஒலிம்பியா தெய்வத்தின் முன்னிலையில் யார் லஞ்சம் கொடுக்க முயன்றாலும் அவர்கள் வீழ்ச்சி அடைவார்கள் என்ற நம்பிக்கை கிரேக்கர் மத்தியில் ஆழமாக பதிந்திருந்தது.  ஸ்மிர்னாவின் சொஸாந்தருக்கும் டொமினிக்கஸ்சின் மகன் பாலிக்டர்க்கும் இடையில் ஒரு போட்டி நடைபெற்றது.  அந்தப் போட்டியில் தனது மகன்  பாலிக்டர் வெற்றி பெற வேண்டுமென்று டொமானிக்கஸ் விரும்பினார்.  இதற்காக சொஸாந்தரின் தந்தைக்கு அவர் லஞ்சம் கொடுத்தார். 

இந்த விவரம் நடுவர்களுக்கு தெரியவந்தது.  அவர்கள் மகன்கள் மீது அபராதம் விதிப்பதற்கு பதிலாக அவர்களுடைய தந்தையருக்கு அபராதம் விதித்தனர்.  ஏனென்றால் அவர்கள் இருவரும் தான் உண்மையான பாவிகள் என்று பவுசானியா எழுதியுள்ளார். 

அபராதம் விதிப்பது சரி.  ஆனால், அது என்ன மாதிரியான அபராதம்?

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தடகள வீரர்கள், அவர்களுடைய தந்தையர் மற்றும் சகோதரர்கள், அவருடைய பயிற்சியாளர்கள் என அனைவருமே ஒரு சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளவேண்டும்.  ஒலிம்பிக் போட்டிகளுக்கு எதிராக எந்த விதமான பாவக்காரியங்களிலும் ஈடுபடமாட்டோம் என்று அவர்கள் உத்தரவாதப்படுத்தவேண்டும். பயிற்சிக்காலத்தின் போது பின்பற்றப்படவேண்டிய ஒழுங்கு முறைகளை கண்டிப்பான வகையில் பத்து மாதங்கள் நிறைவேற்றுவதாகவும் அவர்கள் உறுதியளிக்க வேண்டும்.  விளையாட்டுப்போட்டிகள் சுமுகமாக நடைபெறவும் தங்களுடைய பையன்கள் வெற்றி பெறுவதற்காக லஞ்சம் தரமாட்டோம் என்று அப்படி லஞ்சம் கொடுப்பவர்கள் பற்றிய ரகசியத்தை மறைக்கமாட்டோம் என்றும் இவர்கள் உறுதியளிக்கவேண்டும்.  இத்தகைய நிபந்தனைகள் ஒலிம்பிக் போட்டிகளின் போது பின்பற்றப்பட்டன.

இந்த விதிகளை மீறுகிறவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டது.  அதன் மூலம் வசூல் ஆகும் தொகையைக் கொண்டு ஒலிம்பிக் போட்டிகளின் பாதுகாவலளான ஜீயெஸ் கடவுளுக்கு சிலைகள் எழுப்பப்படும் என்று பவுசானியா தனது குறிப்புகளில் எழுதியுள்ளார். 

லஞ்சம் கொடுப்பது மட்டும் குற்றம் அல்ல.  வேறு சில விதிமீறல்களும் ஏமாற்று வேலைகளும் குற்றமாக கருதப்பட்டன.  தடகள வீரர் ஒருவர் மோசமான சூறாவளிக்காற்று வீசியதால் ஒரு மாத கட்டாயப் பயிற்சிக்கு தன்னால் வரஇயலவில்லை என்று காரணம் கூறினார்.  ஆனால், அவர் முன்னரே கிரீசுக்கு வந்துவிட்டார் என்றும் கிரீசின் இதர பகுதிகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று பணம் சம்பாதித்தார் என்றும் தெரியவந்தது.  அவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

இன்னொரு வீரர் தனது சக வீரர்கள் மிரட்டியதற்கு பயந்து போட்டிகளிலிருந்து விலகினார்.  இதையறிந்த நடுவர்கள் அவருடைய கோழைத்தனத்திற்கு அபராதம் விதித்தனர். 

எல்லாம் சரி.  மராத்தான் போட்டி எங்கிருந்து எப்போது தொடங்கியது?

புராதன ஒலிம்பிக் போட்டிகளில் மராத்தான் இடம் பெறவே இல்லை.  ஆனால், மராத்தான் என்பது புராதன கிரேக்க வரலாற்றில் தனி அத்தியாயமாக இடம் பெற்றுள்ளது.  கி.மு. 5ஆம் நூற்றாண்டில் கிரீஸ் மீது பெர்சியர்கள் போர் தொடுத்தனர்.  அவர்கள் மராத்தானில் முதன் முதலாக தங்களது படைகளைக் குவித்தனர்.  ஏதென்ஸ் நகரத்திலிருந்து 26மைல் தூரத்தில் இந்த மராத்தான் என்ற சிறிய நகரம் அமைந்துள்ளது. 

பெர்சியர் ராணுவத்துடன் ஒப்பிடும் போது ஏதென்ஸ் ராணுவம் மிகச்சிறியதாக இருந்தது.  எனவே  ஏதென்ஸ் நிர்வாகம் கிரீசிடமிருந்து உதவி கேட்டு தூதர் ஒருவரை  அனுப்ப முடிவு செய்தது. 

இதற்கும் மராத்தான் போட்டிக்கும் என்ன தொடர்பு? என்று கேட்ககூடும்.  ஏதென்ஸுக்கு கிரீஸ் ராணுவம் அனுப்பப்பட்டது.  கடுமையான சண்டை நடைபெற்றது.  சண்டையின் முடிவில் ஏதென்ஸ் வெற்றி பெற்றது.  மராத்தான் நகரில் ஏதென்ஸ் பெற்ற வெற்றியை ஏதென்ஸ் நிர்வாகத்திற்கு தெரிவிக்க பிடிப்பிடெஸ் என்பவர் அனுப்பப்பட்டார்.

மராத்தான் நகரிலிருந்து ஏதென்ஸ் நகரம் வரை 26 கிலோ மீட்டர் தூரத்தை நிற்காமல் ஓடி, ஏதென்ஸ் ராணுவத்தின் வெற்றிச் செய்தியை தெரிவித்தார் பிரிப்பிடெஸ்.  இதையடுத்து இந்த விளையாட்டுக்கு மராத்தான் என்று பெயரிடப்பட்டது.  இப்போதும் மராத்தான் போட்டியின் தூரம் 26 கிலோமீட்டர் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்த தூரத்தை 2 மணி நேரத்தில் வீரர்கள் கடக்கவேண்டும். 

புராதன ஒலிம்பிக் போட்டிகள் கி.மு. 776இல் தொடங்கி நான்காண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக நடைபெற்றது.  கி.பி. 393 அல்லது 394இல் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது.  ஒலிம்பிக் போட்டிகள் சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்த சமயத்தில் அதில் பங்கேற்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது. 

ஒரு கட்டத்தில் கிரேக்கப் பேரரசின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்தது.  மாறாக, ரோமப் பேரரசு எழுச்சி  பெற்றது.  அப்படியிருந்தும்கூட ஒலிம்பிக் போட்டிகள் கவுரத்தின் அடையாளமாக நீடித்தது.  ஹெலினிஸ்டிக் மற்றும் ரோம சாம்ராஜ்யங்களை ஆதிக்கம் வலுப்பெற்றிருந்த சமயத்தில் ஏற்பட்ட அரசியல், பொருளாதார மாற்றங்கள் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தடையாக இருக்கவில்லை. 

ரோமப் பேரரசர்கள் கிரேக்க கலாச்சாரத்தை பின்பற்றுவதை விரும்பினார்கள்.  அவர்கள் ஒலிம்பிக் போட்டிகளையும் அது நடைபெறும் இடத்தையும் கட்டிடங்களையும் புதுப்பித்தனர். 

ஆனால், கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் ரோமப் பேரரசர்கள் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றத் தொடங்கினர்.  அவர்கள் அதுவரை கிரேக்கர்கள் பின்பற்றிய, ரோமானியர்கள் பின்பற்றிய மதச் சடங்குகளை தடைசெய்தனர்.  கிரேக்க கடவுளர்களை வழிபடும் பண்டிகைகள் நிறுத்தப்பட்டன.  ஒலிம்பிக் போட்டிகளும் கிரேக்க கடவுளருக்கு பெருமை சேர்க்கும் விழாவாக கருதப்பட்டதால் அதையும் தடை செய்தனர்.

முதலில் போட்டிகளுக்கு உதவி செய்த மறுத்த பேரரசர்கள் அந்தப் போட்டிகளை உருக்குலைத்தனர். முதலாம் தியோடோசியஸ் பேரரசராக பதவி ஏற்றவுடன் ஒலிம்பிக் போட்டிகளை முடிவுக்கு கொண்டு வந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *