ஒரு காலத்தில இதைப் படித்தபோது கடுமையான கோபம் வந்திருக்கிறது.
‘வெடியா மொகரைக, வெளங்காத கழுதைக, உருப்படாத தடிமாடுக’ என்கிற வசவுகள்தான் வாயில் வந்தது..
‘பதினாறாம் வாய்ப்பாடு வரை மனப்பாடம் பண்ணி ஒப்புவிக்காம, மனப்பாடச் செய்யுள்களை மண்டைக்குள் தேக்கி வைக்காம, ஆங்கிலப் பொயட்ரிகளை, சம்மரிகளை, ஈக்வேஷன்களை, ஃபார்முலாக்களையெல்லாம் படித்து மனப்பாடம் செய்து நினைவுல் வைத்துக் கொண்டீர்களா? இல்லை, வசதியா மறந்துட்டுத்தான் பட்டம் வாங்கினீர்களா?
சர்வீஸ் கமிஷன், பரீட்சைக்கு பொது அறிவுப் புஸ்தகம் வாங்கி உருப்போடாமல்தான் பார்டரில் பாசாயி லஞ்சம் குடுத்து வேலைக்குப் போனீர்களா? அதெப்படி மறந்து போகும்? அத்தனை அலட்சியம்! ஆணவம்! அக்கறையின்மை!தடித்தனம்! பொறுப்பு இருந்தால் எப்படி மறந்தபோகும்?
பிடிச்ச சினிமா நடிகனோட முதல்படம் எது? அவனோட எத்தனை படங்கள் நூறு நாட்கள் ஓடியது?எந்தெந்த படங்களில் எந்தெந்த நடிகைகளோடு எத்தனை படங்களில் ஜோடியா நடித்திருக்கிறான்? எந்தெந்தப் படத்தில் அவன் நடித்த பாத்திரங்களோட பெயர்கள் என்னென்ன? அவனுடைய பெண்டாட்டி, பிள்ளைகளின் பெயர்கள், அவர்களின் வாழ்க்கை வரலாறு வரைக்கும தெளிவா, துல்லியமாகத் தெரிந்து மறக்காம ஞாபகம் வைத்திருக்கிறார்கள்.
ஆனால், ‘கரன்ட் பில்லு கட்ட இன்னைக்குத்தான் கடைசி நாள் மறக்காம கட்டீடுன்னு சொல்லி அட்டையையும், காசையும் கையில் கொடுத்து அனுப்பினால்? அதை மட்டும் மறந்துவிட்டு பொழுதோட லைன்மேன் வந்து ப்யூஸ் கட்டையப் புடுங்கீட்டுப்போன பின்னாடி, மெழுகுவர்த்தியை கையில ஏந்திகிட்டு இங்கிலீஷ் படத்துல வர்ற பேயி மாதிரி ரூம் ரூமா தடவிகிட்டு அலையும் போது வீட்டுக்கு வந்து ஏன் வீட்ல லைட் இல்லன்னு கேப்பீங்க?
போயி லைன்மேனைக் கேளு, ஏன்யா எங்க ஊட்ல பீஸ் கட்டைய புடுங்கீட்டு வந்தேன்னு? அவன் பதில் சொல்லுவான்! தனக்குத் தனக்குன்னா புடுக்கும் களை வெட்டுமாம், சுயநலம் புடிச்ச மூதேவிக’ என்று எல்லாரையும் சகட்டு மேனிக்கு வாங்கு வாங்குன்னு வாங்கின காலங்கள் நினைவலைகளில்!
கண்ணீர் மல்க காரணங்கள் சொல்லிக் ‘கைமாற்று’ வாங்கிச்சென்ற பலரும் அதன்பிறகு வசதியாக அதை மறந்து விடுவதேனோ? அதன்பிறகு அவர்களைப் பார்த்து நாம்தான் பயந்து கொண்டிருப்போம், திருப்பிக்கேட்பது எப்படியென்று தெரியாமல்!
திருமணமான புதிதில் ஒருமுறை சேலத்திலிருந்த என் மாமனார் வீட்டிற்கு சென்றிருந்தபோது திண்ணையிலமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். (தொலைக்காட்சிகள் வராத காலம்) சிறுமி ஒருத்தி வந்து ‘அக்கா! எங்கம்மா பாதாள கரண்டி வாங்கிட்டு வரச்சொன்னாங்க.’ என்றாள்.
‘என்ன வெறுங்கைய்யோட வந்து நிக்கற? போயி ‘ஈடு’ ஏதாவது எடுத்துட்டு வா?’ என்று சொல்லிவிட்டு உள்ளே போனார் என் மனைவி.
அந்தச்சிறுமியும் திரும்பிப்போய் சில நிமிடங்களில் ஒரு பித்தளைச் செம்பை எடுத்துக்கொண்டு வந்து ‘அக்க்கா…வ்!’ என்று குரல் கொடுக்க, உள்ளேயிருந்து கையில் ஒரு மாதிரியான இரும்புக் கொக்கியை எடுத்துக்கொண்டு வந்த என் மனைவி அந்தச்சிறுமியின் கையிலிருந்த செம்பை வாங்கிக் கொண்டு கொக்கியைக் கொடுத்தார்! அ
ந்தப் பொண்ணு அடிக்கடி இங்க வர்ற பக்கத்து வீட்டுப் பொண்ணுதான? கொஞ்ச நேரம் ஒரு இரும்புக் கொக்கியை இரவல் கொடுக்கறதுக்கு செம்பை அடகு வாங்கறீங்களே? அசிங்கமா இல்லையா உங்களுக்கு?’ என்றேன்!
‘ஐய்யா! கர்ண பிரபு! இந்த வீதியில பத்து வீட்டுக்கும் மேல சேந்து கெணறு இருக்கு. ஆனா, எங்க வீட்ல மட்டும்தான் பாதாள கரண்டி(கிணற்றுக்குள் பக்கெட் அல்லது கயிறு விழுந்தால் உள்ளே விட்டு எடுக்கும் ஒரு விதமான இரும்புக்கொக்கி) இருக்கு. வாங்கீட்டுப் போறவங்க, தேவை முடிஞ்ச ஒடனே வசதியா மறந்துட்டு எங்கயாவது போட்ருவாங்க. இது தெனம் பயன்படுத்தற பொருள் இல்லேங்கறதால நாங்களும் மறந்துடுவோம். அடுத்தமுறை யாராவது வந்து கொஞ்சம் ‘பாதாள கரண்டி’ குடுங்கன்னு கேக்கும்போதுதான் அதை யாரோ ஓசி வாங்கிட்டுப்போனதே எங்களுக்குத் தெரியும்! இருபது வீட்லயும் போயி எங்க வீட்டுப் பாதாள கரண்டி உங்க வீட்ல இருக்கான்னு கேக்க முடியுமா? அது நமக்குத் தேவையா? அது ஆகற வேலையா? அதுனாலதான் இந்த டெக்னிக். இப்போ இந்த சொம்பு இங்க இருக்கறதால நமக்கு கண்ணை உறுத்துமா? பாதாள கரண்டி வாங்கிட்டுப்போன கடங்காரிக்கு அவங்க செம்பு திருப்பி வேணுமா? அதனால வேலை முடிஞ்சதும் கைய்யோட வந்து கரண்டியைக் குடுத்துட்டு செம்பை எடுத்துட்டுப் போயிக்குவா. செரியா? இது மட்டுமல்ல, ஒலக்கை, சல்லடை, முருக்குப் புழியற அசசு எல்லாம் ஓசி வாங்குவாங்க! எல்லாத்துக்கும் இதே சிஸ்டந்தான், எப்புடி? காலகாத்தால வாசல்ல வெட்டியா உக்காந்துட்டு வீண் வம்புக்கு அலையாதீங்க, ம்க்கும்’ என்று ஒரு வெட்டு வெட்டி விட்டு உள்ளே போனார்! அப்போதுதான் எனக்குத் தெரிந்தது எங்க மாமியாரின் சாமர்த்தியம்! எனது ஒட்டுமொத்த சுதந்திரத்தையும் ஈடாக வாங்கிக்கொண்டுதான் தன் பெண்ணை எனக்குக் கட்டிக் கொடுத்திருக்கிறார் என்று!
போன வருசம் நவம்பர் மாதம் வங்கியில் கொடுக்க வேண்டிய லைஃப் சர்டிஃபிகேட் கொடுக்க மறந்து போச்சு! இந்த வருடம் மார்ச் மாதம் சேமிப்புக்கணக்கில் பணம் இல்லையே என்று வங்கி பாஸ் புத்தகத்தில் என்ட்ரி போட்டுப் பார்த்தபோதுதான் தெரிந்தது நான்கு மாதங்களாக பென்சன் வரவில்லையென்று! கோபமாகப் போய் வங்கி ஊழியரிடம் கேட்டபோது “ஐயா! நீங்க உயிரோட இருக்கீங்களா? இல்லையா?ன்னு பேங்குக்கு எப்படித் தெரியும்? நவம்பர் மாசம் ‘லைஃப் சர்டிஃபிகேட்’ குடுத்தீங்களா?” என்று பதில் வந்தது! மூஞ்சி தொங்கிப்போய் “சாரி ஞாபகமில்லே” ன்னு சொன்னபோது, “போங்க, போயி முன்னாடி இருக்கிற மூனாம் நவம்பர் கவுன்டடர்ல ஃபார்ம் வாங்கி ஃபில்லப் பண்ணிக் குடுங்க, பத்து நாளைக்குள்ள அரியர்ஸோட பணம் வரும்” என்று நக்கலாகச் சொன்னார்!
இப்படித்தான், போன மாசத்துல ஒரு நாள் வெளியூரில் ஒரு வேலையாகச் செல்ல வேண்டியிருந்தது. அடுத்தநாள் அதிகாலையிலேயே புறப்படவேண்டுமென்பதால் முன்னெச்சரிக்கையாக முதல் நாள் இரவே காரைக் கழுவித் துடைத்து வைக்க முடிவு செய்து வேலையில் இறங்கினேன். அடுத்த நாள் போகும்போது குடிக்கத் தண்ணீர்கூட பாட்டிலில் நிரப்பி வைத்து விட்டு படுக்கப் போகும்போது மணி பத்தரையாகி விட்டது. காரை பூட்டலாம் என்று நினைத்தபோதுதான் கவனித்தேன் கார் சாவியைக் காணவில்லை. காருக்குள், சீட்டின் சந்துகளுக்கிடையில், போர்ட்டிகோவில், எல்லா சாவிகளும் எப்போதும் மாட்டி வைக்கும் கீ ஸ்டேண்டில், தண்ணீர் பிடித்த குழாயருகில், வீட்டிற்குள்ளிருந்த டீபாய், சோபா, சோபாவின் சாய்கின்ற கழுத்துப்பகுதி, மேசை, மேசையின் இழுப்பறைகள் என வீட்டிலுள்ள இண்டு இடுக்கெல்லாம் தேடியானது. மணி பதினொன்றரையானது கார் சாவி மட்டும் கையில் கிடைக்கவில்லை. சாவியில்லாமல் காலையில் வண்டி எடுக்க முடியாதே? என்ன செய்யலாம்? பத்தாண்டுகளுக்கு முன்பு கார் வாங்கினபோது கொடுத்த ‘ஸ்பேர் சாவியை’ (நல்ல வேளையாக அது மட்டும் பீரோவில் வைத்தது நினைவிலிருந்தது) பீரோவிலிருந்து எடுத்து வழக்கமாக எல்லா சாவிகளும் மாட்டும் இடத்தில் மாட்டி விட்டு ஓய்ந்துபோய் படுக்கச் சென்றேன்! காரைக் கழுவித் துடைத்ததைவிட, சாவியைத் தேடியதில் அதிகமாகச் சோர்ந்து போனேன்! ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டுப் படுக்கலாம் என்று முடிவு செய்து வாட்டர் ஃபில்டரில் வந்து தண்ணீர் பிடிக்கும்போது வாட்டர் ஃபில்டர் வைத்திருந்த அந்த கருப்பு நிற க்ரேனைட் மேடையிலிருக்கிறது அந்த கருப்பு நிற சாவி! என்னதான் செய்வது? பாட்டிலில் தண்ணீர் நிரப்ப வந்தபோது கையிலிருந்த சாவியை மேடையில் வைத்தவன் பாட்டிலை மூடி எடுத்துப்போய் விட்டேன், அவ்வளவுதான்! மறதி ஒரு வசதி?
ஒரு நாள் மாலை ஆஃபீசிலிருக்கும்போது மனைவியிட்மிருந்து ஒரு அழைப்பு. குடும்ப நண்பரொருவர் அவரது குடும்பத்துடன் எங்கள் வீட்டிற்கு வருவதாக போனில் அழைத்துச் சொல்லியிருக்கிறார்கள். எனவே வழக்கத்தை விட அரை மணி முன்னதாக வரவேண்டுமென தாக்கீது பிறப்பிக்கப்பட்டது! நானும் அவசர் அவசரமாக வேலைகளை முடித்துவிட்டு எனது லேப்டாப், சாப்பாட்டுப் பை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு மறக்காமல் கார் சாவியையும் எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வரும்போது வீட்டில் அழைக்கிறார்கள்.
“ சொல்லு.”
“புறப்பட்டாச்சா?”
“ஆமாம், ஏன்?”
“வீட்ல சாப்பிட சிறுதீனி எதுவுமே இல்ல, அவங்க வந்தா குடுக்கணுமில்ல? கொஞ்சம் இனிப்பு காரம் எல்லாம் வாங்கிட்டு சீக்கிரமா வாங்க!”
“சரி! ஒரு நிமிசம் என்னோட போனை ரூமுக்குள்ள எங்கேயோ வெச்சுட்டேன் எடுத்துட்டு வந்தர்றேன் இரு!”
“உங்களுக்கு வேற வேலையே இல்லை, நீங்க திருந்தவே மாட்டீங்க, இங்க வீட்லதான் கண்ட பக்கம் அந்த போனை வைக்க வேண்டியது அப்பறம் வீடெல்லாம் தேட வேண்டியது அப்பறம் என்கிட்ட வந்து என்னோட போனுக்கு ஒரு கால் பண்ணுன்னு சொல்ல வேண்டியது, அப்படிப பண்ணினாலும் அது சைலன்ட மோடில் இருக்கும், இல்லேன்னா பாத்ரூமிலோ? கக்கூசிலோ? இருக்கும். அங்கயும் யாரையாவது மிஸ்டு கால் குடுக்கச் சொல்லுங்க. என்னைக்குத்தான் திருந்துவீங்களோ ? என்ன எழவோ போங்க, சீக்கிரம் வந்த தொலைங்க!”
சரி! வேற வழியில்லை, அவசரமாக திரும்ப ஆஃபீசுக்குள் நுழைந்து அடுத்த சீட் நண்பரிடம்
“சேகர்! என்னோட போனை எங்கயோ வெச்சுட்டேன், என்னோட நம்பருக்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்க என்றவுடன்,”
அவரும் பொறுப்பாக கையில் போனை எடுத்தவாறே
“ரெண்டு நிமிசம் முன்னாடி வெளிய போகும்போது பேசிட்டுத்தான போனீங்க” என்று சொல்லிக்கொண்டே என்து நமபருக்கு மிஸ்டு கால் கொடுக்க, எனது பேன்ட் பாக்கெட்டுக்குள்ளிருந்த போன்… பர்ர்ர்ர் பர்ர்ர்ரென்று உருமியது! அதை கவனித்த அவர்
”உங்களோட கூத்து சார்,” என்று தலையில் அடித்துக்கொண்டு “இடையன் ஆட்டுக்குட்டியைத் தோளில் போட்டுக் கொண்டு காடு முழுவதும் தேடினானாம், அந்தக் கதையால்ல இருக்கு” என்று சிரித்தார்!
அப்போதுதான் நினைவுக்கு வந்தது. சற்றுமுன் பொண்டாட்டிகிட்ட பேசும்போதுதான் ‘போனை ஆஃபீஸ் உள்ளே வெச்சுட்டேன், எடுத்துட்டு வர்றேன்’ என்று சொன்ன போது ‘உங்க போன்லதான நாம இப்ப பேசீட்டிருக்கோம்’னு சொல்லாம, என்னோட மறதியைப் பத்தி என்னவெல்லாம் சொல்லித்திட்டினாளே? என்ன ஒரு வில்லத்தனம்?
எல்லாவற்றையும்விட, பழகின மனிதர்களின் பெயர் மறந்துபோகும், எப்படிக்கேட்க முடியும்? பக்கத்திலிருப்பவரிடம் அவர் பெயர் என்ன என்று கேட்டால்? “என்ன ஆச்சு உங்களுக்கு? எத்தனை வருசத்துப் பழக்கம்?” என்று பரிதாபமாகப் பார்ப்பார்.
“தொண்டைக்குள்ள சிக்கிகிட்டு வெளிய வரமாட்டேங்குது
நேற்று காலை வங்கிக்குப் போக வேண்டும், இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட வேண்டும் என்று புறப்படும்போது, ஒன்றிரண்டு மளிகை சாமான்கள், காய்கறிகள் வேண்டுமென சொன்னார்கள். வங்கி வேலையை முடித்துவிட்டு பெட்ரோல் போட்டு விட்டு மளிகை சாமான் வாங்கி விட்டு செல்போன் பர்ஸ் ஸ்கூட்டர் எதையுமே மறக்காமல் பத்திரமாக வீடு திரும்பினேன்!
வழைப்பழமும் முட்டையும் வாங்க வேண்டும், மறக்கவில்லை. ராஜு மளிகைக்கடையில் வாங்கிடலாமுன்னு வந்தேன். அங்கு பழம் இல்லை பத்து முட்டை மட்டும் வாங்கி விட்டு நூறு ரூபாய் பணம் கொடுத்து முப்பது ரூபாய் பாக்கி வாங்கினபோது ஒரு பத்து ரூபாய் ரொம்ப பலவீனமாக இருப்பதாகச் சொல்லி அதற்கு பதிலாகப பத்து ரூபாய் நாணயத்தை வாங்கிக்கொண்டு அடுத்த கடைக்குப் போனேன்! அங்கேயும் வாழைப்பழம் இல்லை. பழைய நண்பன் எதிர்பட்டனிடம் கொஞ்ச நேரம் கிண்டல் பேசி விட்டு வீட்டுக்கு வந்தேன். பொறுப்பாக வாங்கி வந்த சாமானையெல்லாம் எடுத்து வைத்து விட்டு உடை மாற்றிக்கொண்டு முகநூலில் மேய ஆரம்பித்தேன்!
ஒரு துக்கம் விசாரிக்கப்போக வேண்டியிருந்தது. நண்பர் அழைத்தார். உடைமாற்றிக்கொண்டு செல்போனை எடுத்து சட்டைப்பையில் வைத்து விட்டு ‘பர்ஸ்’ சை எடுத்துச் செல்லலாம் என்று பார்த்தால் பர்ஸ்சைக் காணோம்! வழக்கம்போல வீட்டில் எல்லா இடங்களிலும் தேடியும், கக்கூஸ், பாத்ரூம், அடுப்பு மேடை எல்லாம் தேடியும் கிடைக்கவில்லை! கடைசியாக முட்டை வாங்கிகொண்டு நூறு ரூபாய் கொடுத்து முப்பது ரூபாய் சில்லரை வாங்கினது (கிழிந்த நோட்டுக்கு பதிலாக வாங்கிய அந்த பத்து ரூபாய் நாணயம் பத்திரமாக உள்ளது) பர்ஸ்சை மட்டும் காணவில்லை!
அந்த பர்ஸ் ‘Police’ என்கிற தரமான ப்ரான்ட்! ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு துபாய் மாலில் இரண்டாயிரம் ரூபாய் விலை கொடுத்து வாங்கினது. மிகவும் ராசியான பர்ஸ்! எப்படியென்றால் பலமுறை கை மறதியாக வைத்து விட்டுத் தேடும் போது திரும்பக் கிடைத்து விடும்! (அதில் எப்போதுமே பணம் இருந்து கொண்டேயிருக்கும் என்கிற மூடநம்பிக்கை எனக்கில்லை) ஆனால் இன்று என்னவோ திரும்பக் கிடைக்கவில்லை! எவ்வளவு மண்டையை உடைத்துக்கொண்டு யோசித்தும் எங்கே தொலைந்தது என்பது நினைவுக்கு வரவில்லை! உள்ளே இரண்டு ஐநாறும் ஒரு இருநூறும் நூறு இருபது ஒவ்வொன்றும ஆக மொத்தம் ரூபாய்1320/- போயிந்தே, போயே போச்சு! Its gone. முட்டை வங்கிவிட்டு நூறு ரூபாய் கொடுத்த பிறகு- துக்க வீட்டிற்கு புறப்பட முடிவு செய்து பர்ஸ்சைத் தேடற் வரைக்கும் என்ன நடந்ததுன்னு இன்னும் எனக்குப் புரியவே இல்லை! ‘நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’
மனசு ஆறவே இல்லை! லட்ச ரூபாய் செலவழித்தால் கவலை இல்லை, நூறு ரூபாய் தொலைத்தால் அங்கலாய்ப்பாக இருக்கும்! அதற்காக துக்க வீட்டிற்குப் போகாம இருக்க முடியாதே? இதில் ஒரு பெரிய நிம்மதி, இரண்டு நாட்களுக்கு முன்புதான் பர்ஸ்சிலிருந்த ‘மூன்று ஏடிஎம் கார்டுகளை’ எடுத்து பீரோவில் வைத்தேன்!
துக்க வீடட்டிற்குச் சென்றபோது அவ்வளவு கூட்டத்திலும் இறந்தவரின் சகோதரர், நான் போய் ஆறுதலுக்கு கரங்களைப் பற்றியபோது என் தோள்களில் சாய்ந்துகொண்டு குலுங்கி அழுதார் அணைத்துக்கொண்ட எனது கண்களிலும் கண்ணீர் பெருகியது, ஏனெறால் அது ஒரு விபத்தினால் நிகழ்ந்த அகால மரணம்! இடுகாடு போய் வீட்டிற்குத் திரும்பி வரும் வரையில் பர்ஸ்சை மறந்திருந்தேன். வீட்டிற்கு வந்ததும் மீண்டும் குரங்கு மரமேறியது! பர்ஸ்சோடு சேர்ந்து 3 ஏடிஎம் கார்டுகளும் போகலைன்னு சந்தோஷப்படுடா என்று புத்தி சொல்லுச்சு!
உடமையோ? உயிரோ? எதுவாகிலும் இழந்தபின் புலம்பி எதுவும் ஆகப்போவதில்லை! எதுவும் கடந்து போகும்!
ஆகவே மறதி ஒரு வசதிதான்!



